மாறட்டும் கல்விமுறை - 13: மீன்களை ரசித்து வாசிப்பில் லயித்த சிறுமி!

மாறட்டும் கல்விமுறை - 13: மீன்களை ரசித்து வாசிப்பில் லயித்த சிறுமி!
Updated on
2 min read

நீங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வயதிருக்கும்போதே புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரா? நீங்கள் குழந்தைகளுடன் ஒருமணிநேரமாவது செலவழிக்கிறீர்களா? குழந்தைகளுக்கேற்ற புத்தகங்களைத் தேடித்தேடி வாங்குபவரா? கீழ்க்கண்ட குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

வயதுக்கு ஏற்ற புத்தகங்கள்: குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் புத்தகங்கள் வண்ணப்படங்களுடன் பளபளத்தாளில் இருக்க வேண்டும். படங்கள் பெரியவையாகவும் உணர்ச்சி வெளிப்பாட்டைக் காட்டக் கூடியவையாகவும் இருக்க வேண்டும். வாசிப்புப் பகுதி குறைவாகவும் எளிமையான வாக்கிய அமைப்புடனும் இருக்க வேண்டும்.

விலங்குகள், பறவைகள் போன்றவை கதைமாந்தர்களாக இருக்க வேண்டும். கற்பனை கலந்த கதையாக இருக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கை பக்கங்களில் ஒரு கதை முடிய வேண்டும். இப்படி இருக்கும் புத்தகங்களை நாம் வாசகர்களின் வயதுக்கேற்ற புத்தகங்கள் (age appropriate books) என்கிறோம்.

அனுபவத்துக்கு ஏற்ற புத்தகங்கள்: எனது நண்பர் வேலவன் தனது அனுபவத்திலிருந்து ஒரு புதிய கருத்தை முன்வைத்தார். தன்னுடைய மகள் தேவலேகாவுக்குப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தியபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. எல்லாக் குழந்தைகளுக்கும் மீன்தொட்டிகளைப் பார்க்கப் பிடிக்கும். தேவலேகாவுக்கு் கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். மீன்தொட்டிகளில் நீந்தும் மீன்களைக் கண்கொட்டாமல் பார்ப்பாள்.

எங்கெல்லாம் மீன்களைப் பார்க்கிறாளோ அங்கிருந்து அவளை இழுத்துப் பிடித்துத்தான் கொண்டு வரவேண்டும். அவ்வளவு ஆர்வம். வரும் வழியில் மீன்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். வேலவனும் அவருடைய மனைவியும் இதைப் புரிந்துகொண்டு சிறு குளங்கள், ஆறுகள் போன்றவற்றுக்கு அடிக்கடி அவளை அழைத்துச் செல்வார்கள். மீன்பிடித்து மீண்டும் ஆற்றில்விடுவார்கள். காலில் கடித்துக் கிச்சுக் கிச்சு மூட்டும் மீன்களை ரசிப்பார்கள். மீன்கள் அவளைச் சுற்றி நீந்திக்கொண்டே இருந்தன.

அப்போதுதான் வேலவன் தன் மகளுக்குபுத்தகங்களை அறிமுகம் செய்ய நினைக்கிறார். அவர் அறிமுகம் செய்த புத்தகங்களுள் யதேச்சையாக மீன்களைப் பற்றிய புத்தகமும் இருந்தது. அதைத்தான் குழந்தை முதலில் கையில் எடுத்தாள். படபடவென பக்கங்களைப் புரட்டினாள்.

படங்களைக் கூர்ந்து பார்த்தாள். அடியில் எழுதியிருக்கும் குறிப்புகளை வாசித்துக் காட்டும்படி கேட்டாள். அப்படி வாசிப்பு தொடங்கியது. அவளுடைய ஆர்வத்தின் அடிப்படையில், அவளுடைய தேவையின் அடிப்படையில் வாசிப்பு தொடங்கியது.

தனக்குப் பிடித்த ஒன்றைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ள விருப்பம் காட்டுவது குழந்தைகளின் இயல்பு. மீன்கள் அல்லாமல் வேறு கதைமாந்தர்கள் வரும் புத்தகங்களையும் வேலவன் வாசித்துக் காட்டுவார். அவற்றையும் குழந்தை கேட்கிறது. ஆனால், மீன்களைப் பற்றியபுத்தகம் வரும்போது ஆர்வம் கொப்பளிக்கிறது. கண்களில் ஓர் ஒளி தெரிகிறது. மீண்டும் மீண்டும் அப்புத்தகத்தை வாசித்துக் காட்டும்படி வற்புறுத்துகிறாள். உறங்கும்போது மீன்களைப் பற்றிய புத்தகமொன்றை அணைத்தபடி உறங்குவாள்.

இதைக் கூறி முடித்த வேலவன் அந்த அனுபவத்தை ஓர் கருத்து வாக்கியமாகக் கூறினார். அது முத்தாய்ப்பு வாக்கியமாக இருந்தது. “Age appropriate books என்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் experience appropriate books என்பதும் முக்கியம்” என்பதே அந்த வாக்கியம்.

வெறும் சொல் அல்ல: குழந்தைகளைப் பேச விட வேண்டும், அவர்களின் அனுபவங்களோடு தொடர்புடைய சொற்களை முதலில் வாசிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அவற்றைத்தாம் முதலில் எழுதும்படி சொல்ல வேண்டும் என்று கல்வி வல்லுநர்கள் வலியுறுத்துவதற்கு இதுவே காரணம்.

தேவலேகாவைப் பொறுத்தவரை மீன் என்பது வெறும் ஈரெழுத்துச் சொல் அல்ல. அது ஓர் உணர்வு. அதுவரை கிடைத்தஅனுபவங்களின் திரட்சி. வாசிப்பைத் திணிக்காமல் இயல்பாக நடக்க வேண்டுமானால், வாழ்நாள் முழுவதும் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் இந்தக் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in