

வழக்கத்திற்கு மாறான ஒன்றைக் கண்டதும், எதிர்பாராத ஒன்றைக் கண்டதும், ‘ஆகா!’ எனத் தோன்றும் உணர்வுதானே வியப்பு என்று கேட்டான் முகில். ஆம் என்றார் எழில். விளையாட்டு உள்ளிட்ட போட்டியைப் போராக நோக்கும் பொழுது மகிழ்ச்சி மறைவதைப்போல, மற்றவர்களை மட்டந்தட்டும் நகைச்சுவையால் பிறர் மனம் நோவதைப்போல, வியப்பால் ஏதேனும் எதிர்விளைவுகள் ஏற்படுமா? என்று வினவினாள் நன்மொழி.
அறிவழகன், மலரவன், இளஞ்செழியன் ஆகிய மூவரும் தமக்குப் பிடித்த நடிகர் ஒருவரின் படங்களை அடிக்கடி பார்ப்பார்கள். அறிவழகன் அவரது நடிப்பில் உள்ள நுட்பத்தை வியந்து பேசுவான். அவரிடமிருந்து அதனை இயக்குநர் எப்படி வெளிக்கொண்டு வந்திருப்பார் என ஊகித்துக் கூறுவான். மலரவன் அவரது நடிப்பை வியந்து, அவரைப்போலவே பேசி, நடிப்பான்.
வியப்பால் பாதிப்பு உண்டா?
அதற்காக அவனை யாராவது பாராட்டினால், தனது திறமையை எண்ணி வியப்பான். இளஞ்செழியன் அவரது நடிப்பை வியந்து அவருக்கு ’கட்அவுட்’ வைக்கவும் அதற்கு பால்முழுக்கு நடத்தவும் செய்வான். நாளடைவில், அறிவழகனின் வியப்புணர்வு அவனைத் திரைப்பட விமர்சகனாக்கியது. மலரவனின் வியப்பு தன்னைவியப்பன் என்னும் கேலிக்கு உள்ளாக்கியது. இளஞ்செழியனின் வியப்போ அவனை அந்நடிகருக்கு வெறியனாக்கியது. அதன் விளைவாக அவனது தனிப்பட்ட வளர்ச்சி பாதிப்பிற்கு உள்ளானது என்றார் எழில். இப்பொழுது கூறுங்கள், வியப்பால் எதிர்விளைவுகள் ஏற்படுமா, இல்லையா என்று என்று மேற்கொண்டு அவர் கேட்டார்.
அறிவழகனை போல தனியொருவரைக் கண்டு வியக்காமல், அவரது திறமையை, அதன் காரணியைக் கண்டு வியத்தல் உடன்பாட்டு விளைவுகளைத் தரும் என்றான் சுடர். மாறாக தனியொருவரைக் கண்டு வியந்து அதற்குள் தனது தனித்தன்மையை இழந்தால் மலரவனுக்கும் இளஞ்செழியனுக்கும் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள்தான் ஏற்படும் எனப் புரிகிறது என்றாள் மதி. அதேதான் என்றார் எழில்.
பெருமிதத்திலும் இந்த எதிர்மறை விளைவு ஏற்படுமா? என்று வினவினான் சாமுவேல். ஏற்படாமாலா இருக்கும்? என்றாள் அருட்செல்வி. அவ்வாறு ஏற்பட்ட எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறேன் என்றாள் கண்மணி. அருட்செல்வி தொண்டையைச் செருமிவிட்டு பேசத் தொடங்கினாள்.
கண்ணை மறைத்த பெருமிதம்
நான் முன்பு படித்த பள்ளியில் எனக்கு ஒரு தோழி இருந்தாள். அறிவாளி. பள்ளியில் நடைபெறும் கலை, இலக்கியம், விளையாட்டுப் போன்ற திறன்சார் போட்டிகளிலும் விநாடிவினா போன்ற அறிவுசார் போட்டிகளிலும் தவறாது கலந்து கொள்வாள். பெரும்பாலான போட்டிகளில் முதற்பரிசை அவள்தான் வெல்வாள். அதனால், அவளைப் பள்ளிக்குப் பெருமைசேர்ப்பவள் என்று பாராட்டுவர். அப்பாராட்டைக் கேட்டு அவள் பெருமிதம் கொள்வாள். தனது தலையை நிமிர்த்தி, தோளை விரித்து, கண்கள் ஒளிர, புன்னகையால் வெளிப்படுத்துவாள். அத்தோற்றத்தையும் பலரும் பாராட்டுவர். நாளடைவில் அப்பெருமிதம் அவளது கண்களை மறைக்கத் தொடங்கியது. மெல்ல மெல்லச் செருக்காக உருவெடுத்தது. எல்லோரையும் எடுத்தெறிந்து பேசத் தொடங்கினாள். அதன் விளைவாக அவளைப் பாராட்டியவர்களே அவளை வெறுக்கத் தொடங்கினர் என்று உணர்ச்சி ததும்பக் கூறினாள் அருட்செல்வி.
பெருமிதத்தின் எதிர்விளைவு எதுவெனப் புரிகிறதா? என்று சாமுவேலிடமும் கண்மணியிடமும் வினவினார் எழில். புரிகிறது என்றனர் அனைவரும். அப்படியானால் உடன்பாட்டு உணர்வுகளை வெளிப்படுத்தவே கூடாதா? என்று வினவினாள் பாத்திமா. அளவிற்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு. எனவே, அவ்வுணர்வுகள் மிதம்மிஞ்சிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் எழில்.
சில நொடி இடைவேளைக்குப் பின், உடன்பாட்டு உணர்வுகள் அனைத்திற்கும் அடித்தளமாய் மனநிறைவும் தேடியறியும் ஆவலும் இருப்பதைக் கவனித்தீர்களா? என்றார் எழில். சிறிது நேரச் சிந்தனைக்குப் பின், ஆம் என்றான் அருளினியன்.
(தொடரும்)
கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com