

கடந்த அத்தியாயங்களில் ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, வாகன காப்பீடு ஆகியவை குறித்து அலசினோம். இந்த அத்தியாயத்தில் செல்போன், சைக்கிள், சொத்து உள்ளிட்டவற்றுக்கு தேவையான காப்பீடு குறித்து பார்ப்போம்.
இன்றைய காலக்கட்டத்தில் சோறு, தண்ணீர் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம். செல்போன் இல்லாமல் வாழ முடியாது என சொல்லும் அளவுக்கு செல்போன் மனிதனின் இன்னொரு அங்கமாக மாறிவிட்டது. ஆடம்பர தேவையாக இருந்த செல்போன், கரோனா காலத்துக்குப்பின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.
செல்போன் காப்பீடு
10 ஆயிர ரூபாயில் தொடங்கி 1 லட்ச ரூபாய் வரைக்கும் செலவழித்து செல்போன் வாங்குகிறோம். அனைத்து வசதிகளும் இருக்கிறதா? என ஆயிரம் முறை விசாரிக்கிறோம். ஆனால், அதற்கு இன்ஷூரன்ஸ் இருக்கிறதா? என விசாரிப்பதில்லை. இதனால் ஆசையாக வாங்கிய செல்போனை அடுத்த சில தினங்களிலே சிதைத்து விடுகிறோம். இதனால் ஏற்படும் இழப்பில் இருந்து நம்மை காப்பாற்றவே ‘செல்போன் காப்பீடு' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செல்போன் வாங்கும்போதே அல்லது பின்னரோ ப்ரிமீயம் செலுத்தி இன்ஷூரன்ஸ் செய்துகொள்ளலாம். அவ்வாறு செய்தால் செல்போன் ஸ்க்ரீன் சேதமடைந்தாலோ, கீழே விழுந்து உடைந்தாலோ, காணாமல் போய்விட்டாலோ உரிய இழப்பீடு வழங்கப்படும். செல்போன் விலைக்கு ஏற்ப, இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் மாறுபடும்.
சைக்கிள் காப்பீடு
நமது பொருளாதார சூழலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காத ஒரே வாகனம் சைக்கிள்தான். கீழ்நடுத்தர குடும்பத்தினர் வேலைக்கு செல்வதற்கு பெரும்பாலும் சைக்கிளை நம்பி இருக்கின்றனர். மாணவர்களும் அதனை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த சைக்கிள் திடீரென காணாமல் போய்விட்டாலோ, விபத்தில் சேதமடைந்தாலோ, முக்கியமான உதிரி பாகங்கள் பழுதடைந்து விட்டாலோ அதில் இருந்து காப்பாற்றவே ‘சைக்கிள் காப்பீடு' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சைக்கிளின் விலை மதிப்புக்கு ஏற்ப ப்ரிமீயம் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
பயண காப்பீடு
பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக இந்த காப்பீட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்நாடு காப்பீடு, வெளிநாடு காப்பீடு என இருவகை உள்ளது. உள்நாட்டு காப்பீட்டில் விபத்து, மருத்துவ தேவை, வாகன சேதம், விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போவது ஆகியவற்றுக்கான இழப்பீடை பெற முடியும்.
வெளிநாட்டு காப்பீட்டில் அங்கு ஏதேனும்ஆபத்து நேர்ந்தால், உடைமைகள் காணாமல் போனால், திருடு போவது உள்ளிட்டவற்றுக்கான நிவாரணத்தை பெற முடியும். விமானம் அல்லது கடல் பயணத்தின்போது ஏற்படும் திடீர் உடல்நல குறைப்பாட்டுக்கான சிகிச்சையும் பெறலாம். இதேபோல பயண காலத்தில் வீட்டை பாதுகாப்பதற்கான பிரத்யேக காப்பீடுகளும் இருக்கின்றன.
சொத்து காப்பீடு
இந்த திட்டத்தில் வீடு, கட்டிடம், அலுவலகம், கடை போன்ற அசையா சொத்துக்களுக்கும், தங்க வைர நகைகள், வெள்ளிபோன்ற விலை மதிப்புமிக்க அசையும் சொத்துக்களுக்கும் காப்பீடு பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் தீ விபத்து, வெள்ளம், பூகம்பம், மின்னல், மின்கசிவு, திருட்டு ஆகியவற்றினால், நமது சொத்துகளுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கலாம்.
ஏதேனும் சேதம் ஏற்பட்டால் காப்பீடு நிறுவனம் சேத மதிப்பை கணக்கிட்டு நிவாரணம் அளிக்கும். வீட்டில் உள்ள விலை மதிப்புமிக்கபொருட்கள், அலுவலகத்தில் இருக்கும் கணிணிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
காப்பீடு நம் உரிமை
காப்பீடு என்பது எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் தேவையான, மிக முக்கியமான பாதுகாப்பு கவசம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இதனை முதலீடாக கருத முடியாவிட்டாலும், நிச்சயம் அவசியமற்ற செலவாக கருத முடியாது. தற்போது சந்தையில் ஏராளமான காப்பீட்டு நிறுவனங்கள் இருப்பதால் பாலிசிதாரரின் தேவைக்கு ஏற்ப பாலிசியை தேர்வு முடியும். காப்பீட்டு நிறுவனங்களுடன் பேரம்பேசி, ப்ரீமியத்தை குறைக்கவும் முடியும்.
இன்னொருபுறம், காப்பீடு என்பது பாலிசிதாரருக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையே போடப்படும் சட்ட ரீதியான ஒப்பந்தம் ஆகும். அதில் உள்ள ஒவ்வொரு அம்சத்துக்கும் இருவரே பொறுப்பு. காப்பீட்டு நிறுவனம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறினால் பாலிசிதாரர் காப்பீட்டு தீர்வாணையரை அணுகலாம். அதன் மூலம் இழப்பீடு, கருணைதொகை, அபராத தொகை ஆகியவற்றை சட்ட ரீதியாக பெற முடியும்.(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in