

எனது இரண்டாவது மகன் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக உள்ளான். அதனால் அவனை விளையாட்டில் ஊக்குவிக்கவுள்ளேன். அல்லது விளையாட்டு பயிற்சியாளராக ஆக்கவுள்ளேன். அதற்கு என்ன படிக்க வேண்டும்.
-கருப்புசாமி, இளையான்குடி, இராமநாதபுரம்.
குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்தி உரிய பயிற்சியளித்தால் அதன் வழி நல்ல பல்கலைக்கழகங்களில் படிப்பு மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சேர்க்கை மூலம் வேலை வாய்ப்புப் பெறலாம்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் உலக அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவது சற்றுக் குறைவே. ஆனால், தற்பொழுது நிலை மாறி நிறைய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றன.
விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க ஏதுவாக பி.எஸ்சி. ஸ்போர்ட்ஸ் கோச்சிங் என்கிற மூன்று வருட பட்டப்படிப்பினை சென்னையிலுள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி 1 வருட முதுகலை பட்டயப் படிப்பாகவும் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் இங்கு வழங்கப்படுகிறது.
இது தவிர மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அங்கமான நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் ஒரு வருட ஸ்போட்ஸ் கோச்சிங் படிப்பினை பாட்டியாலா, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்கத்தா ஆகிய இடங்களில் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் வழங்குகிறது. உங்களின் வசதிக்கேற்ப பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.