

தேர்வு என்றாலே பதற்றமும் பயமும் குழந்தைகளை விட பெற்றோருக்கு அதிகமாகி விடுகிறது. குழந்தைகள் மட்டுமே தனியாக அமர்ந்து படித்த காலம் மலையேறிவிட்டது. பெற்றோரும் குழந்தைகளோடு முதல் வகுப்பில் இருந்தே உடன் படிக்கின்றார்கள். கற்றல் என்பது மகிழ்ச்சியானதாக இல்லாமல் சுமையாக மாறிக்கொண்டு வருகிறது. தேர்வு தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே தேர்வு காய்ச்சல் வந்துவிடுகிறது.
தேர்வுக்குப் படிக்கும்போது நிறையவிசயங்களைப் பெற்றோரும் மாணவர்களும் மனதில் கொள்ள வேண்டும். படிக்கின்ற அறை, மாணவர்களின் மனநிலை, உடல்நிலை என அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் அதிகாலையில் எழும்போது குழந்தைகளுக்கு காபி, டீ குடிக்க கொடுக்க கூடாது.
பொதுவாக தேர்வு நடைபெறும் நாட்கள் வேனிற்காலம் என்பதால் வெய்யில் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் போதுமான அளவு குடிக்காமல் இருக்கும்போது, தலைவலி வரவும் வாய்ப்பிருக்கிறது. செயற்கை பாணங்களுக்குப் பதிலாக மோரும், இளநீரும் பருக ஊக்கப்படுத்துங்கள். இளநீரில் உள்ள சத்துகள் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
தேர்வுக்கு முன் உணவு: பால் போன்ற மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். நீர்ச்சத்துள்ள பழங்கள் ஆரஞ்சு திராட்சை எடுத்துக் கொள்ளலாம். புரதசத்து உணவுகளான மீன், முட்டை, கோழிக்கறி போன்ற உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். கீரை வகைகள், நட்ஸ் வகைகள், தயிர் போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு வகைகள் ஆகும். நொறுக்குத் தீனிகளை முற்றிலுமாக தவிர்த்தல் உடலுக்கு நல்லது. பழச்சாறுகளைக் குடிப்பதற்கு பதில் பழங்களாகவே சாப்பிடலாம்.
தினமும் எலுமிச்சை சாறு குடித்துவரலாம். அதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தேர்விற்கு செல்ல வேண்டும் என்கிற பதற்றத்தில் சாப்பிடாமலே மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதும் தவறு. அதிகமான எண்ணெயிலான உணவுப்பொருட்கள் நொறுக்குத்தீனிகள் உடலுக்கு கேடு விளைவிக்கும். அதுபோல உணவு சாப்பிடாமல் செல்வதும் கெடுதலை ஏற்படும். தலைவலியை உண்டாக்கும்.
தேர்வு நேரங்களில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு எளிதில் செரிமானம் ஆகக் கூடியதாக இருக்க வேண்டும். இரவில் தூக்கத்தை வரவழைக்க கூடிய உணவை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தோசை, இட்லி, இடியாப்பம் சிறந்த உணவாக இருக்கும்.
பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள் சாறு வகைகளுக்குப் பதிலாக மாலை நேரத்தில் அவற்றை சிறு சிறு துண்டுகளாக கொடுக்கலாம். தினமும் ஒரு வாழைப்பழத்தை கொடுக்கலாம். தேர்வின்போது இரண்டிலிருந்து மூன்றுமணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுதுவதால் கை, கால் சோர்ந்துபோகும். பொட்டாசியம் சத்து குறைவினால் இந்நிலை ஏற்படும். அதனால் மாணவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு சென்றால் சோர்வில்லாமல் எழுத முடியும். சீசன் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நினைத்ததை அடைய முடியும் .
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூா் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com