

இதுவரை நாம், தீவு நாடுகள் பற்றிப் பார்த்தோம். இல்லையா. மேலும் பல தீவு நாடுகள் இருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் நேரம் கிடைக்கும் போது தெரிஞ்சுப்போம். இப்போது, இதனுடன் தொடர்புடைய வேறெந்த வகை நாடுகளைப் பற்றி பேசலாம்?
‘கடல் நாடுகள்’
ஆஹா... அபாரம் செல்வி! நல்லா கவனிச்சுக்கிட்டு வர்றீங்கன்னு தெரியுது. நம்முடைய கோணம் என்னன்னு புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. பூமியை நாம் புவியியல் கோணத்துல அணுகுறோம். பொதுவா எல்லாரும் உலக நாடுகளை எப்படி வகைப் படுத்துவாங்க?
ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள். ஆம். இப்படி வகைப்படுத்துனா அதுக்கு என்ன பேரு தெரியுமா?இதற்கான வரைபடத்தை அரசியல் வரைபடம், ‘பொலிடிகல் மேப்’னு சொல்லுவாங்க. புவியியலுக்கு அது தேவை இல்லை. நமக்கு என்ன தேவை? ‘புவியியல் நோக்கு’
ஆமாம். அதைத்தான் நாம் பார்க்கிறோம். கடல் சூழ் நாடுகள், கடற்கரை நாடுகள், நான்கு பக்கமும் நிலத்தால் அடைக்கப்பட்ட கடல் இலா நாடுகள். அப்புறம்… இங்க வெயில் எப்படி இருக்கு… எவ்வளவு மழை பெய்யுது… என்னென்ன தாவரங்கள் விளையுது… முக்கியமா மலைகள், ஆறுகள், காடுகள் இருக்கா… என்னென்ன விலங்குகள், பறவைகள் உயிர்வாழ்கின்றன ஆகியவற்றை தெரிந்துகொள்ளும் நோக்கில் பேசுவதுதான் புவியியல் நோக்கு.
இயற்கையோடு ஒட்டி, ஒரு நாட்டைப் பார்க்கக் கத்துக்கணும் இல்லையா. அப்போதானே புவியியல் அறிவு வலுப்படும். இதோடு கூட, மக்கள் தொகை, மொழி, பண்பாடு அப்படியே கொஞ்சமா வணிகம், பொருளாதாரம் இவற்றையும் பார்த்துக்கிட்டு வர்றோம்.
இந்த வகையில இனிமே நாம் பார்க்கப் போறது. கடலோர நாடுகள். உலகத்துல மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?
195 நாடுகள் இருக்கு. இதுல, 44 நாடுகள்ல கடற்கரை இல்லை; என்ன அர்த்தம்? சுற்றிலும் வேறு நாடு அல்லது நிலப்பரப்பு இருக்கு. ஆமாம். உலக மக்கள் தொகையில சுமார் 7% பேர் இங்கே இருக்காங்க. அதாவது சுமார் 50 கோடி பேர் கடல் இல்லா நாடுகளில வாழறாங்க.
இந்த வாரக் கேள்வி
கடல் இருப்பதால் கிட்டும் நன்மைகள் என்ன?
(பயணிப்போம்)
கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான
வழிகாட்டி.
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com