

உதய்பூரிலிருந்து கும்பல்கர் கோட்டை, புல்லட் பாபா கோயில் எல்லாம் பார்த்துவிட்டு ஒரு நீண்ட பைக் பயணத்துக்குப் பிறகு நள்ளிரவில் ஜோத்பூர் வந்தடைந்தோம். சின்ன சின்ன வீடுகள், குறுகலான தெருக்கள், தெரு நெடுக வண்டிகள், தெருவுக்குத் தெரு கோயில்கள் என ஜோத்பூர் நகரின் முதல் தரிசனம் இப்படித்தான் இருந்தது.
ஜோத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. மார்வார் ராஜ்ஜியத்தின் தலைநகரமாக திகழ்ந்தது. அரண்மனைகள், கோட்டைகள் என ராஜஸ்தானுக்கு உரிய கம்பீரத்தோடு இருந்தது. இங்குள்ள பெரும்பாலான வீடுகளின் சுவர்களும் வீட்டின் மேற்கூரைகளும் நீலநிறத்தில் இருக்கின்றன.
ஜோத்பூர் நகரின்உயர்ந்த கட்டடங்களிலிருந்து பார்த்தால் மொத்த நகரமும் நீல நிறத்தில் தோன்றுகிறது. இதனால் இந்தியாவின் ‘நீல நகரம்’ என்றே ஜோத்பூர் அழைக்கப்படுகிறது.
நீல நகருக்குள் உலா: இந்த நீல நிறத்துக்கு சில காரணங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் தங்கள் வீடுகளுக்கு நீல நிற வர்ணம் பூசுவதாகச் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கும் தார் பாலைவனத்தின் வெப்பக்காற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நீல நிறத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.
கொசு மற்றும் பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் இருக்க நீல நிறம் பயன்படுவதாகச் சிலர் கூறுகிறார்கள். நீல நிற வீடுகளைப் பார்க்கவும், அந்த வீடுகளின் வாசல்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்க்கவும் வெளிநாட்டினர் அதிகம் வருகிறார்கள். 'Blue City walk' என்ற பெயரில் இந்த ஓவியங்களைக் காண உள்ளூர் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
ஜோத்பூரின் இன்னொரு அடையாளம் மெஹ்ரன்ஹர் கோட்டை. மலை உச்சியில்1200 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த கோட்டை ராஜபுத்திரர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த கோட்டை அருங்காட்சியகமாக இருக்கிறது. அதுபோல ஜோத்பூர் மக்களின் கலை நயத்தை வெளிப்படுத்தும் வணிக இடமாகவும் இருக்கிறது. 15ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையை அதன்பிறகு வந்த மன்னர்கள் விரிவுபடுத்தி மேலும் பிரம்மாண்டமாக்கி இருக்கிறார்கள்.
‘Blue City walk' போவதற்கும் இந்தமெஹ்ரன்ஹர் கோட்டையை ரசிப்பதற்காகவும் அதன் அருகிலேயே அதேபோல ஒரு நீல நிற வீட்டில் அரை எடுத்துத் தங்கினோம். இதுபோல பல வெளிநாட்டினரும், மற்ற மாநிலத்தவர்களும் தங்கி இருந்தது ஒரு கலாச்சார பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்தது.
சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு நீல நிற ஓடுகளில் படும்சூரியக்கதிர்களைப் பார்க்க அத்தனைரம்மியமாக இருந்தது. அதுபோல ‘BlueCity walk' செல்ல காலையிலேயே கிளம்பினோம். மெஹ்ரன்ஹர் கோட்டையின் பின்பகுதியில் ஐந்து கிலோமீட்டர் அளவுக்கு அங்குள்ள வீடுகளில் ராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு இருந்தது.
இசை வழியும் கிணறு: அடுத்து தூர்ஜிகா ஜால்ராவுக்குச் சென்றோம். இது தோர்ஜி என்று அழைக்கப்படும் படிக்கிணறு. 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கிணறு பூமிக்கு அடியில் 200 மீட்டருக்கு கீழே செல்கிறது. இந்த கிணற்றின் மேலிருந்து குதித்து விளையாடுவது ஆபத்தானது போல் இருக்கிறது. ஆனால் இங்குள்ள சிறுவர்கள் அதை சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பழமையான இசைக்கருவியாக ராவணஹதாவை அங்கிருந்த ஒரு இசைக்கலைஞர் வாசித்துக்கொண்டிருந்தார். அந்த கிணற்றுப் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு மணிக்கணக்கில் ராவணஹதா இசையைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வயலின் போன்று இருக்கும் இந்த இசைக்கருவியை, சிவனை வழிபட ராவணன் வாசித்தாக சொல்லப்படுகிறது. இந்த இசைக்கருவியை அனுமன் இலங்கையிலிருந்து கொண்டுவந்ததாக இந்த மக்கள் நம்புகிறார்கள்.
ஜோத்பூரில் நாம் தவறவிடக்கூடாத மற்றொன்று இனிப்புகள். கொல்கத்தாவுக்கு நிகராக இங்கு அதிக அளவில் இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. ஜோத்பூர் புது அனுபவத்தைக் கொடுத்தது. பழமையான நகரில்பழமையோடு பழமையாக வாழ்ந்த உணர்வைத் தந்தது.
-கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com