கற்றது தமிழ் - 12: முல்லை தெரியும்... மூதின் முல்லையென்றால்

கற்றது தமிழ் - 12: முல்லை தெரியும்... மூதின் முல்லையென்றால்
Updated on
2 min read

"ஒரு சின்னப் பையன இப்படி இரக்கமே இல்லாம இத்தனை பேர் சேர்ந்து வதைக்கிறாங்களே" தொலைக்காட்சியைப் பார்த்துக் கலங்கிய கண்களோடு, தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார் அம்மா. எத்தனை முறை மகாபாரதத்தைப் பார்த்திருப்பீங்க, இப்பத்தான் முதல் தடவையா அபிமன்யுவைப் பார்க்கிற மாதிரி வருத்தப்படுறீங்க என்றவாறு அம்மா அருகில் வந்தமர்ந்தாள் குழலி. 'குழந்தைப் போராளி' என்ற புத்தகத்தோடு சுடரும் வந்திருந்தான்.

அம்மா: எத்தனை முறை பார்த்தாலும் மனசு கிடந்து அடிச்சுக்கத்தான் செய்து.

குழலி: அபிமன்யு மட்டுமா, உப பாண்டவர்கள் எல்லாரும்தான் போய்ச் சேர்ந்துட்டாங்க. கூடவே லட்சக்கணக்கான வீரர்களும்.

சுடர்: இன்னைக்கும் அபிமன்யு மாதிரி இளையவங்க நிறையப் பேர் போர்ல ஈடுபடுத்தப்படுறாங்க. தங்களோட இளமைப் பருவத்தை இழந்து, போரோட தீவிரம் தெரியாம ஆயுதம் எடுக்கிறத விளையாட்டைப் போலச் செய்துகிட்டிருக்காங்க. என்கையில இருக்கிற இந்தப் புத்தகம்கூட குழந்தையிலயே போராளியான சைனா கெய்றெற்சி, தன் வாழ்க்கையப் பத்தி எழுதினதுதான் அத்தை.

அம்மா: பேரப் பாத்தா நம்ம நாட்டு ஆளாத் தெரியலையே சுடர்.

சுடர்: உகாண்டாவைச் சேர்ந்தவங்க அத்தை. சின்ன வயசுலேயே குடும்பத்துல இருந்து பிரிஞ்சி, ஒரு போராளிக் குழு கிட்டப் போய்ச் சேர்ந்து எப்படி ஒரு போராளியா மாறினாங்கன்னுதான் இந்தப் புத்தகத்துல எழுதியிருக்காங்க.

குழலி: சுடர் இந்தப் புத்தகத்தை அவங்க எந்த மொழியில எழுதியிருக்காங்க..

சுடர்: டச்சு மொழியில எழுதியிருக்காங்க. தேவா அதைத் தமிழ்ல மொழிபெயர்த்திருக்கார்.

குழலி: எல்லாக் காலத்துலயும் இந்த மாதிரி இளம் வயதிலேயே போராட்டக் களத்துக்குப் போற தேவையும் சூழலும் இருந்திருக்கில்ல சுடர்.

அம்மா: நம்ம பக்கத்து நாடான இலங்கையில கூட இந்தச் சூழல் இருந்ததே ரொம்ப காலமா... முள்ளிவாய்க்கால் போரோட இறுதி யுத்தம் முடிஞ்சி போச்சி.

குழலி: 'கெடுக சிந்தை, கடிது இவள்துணிவே'ன்னு தொடங்குற ஒரு புறநானூற்றுப் பாட்டு (பா.எண் 279). ஒக்கூர் மாசாத்தியார்ங்கிற சங்க காலப் பெண் கவிஞர் எழுதினது.

சுடர்: இந்தப் பாட்டைப் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். வீரமான ஒரு சங்க காலத் தாய் பத்தின பாட்டு. தங்களோட குடிப் பெருமையைக் காப்பாத்துறதுக்காக நடந்த போர்ல முதல் நாள் தன் தந்தையை இழந்தாளாம். ரெண்டாம் நாள் போர்ல கணவனை இழந்தாளாம்.

ஆனாலும் இன்னைக்குப் போர் முழக்கம் கேட்கத் தொங்கியதும், தன் குடிப் பெருமையைக் காப்பாத்த நினைச்ச அந்தத் தாய், குடும்பத்தின் ஒரே ஒரு வாரிசான தன் மகனுக்குத் தலையில் எண்ணெய் தடவிக் குடுமி போட்டு, வெள்ளாடையை உடுத்திக் கையில வேலைக் கொடுத்துப் போர் முனைக்குப் போன்னு அனுப்பினாளாம்.

குழலி: ரொம்பச் சரியா சொன்ன சுடர்.இந்தப் பாட்டு வாகைத் திணையில அமைஞ்சது. துறை மூதின்முல்லைன்னு சொல்வாங்க.

சுடர்: முல்லை தெரியும். அதென்ன மூதின்முல்லை. துறைன்னு சொல்றயே... திணைதான் தெரியும்.

குழலி: துறைங்கிறது புறத்திணையோட உட்பிரிவுன்னு புரிஞ்சுக்கலாம். ஒவ்வொரு திணைக்கும் துறைங்கிற உட்பிரிவு இருக்கும். மூதின்முல்லை பெண்களோட வீரத்தைப் பத்திச் சொல்ற துறை. வாகைத் திணைக்குள்ள வரும். புறப்பொருள் வெண்பா மாலை, போர்ங்கிறது ஆண்கள் பங்கேற்கறது மட்டுமில்ல, பெண்களோட வீரப் பண்பாலயும் ஆனதுன்னு சொல்லுது.

ஆண்களப் போல மகளிர்க்கும் வீரமுண்டு. தன் குடிப் பெருமையக் காக்க, மகனோட போர்த்திறத்தை வெளிப்படுத்தச் செய்ற கடமையும் பெண்களுக்கானதா இருந்துச்சுன்னு சொல்றதுதான்.

சுடர்: ஆனா கேட்கறதுக்கு வீரமா, நாட்டுப் பற்றுன்னு பெருமையா இருந்தாக் கூட, எல்லாரையும் இழந்து, யாரும் இல்லாது தனியே இருக்குற ஒரு அம்மாவுக்குத் தன் மகனையும் போருக்கு அனுப்புற துணிச்சல் வருமா குழலி.. எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு.

குழலி: சரி சுடர்... நாளை எனக்குத் தேர்வு இருக்கு. படிக்கணும். பிறகு பார்ப்போம்...

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in