

“பானையில் என்ன இருக்கிறது என்று அதை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அதில் ஒன்றுமே இல்லை. பானையின் உபயோகத்தன்மையே அதன் வெற்றிடத்தில்தான் இருக்கிறது. ஆகவே உங்கள் இயலாமையை நினைத்து வருத்தப்படாதீர்கள்” என்று லாவோ சீ வழக்கம்போல் தன் பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்தார்.
அவரைச் சுற்றிலும் எண்ணற்ற சீடர்கள். ஒவ்வொருவராக இடைமறித்து சந்தேகங்கள் கேட்டனர். அத்தனைக்கும் பொறுமையாக பதில் சொன்னார். உலகின் புராதனமான தாவோயிச மதம் இப்படித்தான் வளர்ச்சி பெற்றது.
தேவலோகத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்
லாவோ சீ என்பவர் ஒருவரா பலரா, உண்மையில் அப்படியொருவர் பூமியில் வாழ்ந்தாரா, தாவோயிச மத நம்பிக்கையை அவர்தான் தொடங்கிவைத்தாரா என்ற கேள்விகளுக்கு எல்லாம் யாரிடமும் பதில் இல்லை. ஆனால் நிகழ்கால சீனப் பண்பாட்டில் லாவோ சீயின் கற்பிதங்கள் ஏராளம் இருக்கின்றன.
கி.மு. 604 செப்டம்பர் 14 அன்று சோ வம்சத்தின் ஆட்சிக்குட்பட்ட சீனாவின் சோ ஜென் கிராமத்தில் லாவோ பிறந்தார். அவர் பிறந்தபோது, பச்சிளம் பாலகனின் ரத்தக் கறை படிந்த உடலை 9 தேவலோக டிராகன்கள் வந்து பரிசுத்தம் செய்ததாய் சொல்வார்கள். லாவோ சீயின் தாய் அவரை 81 ஆண்டுகள் வயிற்றில் சுமந்ததாகவும், பிறப்பிலேயே அவருக்கு வெண்தாடியும் நீண்ட காதுகளும் இருந்ததாய் சீனப் பழமரபு கதைகள் சொல்கின்றன.
லாவோ சீயின் ஞானம்
லாவோ மேகங்களைக் கட்டுப்படுத்துகிறார், சூரியக் கதிர்களில் நடக்கிறார், நட்சத்திரங்களோடு வானில் பறக்கிறார் என்று ஊர் முழுக்கப் பேசினார்கள். ஆனால் உண்மையில், அவருக்கு ஆற்றல்களைக் கையாளும் தந்திரமும் மருத்துவ முறைகளுமே தெரிந்திருந்தன. அவ்வப்போது விலங்குகளோடு உரையாடினார். லாவோ சீ என்றால் ‘முதன்மைக் குரு’ என்று பொருள்.
லாவோ பற்றி மக்கள் பலவாராகப் பேசிக் கொண்டிருந்தது, ஆட்சியாளரின் காதுகளை எட்டியது. உடனே தன் அரண்மனையின் செயலாளராக நியமித்தார். அரசு அலுவலோடு தன் ஆன்ம தேடல்களையும் தொடர்ந்தார், லாவோ.
அவ்வப்போது தான் சிந்திப்பதை மக்களைக் கூட்டிச் சொல்வார். காயம்பட்ட மக்களும் அவரின் பேச்சில் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதை உணர்ந்து தேடித்தேடி பாடம் கேட்டனர். அமைதியான, நிலையான வாழ்வுக்கு சொர்க்கத்தில்தான் இடமிருக்கிறது, அங்கு செல்வதே நம் லட்சியம் என்றார்.
சொர்க்கத்திற்கான வழி
ஒருநாள் சீடர் ஒருவர் லாவோ சீயிடம் சென்று சொர்கத்திற்கான வழியை தாங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் எனக் கேட்டார். தியானத்தில் இருந்த லாவோ தன் கண்களை மெல்ல திறந்து, “நான் அதற்கு பெரும் முயற்சிகள் செய்தேன். எங்கெங்கோ ஓடினேன். ஆனால் ஒன்றும் அகப்படவில்லை. இறுதியில் தானாகவே இயற்கை அதற்கு வழிகாட்டியது” என்றார்.
ஆச்சரியப்பட்ட சீடர் எப்படி என்று அவசரப்படுத்தினார். அதற்கு லாவோ, “ஒருநாள் நான் மரத்தடியில் அமர்ந்திருந்தேன். காய்ந்த இலையொன்று காற்றோடு மெல்லமாக அசைந்தது. காற்று வடக்கில் வீசினால் இலையும் வடக்கே பறந்தது; தெற்கில்வீசினால் அதுவும் தெற்கில் நகர்ந்தது. இறுதியில் காற்று ஓய்ந்தபோது பூமியில் அழகாக விழுந்தது. மீண்டும் காற்றடித்தபோது, அதற்கேற்ப வானில் பறந்தது. ஒருகணம் நான்தான் அந்த இலையெனத் தோன்றியது. சொர்க்கத்திற்கான வழி இதுதான் என யாரோ பின்னிருந்து சொன்னார்கள். நானும் சொர்க்கத்தில் ஒருவனாய் மாறிப்போனேன். நான் செல்லுமிடமெல்லாம் சொர்க்கம் என் பின்னால் வந்தது. சர்வம் சொர்க்கமென்பதுதான் இதற்கான வழி” என்று சொன்னார்.
கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: iskrathewriter@gmail.com