மகத்தான மருத்துவர்கள் - 42: அந்தமானில் ஒரு மாவீரன்!

மகத்தான மருத்துவர்கள் - 42: அந்தமானில் ஒரு மாவீரன்!
Updated on
2 min read

இரண்டாம் உலகப்போர் ஆரம்பத்திலேயே, 1939 ஆம் ஆண்டில் அந்தமானை ஜப்பானியர்களிடம் இழக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, தனது பணியாளர்களை சொந்த ஊருக்கே திரும்புமாறு அழைப்பு விடுத்தது. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்த டாக்டர் திவான் சிங், அந்தமானிலேயே தங்கி மக்களுக்கு தனது மருத்துவ மற்றும் சமூகநலப் பணிகளைத் தொடர்வது என முடிவு செய்தார்.

அந்தமானை 1942 ஆம் ஆண்டில் முற்றிலுமாக கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம், ஆரம்பத்தில் டாக்டர் திவான் சிங்கின் பணிகளைப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்பியது. அவரது எந்தப் பணிக்கும் இடையூறு இல்லாமல் தொடரச் செய்ததோடு, செஞ்சிலுவை சங்கம் மற்றும் அந்தமான் அமைதி குழுவிற்கும் அவரைத் தலைவராக நியமித்தது ஜப்பானிய அரசு.

சேவை புரிந்த மண்ணில் சிறை: அனைத்து பணிகளுக்கிடையேயும் தேச விடுதலைக்காக ‘ஆசாத் ஹிந்த்'எனும் படையை திவான் சிங் காலாபாணி ஏற்படுத்தினார். மேலும் குருத்வாராவில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் செய்ததை ஜப்பானிய அரசு விரும்பவில்லை. அதை, தமக்கு எதிரான ஒன்று என்று தவறாகப் புரிந்து கொண்ட ஜப்பானிய ராணுவம், குருத்வாராவிலிருந்து உடனடியாக அனைவரும் வெளியேறும்படி கட்டளையிட்டது. சேமிப்பில் இருந்த அத்தியாவசிய மருந்துகளை ஜப்பானிய வீரர்கள் தவிர மற்றவர்களுக்கு வழங்கக் கூடாது என்று தடையும் விதித்தது.

போரில் காயமுற்ற பொதுமக்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் மருந்து கிடைக்காது என்ற ஆணையை எதிர்த்து டாக்டர் திவான் சிங் போராட ஆரம்பித்தார். அத்துடன் தங்கள் சுகத்திற்காக, இரவில் கொரியப் பெண்களை குருத்வாராவுக்குள் அனுமதித்ததையும் அவர் எதிர்க்கவும், திவான் சிங்கிற்கு ஆதரவாக ஜப்பானிய அரசை எதிர்த்து பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் கோபம் கொண்ட ஜப்பானிய ராணுவம், 1943 அக்டோபர் 23 ஆம் தேதியன்று, திவான் சிங்கை கைது செய்து, காலாபானி சிறையில் அடைத்தது. தான்பணிபுரிந்த இடத்திலேயே தான் சிறைவைக்கப்பட்டதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார் டாக்டர் திவான் சிங். சிறையிலும் தனது போராட்டத்தை அவர் கைவிடாததால் அவர்மேல் ஜப்பானியர்களுக்கு பெரும் அதிருப்தி உண்டானது.

அதனால், டாக்டர் திவான் சிங்கை ஆங்கில அரசின் உளவாளி என்று குற்றம் சாட்டிய அவர்கள், ஜப்பானியர்களுக்கு எதிரான பெரும் பகையாளி என்றுகூறி அவரை காலாபானி சிறையில் வாட்டி வதைக்கத் தொடங்கினர். கழிப்பறை, காற்று, மின்சாரம், வெளிச்சம் என எதுவுமில்லாத சிறிய அறையில் உணவு நீரின்றி பட்டினி போட்டதுடன், தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தொடர்ந்து அவரைக் கட்டைகளால் அடிப்பது எனத் தொடர்ந்தது.

நாட்டுக்கு இழப்பு: கிட்டத்தட்ட 80 நாட்கள். தீராத அந்த நரகம் அனைத்தையும் தாங்கிய திவான் சிங் காலாபாணி, தனது 47 வயதில் 1944 ஆம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதியன்று சிறைச்சாலையிலேயே உயிரிழந்தார். ஏழைஎளிய மக்களை நேசிப்பது, தாய்நாட்டை நேசிப்பது என்பதைத் தவிர எதுவும் அறியாத ஒரு வீரனை, ஓர் இளைஞனை, ஒரு கவிஞனை இழந்தது இந்தியா.

‘இறுதி அலைகள்’ - சிறைச்சாலை வதைகளோடு தான் கிடந்த அந்த அந்திம வேளையிலும் அவர் எழுதிய புத்தகமான அந்திம் லேஹ்ரான் (இறுதி அலைகள்) எனும் திவான் சிங் காலாபாணியின் புத்தகம் அவர் இறந்த பின் வெளியிடப்பட்டது.

யாதும் ஊரே: இன்றும் திவான் சிங் தொடங்கி வைத்த குருத்வாரா அந்தமானில் அவரது பெயரில் இயங்கி வருவதுடன், அவர் ஆரம்பித்த கால்சா பள்ளியில் மூன்றாவது மொழியாக பஞ்சாபி இப்போதும் அனைத்து மாணவர்களுக்கும் அங்கே அவர் நினைவாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

‘அந்தமானில் ஒரு மாவீரன்' (’எ டைட்டன் இன் அந்தமான்ஸ்’) எனும் பெயரில் தனது தந்தையின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக அவர் வாழ்க்கைச் சரிதையை புத்தகமாக மூத்த மகன் மொகிந்தர் சிங் தில்லான் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதேசமயம், டாக்டர் திவான் சிங் காலாபானியின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் அருங்காட்சியகம் ஒன்றை அவரது குடும்பத்தினர் சண்டிகரில் உருவாக்கியுள்ளனர். இலவச அனுமதியுடன் நம் அனைவரையும் வரவேற்கின்றனர்.

எங்கோ பிறந்து எங்கோ இருக்கும் மக்களுக்காக தனது பணியையும் உயிரையும் கொடுத்த அப்படிப்பட்ட ஒரு வீரத்திருமகனை, மகத்தான மருத்துவர் வரலாறை தெரிந்து கொள்வது நமக்கும் அவசியம் தானே.

(மகிமை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in