கதை கேளு கதை கேளு - 42: நாட்டுப்புற தெய்வங்கள்

கதை கேளு கதை கேளு - 42: நாட்டுப்புற தெய்வங்கள்
Updated on
2 min read

நாட்டுப்புற தெய்வங்களில் பலவகைகள் உண்டு. குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், ஊர் தெய்வங்கள், ஒரு சாதிக்குரிய தெய்வங்கள், ஒரு வட்டாரத்திற்குரிய தெய்வங்கள், தமிழகம் முழுவதும் அறியப்பட்ட தெய்வங்கள் என பல வகைகள்.

தெய்வமாக எழுப்பப்படுவதிலும் பலவேறுபாடுகள் உண்டு. பீடம் கட்டி வழிபடுவது, சாலை ஓரம் மூன்றடி உயரம் மட்டுமே இருக்கும் அளவில் ஒரு அறைபோலக் கட்டி அதில் உள்ளே விளக்கேற்றி வழிபடுதல், பெரிதாகக் கோவில் கட்டி வழிபடுவது, ஒரு மரத்தில் சிவப்புத் துணி கட்டி வழிபடுதல் என்று அத்தெய்வத்தை எழுப்புகின்ற மக்களின் பொருளாதார வசதிக்கேற்ப நாட்டுப்புறத் தெய்வங்களின் அமைப்பு திகழும். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நாட்டுப்புற தெய்வ வழிபாடு மிகவும் அதிகம். பெண் தெய்வங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. ஆண் தெய்வ வழிபாடுகள் அபூர்வம்.

தெய்வங்களின் கதை

தமிழகத்தின் பல கிராமங்களில் பல பெயர்களில் காணப்படும் தெய்வங்களின் மொத்த கதைகளையும் ஆராய்ந்து பார்த்தால், தெய்வமாக்கப்பட்ட பெண் குடும்பத்தாராலோ, வீட்டு ஆண் மகன்களாலோ, சமுதாயத்தாலோ, வறுமை காரணமாகவோ, வாழ இயலாத சூழ்நிலையில் தன்னைத்தானே துன்புறுத்திக்கொண்டோ அல்லது பிறராலோ தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருக்கின்றனர். இறப்புக்கு முக்கியக் காரணமாக சாதி நிலையும் உள்ளது.

பருவத்துக்கு வந்த பின்பு,சாதி மதம் பார்க்காமல் எதிர்பாலினம் மீது அன்பு வைக்கும் பெண்ணுக்கு சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கின்றனர். ஆணின் அன்பில் நம்பிக்கைக் கொண்டு திருமணம் முடித்துச் செல்லும் பெண்ணை, பையனின் குடும்பத்தினர் கொலை செய்து பின்பு தெய்வமாக்கி வழிபட்டு, தாங்கள் செய்த பாவத்திற்கு சமாதானம் அடைகின்றனர். அரியநாச்சி அம்மன் என்று வழிபடப்படும் தெய்வத்தின் வாய்மொழி வரலாற்றை கேட்டறிந்த நூலாசிரியர் ச.தமிழ்ச்செல்வன், இந்தத்தெய்வத்தின் காலம் மற்றும் வழிபடும்முறைகளை வைத்து, நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்தத் தெய்வம் காந்தி காலத்திய தெய்வமாகும்.

சீனிமுத்து அம்மன்

காந்தி அரிஜனம் என்று ஒடுக்கப்பட்ட மக்களை அழைப்பார். அரிஜன பெண்ணை மணந்ததனால் பையனின் பெற்றோர், வீட்டுத் தோட்டத்திலேயே குழிவெட்டி மருமகளை கொன்றிருக்கின்றனர். இதையறிந்த கணவன் தன் தந்தையை தானே வெட்டிக் கொன்றுவிட்டு, தானும்தற்கொலை செய்ததாக கதை சொல்கிறது. அரிஜனச்சி என்பதே மருவி அரியநாச்சி என்று அழைக்கப்படலாம் என்கிறார் நூலாசிரியர்.

சீனிமுத்து அம்மன் கதை நம்மை சிலிர்க்க வைக்கிறது. நெல்லை மாவட்டம் வடுகச்சிமதில் ஊரில் வாழ்ந்த சீனிமுத்து என்ற பெண் வள்ளியூரில் வாழும் ஒருஇளைஞனைப் பற்றி வாய்வழிச் செய்திகளால் கேள்விப்பட்டு அவனை விரும்பியிருக்கிறாள். விரும்பியவனையே மணக்கஅவனைக் கடத்தி வரச் செய்திருக்கிறாள். கடத்தப்பட்ட இளைஞனுக்கும் சீனிமுத்துமீது காதல் இருந்தாலும், தான் ஒருஆண்மகன் தன்னை ஒரு பெண் கடத்தியிருக்கிறாளே என்ற அவமான உணர்வால் தற்கொலை செய்து மாண்டதாகவும், அதையறிந்த சீனிமுத்துவும் அங்கேயே மரணமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆணாதிக்க எண்ணத்தின் அப்பட்டமான காட்சி இது.

சமூக பழக்கங்களின் பிரதிபலிப்பு

ஒவ்வொரு தெய்வத்தின் கதையையும் ஆராய்ந்தோமானால், சமூகப் பழக்க வழக்கங்களின் பிரதிபலிப்பை காணமுடியும். வட இந்தியாவில் ராஜாராம் மோகன்ராயால் ஒழிக்கப்பட்ட சதி எனும் உடன்கட்டை ஏறும்வழக்கம் 1829-க்கு பிறகும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்ததை நாட்டுப்புறத் தெய்வங்கள் சிலர் தீயில் பாய்ந்து இறந்ததன் மூலம் அறிய முடி கிறது.

சாதிகளின், தீண்டாமையின் கொடுமைகளை பல தெய்வங்களின் கதைகள் கூறுகின்றன.

ஆண்களின் வஞ்சனைகளை இந்தத்தெய்வக் கதைகள் அம்பலப்படுத்துகின்றன. பெண்ணின் உடல்மீதே குடும்பத்தின் மானத்தை வைத்துக் கொண்டாடி, பெண் பாதிக்கப்பட்டுவிட்டால் குடும்பத்தின் மானம் போனதாகக் கவலை கொண்டு தன் குடும்பத்துப் பெண்களையே கொலை செய்து, பாவக் கறையை அழித்து, புனிதமாக்க தாங்களே கொன்று தெய்வமாக்கப்பட்ட பெண்களே நம் நாட்டுப்புறத் தெய்வங்கள்.

சமூக அக்கறை

தமிழ்ச்செல்வனின் அறிவொளிக் கால களப்பயணம் மூலம் கண்டறியப்பட்ட சிலநாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாற்றை தெய்வமே சாட்சி புத்தகம் வாயிலாக அறியலாம். ஒவ்வொரு பெண்ணின் இறப்பிற்குப் பின்னும் உள்ள ஆணாதிக்கத்தை, சமுதாய நிலையை, பெண்ணின் இயலாமையை விளக்கிச் சொல்கிறார். இனியும் இப்படியான நாட்டுப்புறத் தெய்வங்கள் உருவாக வேண்டாம் எனும் அக்கறையும் அதனுடனே இழையோடுகிறது.

- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர்,

ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்

தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in