

புகழ்பெற்ற வங்கப் படைப்பாளிகளுள் ஒருவரும் தலைசிறந்த வங்க மொழி அறிஞருமான சரத் சந்திர சட்டோபாத்தியாய (Sarat Chandra Chattopadhyay) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கிழக்கு வங்காளத்தில் ஹூக்ளியில் தேபநந்புரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்தார் (1876). மிகவும் துணிச்சலான, சாகசத்தை விரும்பும் சிறுவனாக இருந்தார். பல பாடசாலைகளில் பயின்றார்.
# தன்னை ரவீந்திரநாத் தாகூரின் சீடராகவே கருதிக்கொண்டார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாகப் பள்ளிப் படிப்புக்குப் பின்னர் கல்லூரியில் சேர முடியவில்லை. பின்னர் தன் நண்பர்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் இவரது புகழ்பெற்ற பல நாவல்களும் கதைகளும் வெளிவந்தன.
# 1903-ல் பர்மா சென்றவர், ரங்கூனில் அரசு குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பின்னர் பர்மா ரயில்வேயில் கணக்கராகத் தற்காலிகமாக வேலை பார்த்தார். அங்கே 13 ஆண்டுகள் வேலை செய்தார். 1916-ல்ஹவுரா திரும்பினார்.
# பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கதைகள் எழுதினார். அனிலா தேவி, அனுபமா என்னும் பெயர்களிலும் தன் சொந்தப் பெயரிலும் எழுதிவந்தார். 1921, 1936 ஆண்டுகளில் ஹவுரா மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். அப்போது நடைபெற்று வந்த சுதந்திரப் போராட்ட இயக்கம் குறித்தும் தனது படைப்புகளில் எழுதினார்.
# இவரது பெரும்பாலான படைப்புகளில் மக்களின் வாழ்க்கைபாணி, சோகம், கிராம மக்களின் வாழ்க்கைப் போராட்டம், அந்த சந்தர்ப்பத்தில் நிலவிய சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தன. எளிய, ஆனால் வலுவான கதாபாத்திரங்கள் மூலம் தனது கருத்துகளை, சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.
# பால்ய ஸ்மிருதி’, ‘பிலாஷி’, ‘காஷிநாத்’, ‘ஹரிலக்ஷ்மி’, ‘பரிணீதா’, ‘பிராஜ் பாபு’, ‘ஸ்வாமி’ உள்ளிட்ட சிறுகதைகள், ‘தேவதாஸ்’, ‘நிஷ்க்ரிதி’, ‘பதேர் தபி’, ‘சேஷ் பிரஷ்ன’, ‘பிப்ரதாஸ்’, ‘பிராஜ்போவு’, ‘சந்திரநாத்’, ‘ஸ்ரீகாந்தா’ உள்ளிட்ட நாவல்கள் வங்க இலக்கியத்தை வளம்பெறச் செய்ததோடு இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
# சக இலக்கியவாதிகளால் போற்றப்பட்ட இணையற்ற படைப்பாளியாக விளங்கினார். இந்தியா முழுவதிலும் இருந்த இலக்கியவாதிகள் இவரது படைப்புகளை வங்க மொழியிலும் மொழிபெயர்ப்பிலும் ஆர்வத்துடன் வாசித்தனர்.
# ‘பிஜோயா’, ‘ராமா’, ‘ஷோரோஷி’ ஆகிய மூன்று படைப்புகளை இவரே நாடக வடிவில் மீண்டும் எழுதினார். ‘நாரீர் முல்யா’, ‘ஸ்வதேஷ் ஓ சாஹித்ய’, ‘தருணெர் பித்ரோஹோ’ ஆகியவை இவரது கட்டுரை நூல்கள்.
# ஏறக்குறைய 50 படைப்புகள் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்களாகத் தயாரிக்கப்பட்டன. ‘தேவதாஸ்’ என்னும் கதை கடந்த 60 ஆண்டுகளில் பல மொழிகளில் பல வடிவங்களில் பலமுறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலான படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. காலத்தால் அழியாத இந்தக் காவியக் காதலை எழுதியபோது இவருக்கு வயது 17.
# ‘மந்திர்’ என்ற நாவலுக்காக 1904-ம்ஆண்டு குண்டலின் புரஸ்கார் விருதைப்வென்றார். டாக்கா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 20-ம் நூற்றாண்டின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவராகப் போற்றப்பட்ட சரத் சந்திர சட்டோபாத்தியாய 1938-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி மறைந்தார்.