

மழை வரும்போது மட்டும் தான் மயில் தோகையை விரிக்குமா, டிங்கு?
-ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
மழை வருவது மயிலுக்குத் தெரியும், மழை வரும்போது மட்டும்தான் மயில் தோகையை விரித்து ஆடும் என்றெல்லாம் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பி வருகிறார்கள். ஆனால், இது உண்மை அல்ல. ஆண் மயில் குடும்பம் நடத்துவதற்காகத் தன் அழகிய தோகையை விரித்து, பெண் மயிலை அழைக்கிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இனப் பெருக்கக் காலம் என்பதால், அந்தக் காலகட்டத்தில் அடிக்கடி ஆண் மயில்கள் தோகையை விரிப்பதைப் பார்க்கலாம். அப்போது தற்செயலாக மழையும் பெய்திருக்கலாம், மஞ்சரி.
மாத்திரைகளைத் தேநீர், காபியோடு சேர்த்துச் சாப்பிடலாமா, டிங்கு?
- அக்ஷயா தேவி, 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, குமரி.
மாத்திரைகளை அப்படியே விழுங்க இயலாது. அதனால் தண்ணீரைப் பயன்படுத்தி விழுங்கலாம். காபியில் Caffeine,தேயிலையில் Theine போன்ற வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றுடன் மாத்திரைகளைச் சேர்த்துச் சாப்பிடும்போது, மாத்திரைகளின் வீரியம் குறைந்துவிடும். இரும்புச் சத்துக்கான மாத்திரைகளை இப்படிச் சாப்பிடும்போது உடலில் சத்தைச் சேர விடாமல் தடுக்கவும் செய்துவிடுகிறது, அக்ஷயா தேவி.