

வாழ்வில் நடைபெறும் சம்பவங்களில் இருந்து கதை எழுத முடியும் என்று பார்த்தோம். அதாவது ஒரு பேருந்து பஞ்சர் ஆனதை வைத்து நல்ல கதை எழுதினோம். இப்போது, அதே சம்பவத்தை வைத்து முழுவதும் ஃபேண்டஸியாக ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
ஃபேண்டஸி என்றால் முழுக்க முழுக்க கற்பனை. அந்தக் கற்பனையில் நிஜத்தில் நடக்க 1 சதவிதம்கூட வாய்ப்பே இருக்காது. ஒரு சிறுமி பறப்பதுபோல எழுதினால் அது நிஜமாக நடக்காது இல்லையா? ஒரு சிறுவன் மேகங்களைப் பிடித்து தொங்கிகொண்டே அடுத்த மேகத்துக்குத் தாவிச் செல்கிறான் என்று எழுதினால் உண்மையில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லைதானே? தேவதை வரும் கதைகள் எல்லாமே இவ்வாறு எழுதுவது தானே… இப்படி மிக அதிக கற்பனை கலந்து எழுதுவதைத்தான் ஃபேண்டஸி கதைகள் என்கிறார்கள்.
சாலையில் அல்ல வானத்தில்... இப்போது பஞ்சரான பேருந்து சம்பவத்தை ஃபேண்டஸி கதை வடிவில் எழுதிப் பார்ப்போமா? ‘என்றைக்கும் இருப்பதைப் போல இன்று இந்தப் பேருந்து இல்லையே!!! ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறதே’. அன்று காலை முதலே ஓட்டுநருக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. பேருந்து மிதப்பதைப் போலவே அவருக்குத் தோன்றியது. ஆனால், வழக்கம்போல பயணிகள் ஏறினார்கள்; இறங்கினார்கள். ஒருவேளை தனக்கு மட்டும்தான் அப்படித் தோன்றுகிறதா என்று நினைத்துக்கொண்டே பேருந்தின் வேகத்தைச் சற்றுக்கூட்டினார்.
‘டமால்’ என்ற சத்தத்தோடு பேருந்து நின்றது. எல்லோரும் இறங்கி வந்தனர். பேருந்தின் முன் டயர் பஞ்சராகி விட்டது. ஓட்டுநர் கீழே இறங்கி அந்த டயரைத் தொட்டுப் பார்த்தார். பஞ்சரான டயர் கொஞ்சம் உப்பத் தொடங்கியது. பயந்துபோய் கையை எடுத்துவிட்டார். டயர் உப்புவது நின்றுவிட்டது. மீண்டும் தொட்டார். மீண்டும் உப்பியது. அப்படியே கையை வைத்திருந்தார். டயர் மறுபடியும் பழையபடி காற்றோடு தயாராகி விட்டது. எல்லோரும் ஓட்டுநரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். ஓட்டுநர் மீண்டும் தன் இருக்கைக்கு ஏறி வண்டியை இயக்கினார். பேருந்து நகர்ந்தது. சாலையில் அல்ல வானத்தில்.
ஆமாம். பேருந்து பறக்கத் தொடங்கியது. ஓட்டுநருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பயணிகள் முதலில் பயந்தனர். பிறகு அதை ரசிக்கத் தொடங்கி விட்டனர். பேருந்து மேலும் பறந்தது. கீழே இருந்த எல்லோரும் வியப்போடு பார்த்தனர். ‘நான் இறங்க வேண்டிய நிறுத்தம்’ என்று ஒருவர் கத்தினார். நடத்துநர், ஜன்னல் வழியே ஒரு மேகத்தை நிறுத்தி, அதில் இறங்க வேண்டியவரை அமரச் செய்தார். அந்த மேகம், அவரைப் பத்திரமாக கீழே இறக்கி விட்டது.
கழுகுப் பார்வை: மேகக்கூட்டத்திற்கு பேருந்து பறந்துசென்றது. ‘ஏன் என்னாச்சு இன்று… என்று ஓட்டுநர் யோசித்துக் கொண்டே வண்டியை ஓட்டினார். அப்படியே கீழே பார்த்தார். அழகான ஊர் தெரிந்தது. மேலே இருந்து ஒரு பறவை பார்ப்பதைப் போல பார்த்தார் அந்த ஓட்டுநர். அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது. முந்தைய நாளில் அவரின் மகள், ‘நமது ஊரை கழுகுப் பார்வையில் வரைய வேண்டும்’ என்று நண்பர்களுக்குள் போட்டி இருப்பதைச் சொல்லி, அதற்கு உதவும்படி அப்பாவிடம் கேட்டாள்.
கழுகு பார்வையா… அப்படியெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டார். உண்மையில் கழுகுப் பார்வை என்றால் அவருக்குத் தெரியவில்லை. இதோ, இப்போது அவருக்கு நன்கு தெரிந்துவிட்டது. மேலிருந்து நம் ஊரைப் பார்க்கையில் எத்தனை அழகாக இருக்கிறது என்று ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது பேருந்து மெதுமெதுவாகக் கீழே இறங்கியது. வழக்கம்போல சாலைக்கு வந்து ஓடத் தொடங்கியது. அன்று இரவு அந்த ஓட்டுநர், தன் மகளுக்கு கழுகுப் பார்வையில் அந்த ஊரை வரைய உதவி செய்தார்.
இப்படியும் அந்தக் கதையை எழுதலாம். வீட்டுக் கதையாக இதே சம்பவத்துக்கு நீங்களும் ஒரு ஃபேண்டஸி கதை எழுதி அனுப்புங்கள்.
- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com