

காலாண்டு தேர்வு முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு வர சித்தப்பா, பெரியப்பா, மாமா பசங்களோட சேர்ந்து குடும்பமா ஊட்டிக்கு டிரிப் போகப்போறோம் டாக்டர். கசின்ஸ் எல்லாரும் ஒன்னா ஃபர்ஸ்ட் டைம் ஊட்டிக்குப் போறோம்ங்கறது செம ஹேப்பியா இருக்கு. ஆனா, டிராவல் பண்ணாலே எனக்கு பயங்கரமா வாமிட்டிங் வரும். எனக்காக வண்டியை நிப்பாட்டிட்டே இருக்கணும். அதை நினைச்சாலே பயம்மா இருக்கு. கசின்ஸ் எல்லாம் கேலி பண்ணுவாங்கங்கறதை விட, என்னால அவங்களோட டிரிப் மூடும் கெடுமேன்னு நினைக்கறப்ப இந்த டிரிப் போகணுமான்னு வேற தோணுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி வருது டாக்டர்? இதனால பாதிப்பு எதுவும் வருமா? டிராவல்ல வாமிட் வராம இருக்க மருந்து அல்லது ஸ்பெஷல் டயட் எதுவும் இருக்கா?
- பிளஸ் 1 பயிலும் வர்ஷாவின் கேள்விகள் இவை.
வர்ஷா சொல்வதும் உண்மை தானே.கசின்ஸ் அனைவரும் ஒன்றாக மேற்கொள்ளும் பயணம் எனும் சந்தோஷமான தருணத்தில், ஒருவருக்கு மட்டும் அந்தக் கொண்டாட்டம் பெரும் திண்டாட்டமாக மாறினால் இதுபோன்ற கேள்விகள் எழத்தானே செய்யும். வர்ஷாவின் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்வதற்கு முன், வர்ஷாவுக்கு பயணத்தின்போது வாந்தி ஏற்படுவதற்குக் காரணம் அவள் காதுகள் தான் என்று சொன்னால் நம்புவீர்களா?
வர்ஷாவுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே நமது காதுகள் என்பது hearing எனும் கேட்கும் திறனை மட்டுமேதருவதில்லை. உண்மையில் அதன் திறப்புகள் சப்தங்களைக் கேட்டு உணர்வதுடன், நமது உடல் எப்போதும் சமநிலையில் இருப்பதற்கும் (equilibrium spatial awareness) உதவுகிறது. எப்படியென்றால், நமது inner ear, அதாவது உட்காது காக்லியா மற்றும் வெஸ்டிப்யூல் எனும் இரு வெவ்வேறு இணை உறுப்புகளைக் கொண்டிருப்பதுடன் அவை இரண்டும் வெவ்வேறு வேலைகளை செய்கின்றன.
இதில் காக்லியா தன்னை வந்தடையும் ஒலி அதிர்வுகளை தன்னுள் இருக்கும் திரவம் மூலமாகக் கடத்தி, ஒலி நரம்புகள் வாயிலாக மூளைக்கு தகவலை வழங்குவதைத்தான் நாம் கேட்கும் திறன் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த வெஸ்டிப்யூல் பகுதியோ, நாம் ஒருபக்கம் சாயும்போதோ அல்லது நகரும்போதோ, இந்த உட்காது திரவமும் சரிந்து, நமது உடலின் நிலைமாற்றத்தை நரம்புகள் வாயிலாக மூளைக்குத் தகவல்களை அளிக்கிறது.
(பயண ஆலோசனை தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com