

உதய்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மிகமுக்கிய நகரமான ஜோத்பூருக்கு செல்வதுதான் நம்முடைய அடுத்த திட்டம். அதனால் அதிகாலையிலேயே கிளம்பத் தயாரானோம். அப்போது நாம் தங்கியிருந்த விடுதி மேலாளர் வந்து, நம்முடைய அடுத்த திட்டம் குறித்து கேட்டறிந்தார். ஜோத்பூர் செல்லும் வழியில் இருக்கும் மூன்று இடங்கள் குறித்து எடுத்துச்சொல்லி மறக்காமல் போய்வரச்சொன்னார். அவர் சொன்ன ஒரு இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நாமும் குறித்து வைத்திருந்தோம்.
உதய்பூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் பயணித்தால் நத்வாடா என்ற ஊர் வரும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே மிகப்பெரிய சிவன் சிலை அங்கு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. நாம் சென்றபோது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
சிவன் சிலை மட்டும் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. மற்ற கட்டுமான வேலைகள் வெகு வேகமாக நடந்து வந்தது. 'விஸ்வஸ் ஸ்வரூபம்' அதாவது ’நம்பிக்கை’ என்று இந்த சிவன் சிலைக்கு பெயரிடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.
பிரமிப்பும் பிரம்மாண்டமும்: ராஜஸ்தானில் இருக்கும் இந்த மிகப்பெரிய சிவன் சிலை 351 அடி உயரத்தில் 2,500 டன் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் சிவன் உருவத்தின் தோள் பகுதி வரையிலான உயரம் மட்டும் 260 அடி. 20 அடி உயரத்தில் 3 பார்வை மாடங்கள், லிஃப்ட் என பல கட்டுமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சிவன் சிலை இதுதான்.
சிவன் சிலையை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கிருந்து கிளம்பி கும்பல்கர் கோட்டைக்குச் சென்றோம். சீனப் பெருஞ்சுவர் எந்தளவு பிரம்மாணடமானதோ, அதுபோலவே இந்த கும்பல்கர் கோட்டை பெருஞ்சுவரும் பிரம்மாணடமானது. உலகின் இரண்டாவது மிக நீளமான பெருஞ்சுவர் இது.
சுமார் 36 கிலோமீட்டருக்கு செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் இருக்கிறது. இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று அதுவரை உங்களுக்குத் தெரியாது. மிகப்பெரிய கோட்டைகளுக்கு பெயர்போனது ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய கோட்டை தான் இந்த கும்பல்கர் கோட்டை.
இந்த கோட்டைக்குள் மட்டும் 360க்கும் அதிகமான இந்து மற்றும் சமண கோயில்கள் இருக்கின்றன. ராஜஸ்தான் உத்சவ் விழா நடக்கும் போது, இந்த கோட்டையில் பலவகையான கலைகள் அரங்கேற்றப்படுமாம். அதைப் பார்க்கவே இந்தியா முழுவதிலிருந்தும் பலர் வருவார்களாம்.
ராஜஸ்தான் கட்டிடக்கலைக்குப் பெயர்போன இடமாக இருந்தது இந்த கும்பல்கர் கோட்டை. ராஜஸ்தான் செல்லும் எல்லோரும் இந்த இடத்துக்குச் செல்லவேண்டும். மழை வரத்தொடங்கியதும் அங்கிருந்து கிளம்பி செல்லும் வழியில் ரணக்பூர் ஜெயின் கோயிலுக்கு சென்று வந்தோம்.
ஆரவல்லி மலைத்தொடருக்கு நடுவே அமைதியான சூழலில் மிக பிரம்மாண்டமாக இந்த கோயில் கட்டப்பட்டு இருந்தது. கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் அவ்வளவு அமைதி. மிக நேர்த்தியாக இந்த கோயிலைப் பராமரித்து வருகிறார்கள். இது ஜைனர்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகும். ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரருக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை.
தொடர்புக்கு: bharaniilango@gmail.com