

ஒரு பாக்கெட் சாக்லெட் வகுப் பறையை இனிப்பானதாக்கிவிடும். அட! சாக்லெட் சாப்பிடுவதால் இல்லை. வித்தியாசமான செயலால். வித்தியாசமே வியப்பை உருவாக்கும். வழக்கமான செயல் மந்தத்தன்மையை உருவாக்கலாம். ஆகவே, இந்தமுறை வித்தியாசமான செயல்கள் செய்யும் வாய்ப்பை சிறுவர்களுக்குக் கொடுப்போம். இதற்கு ஆசிரியர்களின் முன் தயாரிப்பு தேவை.
ஒரு பாக்கெட் சாக்லெட் வாங்கவும். வெளிப்புற காகிதத்தைப் பிரிக்கவும். சாக்லெட்டின் மேல் சுற்றியுள்ள காகிதத்தினை தனியாக கிழியாமல் எடுக்க வேண்டும். அக்காகிதத்தில் படம் வரையலாம். பெயர் சொற்களை எழுதலாம். படம் வரைந்த, படம் ஒட்டிய புதிய புதிய தாளை சாக்லெட் மீது சுற்றலாம். அதன்பின், வழக்கம்போல் பிரித்தது தெரியாமல், வெளிப்புற காகிதத்தை நிதானமாகச் சுற்றவும்.
எதிர்பார்ப்பு தரும் சுறுசுறுப்பு
இவ்வாறு தயாரித்த சாக்லெட் பாக்கெட்டை மேஜையின் மீது வைக்கவும். ”சார்! உங்களுக்குப் பிறந்தநாள்/ திருமண நாள்/ உங்க குழந்தைக்கு பிறந்தநாள்...” இப்படியும், ”சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு சாக்லெட் கொடுப்பீங்க” எனவும் பலவிதமான அனுமானங்கள் உருவாகலாம். குழந்தைகளிடம் இப்படி பல எதிர்பார்ப்புகள். எதிர்பார்ப்பும் ஒரு ஆர்வமூட்டல் செயல்தான். வகுப்பறையை சுறுசுறுப்பு ஆக்கிவிடும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு சாக்லெட்கொடுங்கள் நீங்கள் கூறும் வரை சாக்லெட் சாப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் கொடுங்கள். குழந்தைகளை இரு குழுக்களாகப் பிரிக்கவும். அதன்பின்பு, குழந்தைகளை வட்டமாக அமரச் செய்யுங்கள். இருஅரை வட்டங்கள். முதல் குழுவில்,ஒரு குழந்தையை அழைத்துச் சாக்லெட்டைப் பிரிக்கச் சொல்லுங்கள். சாக்லெட் தாளில் எழுதியுள்ளதை வாசிக்கச் சொல்லுங்கள்.
கிளி என வாசித்தால் கிளியை போல் குரல் எழுப்பச் சொல்லுங்கள். கிளியை போல் நடித்துக் காட்டச் செய்யுங்கள். அக்குழந்தைக்கு எதிரில் அமர்ந்துள்ள மற்றொரு குழந்தையிடம் அதன் ஒலி மரபைக் கூறச் சொல்லுங்கள். கிளி பேசும் என்று கூறுவார். அது சரியான விடை. ஆகவே, கிளி போல் குரல் எழுப்பிய குழந்தையை சாக்லெட் தின்னக் கூறலாம்.
மிட்டாயும் கணக்கும்
சரியான ஒலி மரபுக் கூறிய மாணவர் சாக்லெட்டை பிரிக்கும்படி கூறவும்.அவரிடம் கோழி படம் இருப்பின் அவர் கோழி போல் நடித்துக் காட்ட வேண்டும். அவர் ’கொக்’ ’கொக்’ என சத்தம் எழுப்பி நடிப்பார். எதிர்புறம் உள்ள மற்றோரு மாணவரிடம் கோழியின் ஒலி மரபைக் கூறச் செய்ய வேண்டும். கோழி கொக்கரிக்கும் என்பார் அந்த மாணவர். இருப்பிடம் குறித்தும் கேட்கலாம். ஓவ்வொரு சரியான பதிலுக்கும் இனிப்பு கிட்டும். வகுப்பறைச் செயல்பாடு இனிப்பானதாக மாறிவிடும். இப்படியே ஆட்டத்தைத் தொடர வேண்டும்.
ஒருவேளை தவறாக கூறினால், அடுத்து அமர்ந்துள்ள குழந்தையைச் சரியான ஒலிமரபைக் கூறச் சொல்லவேண்டும். இவ்வாறாக வகுப்பறையை இனிப்பாக்கித் தொடரலாம். இது வலுவூட்டும் செயல்பாடாகும்.
கணக்கும் கற்பிக்கலாம். சாக்லெட் கவருக்குள், எண்கள் எழுதிவைக்கலாம். சாக்லெட்டைப் பிரிக்கும் போது, காகிதத்தில் உள்ள எண்ணை அறிமுகப்படுத்தலாம். இனிக்க இனிக்க கற்றுத்தரலாம். வலுவூட்டலுக்கு 1-ம் வகுப்பு குழந்தையை எண்களைச் சரியாக சொல்லச்சொல்லி சாக்லெட்டை தின்னச் செய்யலாம். இது தனிநபர் செயல்பாடு.
ஒருவர் சாக்லெட்டை பிரிக்கும்போது, அவர் எதிரில் உள்ளவரும் சாக்லெட்டை பிரிக்க வேண்டும். அவரவர் சாக்லெட் தாளில் எழுதியுள்ள எண்ணை கூறச் செய்யவும். அதன்பின் இருவரும் இணைந்து கூட்டல் / கழித்தல் செயல்பாட்டை செய்ய வேண்டும். இருவரும் சாக்லெட் தின்று கொண்டே கணக்குகளைச் செய்யலாம். இப்படி இனிக்க இனிக்க கணக்கு செய்யலாம். தவறாக கூறினால், ஆசிரியர் உதவிசெய்ய வேண்டும். இச்செயல்பாட்டை ஆங்கிலம், தமிழ் எழுத்துகள் அறிமுகப்படுத்தவும், வலுவூட்டவும் பயன் படுத்தலாம்.
- எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.