

மலைச்சரிவில் உள்ள தேயிலைத் தோட் டத்தில் நாள்தோறும் மணிக்கணக்காய் உழைத்து தேய்ந்த மணிமேகலை தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தார். தேயிலை தோட்ட முதலாளி வீட்டு பிள்ளைகள் தங்க சங்கிலி, மோதிரம் போட்டு மிடுக்காக வருவதைப் பார்த்து தாய் மணிமேகலைக்குள்ளும் ஒரு ஆசை உண்டானது.
தம் பிள்ளைக்கும் தங்க மோதிரம் போட்டு அழகு பார்க்க வேண்டும். அதற்காக ஆசைஆசையாக பணத்தை சேமிக்கத் தொடங்கினார். தங்க மோதிரம் ஒன்றை வாங்கினார். வீட்டிற்கு வந்த உடன் மகனுக்கு பரிசளிக்க பையை திறந்து பார்த்தார். மோதிரத்தை காணவில்லை. அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார். ஏழைக்கு கனவு நனவாகாதோ என்று வருத்தப்பட்டார். பிள்ளைகளோ அம்மாவை தேற்றினார்கள். அந்த சமயம் யாரோ வந்து கதவை தட்டினார்கள். பரட்டை தலையும் கிழிந்த புடவையும் பார்ப்பதற்கே மிகவும் அழுக்காக இருந்தாள் வந்து நின்ற பெண்.
“என்னம்மா வேணும்” என்று அதட்டலாய் மணிமேகலை கேட்டார். அம்மா உங்க மணி பர்ஸ் தானே என்றார் அந்த பெண். அதைப் பார்த்ததும் மணிமேகலைக்கு போன உயிர் திரும்பி வந்தது. வறுமையிலும் இவ்வளவு நேர்மையாய் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சி அடைந்தார். நாம் தான் அவர்கள் புற அழகைப் பார்த்து தவறாக எண்ணி விட்டோம் அக அழகே அழகு என்று உதவிய பெண்ணை அமர வைத்து குடிப்பதற்கு தேனீர் அளித்தார். இந்த காலத்திலும் இவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களே என்று பாராட்டினார்.
இதிலிருந்து அவர் கற்றுக்கொண்டது புறத் தூய்மையை நீரால் போக்கலாம். அகத் தூய்மையை வாய்மையால் அறியலாம் என்பதை உணர்ந்தாள்.
இதை தான் வள்ளுவர்,
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
(அதிகாரம்: வாய்மை, குறள் எண்: 298)
என்கிறார்.
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்