கழுகுக் கோட்டை - 13: தூண்டிய பசியும் தூண்டிலில் சிக்கிய மீனும்...

கழுகுக் கோட்டை - 13: தூண்டிய பசியும் தூண்டிலில் சிக்கிய மீனும்...
Updated on
2 min read

ஏரிக்கரை மரப்பொந்தில் கழுகு குஞ்சுகளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு வந்த குணபாலனுக்கு அவற்றுக்குத் தீனி போடுவதற்கு ஒரு யோசனை தோன்றியது. அதைச் செயல்படுத்த அவன் தங்கியிருந்த குடிலை நோக்கி ஓடினான். அங்கு அவன் வருவதற்கு முன் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்துக்கு வயதில் பெரியவரும் மூத்தவர்களும் தலைமை தாங்கினர். அங்குத் தங்கி போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட ஏனைய இளைஞர்களும் அங்கே ஒன்றாகக் குழுமியிருந்தனர். குணபாலனை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிய சேரலாதனும் அவரகளுக்கு நடுவில் வீற்றிருந்தார்.

காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெரியவர், புரட்சிப்படை தலைவனைக் கைது செய்துவிட்டேன் என்று இரண்டு மாதங்களுக்கு முன் திருச்சேந்தி அறிவித்தார். ஆனால், அந்த நபரோ முகத்தில் முகமூடி அணிந்திருந்தான். எனவே அவன் யார் என்று நமக்கோ இந்த ஊருக்கோ நாட்டுக்கோ தெரியாது. ஆனால், அவனைச் சிறைப்பிடித்து அழைத்துச் சென்ற திருச்சேந்திக்கு அவன் யார் என்று நன்றாகத் தெரிந்திருக்கும். ஒருவேளை, மன்னரை சமாதானப்படுத்த திருச்சேந்தியின் நாடகமாகக் கூட அஃது இருக்கலாம்.

ஆனால் அஃது அத்தனையும் பொய் என்பதை நாம் மன்னருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் உணர்த்தியாக வேண்டும். உண்மையான புரட்சிப் படை இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதையும், அப்பாவி மக்களின் உரிமைகளுக்காக அதன்போராட்டம் இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்பதையும் நாம் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் அந்தக் கூட்டத்தின் தலைவனாக அறியப்பட்ட சேரலாதன். மேலும், இப்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது இருப்பை மன்னனுக்கும் திருச்சேந்திக்கும் காட்ட வேண்டும். அதற்கான நேரமும் வந்துவிட்டது என்ற அவரது பேச்சை அனைவரும் ஆமோத்தித்தனர். இளைஞர்கள் அனைவரும் கரகோஷம் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

கூட்டத்தில் ஓர் இளைஞன், நீங்கள் சொல்வது மிகவும் சரி. உடனேஅதற்கான ஏற்பாட்டைச் செய்யவேண்டும். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நண்பர்களிடமே கத்திச்சண்டை போட்டுப் பயிற்சி எடுப்பது? எதிரிகளின் குருதியை வாள் முனையால் பரீட்சித்துப் பார்க்கவே ஆவலாகஉள்ளோம் என்றான். அதற்கு முதலில்நமது கூட்டத்தைச் சேர்ந்த சுத்த வீரன் ஒருவனைத்தான் அனுப்ப வேண்டும். அவன் நேராக அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் நமது மக்கள் புரட்சிப்படை பற்றியும் நமது கூட்டத்தின் தலைவனை இன்னும் எவரும் பிடித்துவிடவில்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேலும் செய்தி கொண்டு செல்லும் தூதுவனைக் கொல்லும் எவனும் மன்னன் இல்லை, வீரனும் இல்லை என்பதைத் தெரிவித்து,முடிந்தால் உண்மையான புரட்சிப்படைத்தலைவனைக் கைது செய்து பார்! என்றும் செய்தி அனுப்ப வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

என்னது மன்னரின் அரண்மனைக்கு நம் வீரன் ஒருவன் சென்று இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டுத் திரும்பவும் உயிரோடு வர முடியுமா? இது தற்கொலைக்குச் சமம் இல்லையா? நாம் கோழைகள் அல்லவீரர்கள் என்பதைத் தெரியப்படுத்தித்தான் ஆக வேண்டும். சரி யார் செல்வது? என்ற கேள்வி எழுந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும், ”நான் செல்கிறேன், நான் செல்கிறேன்” என்று தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டார்கள். அந்த நேரத்தில்தான் குணபாலன் கழுகுக் குஞ்சுகளுக்குத் தீனி போடும்யோசனையில் அங்கே வந்தான். அவன் அங்குமிங்கும் ஓடி எதையோ தேடினான்.

அதனைக் கண்ட பெரியவரும், என்ன தம்பி தேடுகிறாய்? என்றார். ஒன்றுமில்லை, இங்கு ஒரு தூண்டில் இருந்தது. அதைத்தான் தேடுகிறேன் என்றான் குணபாலன். உடனே ஓர் இளைஞன் ஓடிவந்து குணபாலன் தேடிக்கொண்டிருந்த தூண்டிலை எடுத்து வந்து குணபாலனிடம் கொடுத்தான். நன்றியுடன் அதனைப் பெற்றுக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் குணபாலன். அவன் சென்றதும் அந்தப் பெரியவரும் கூட்டத்தின்தலைவன் சேரலாதனும் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். இவன்முக்கால்வாசி குணமாகிவிட்டான். இன்னும் ஒரு மாத காலம் ஓய்வெடுத்தால், முற்றிலும் சரியாகிவிடுவான். அப்போது இவனை நாம் நமது தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாமா, அல்லது விட்டு விடலாமா? என்றார் பெரியவர்.

எப்படி அவ்வளவு சுலபத்தில் இவனைவிடுவது? இவனது கொள்கையும் நமது கொள்கைகளும் கிட்டத்தட்ட ஒத்துப் போகின்றன. இவனும் அரசாங்கத்தை எதிர்த்துப் பேசிக் கொடிய தண்டனைக்கு ஆளாகி, அதிலிருந்து தப்பித்துதான் இங்கு வந்துள்ளான். மேலும், நமக்கு நன்றி கடன்பட்டவன். எனவே, நாம் அவனால் ஆகக்கூடிய உதவியை அவனிடம் கேட்கலாம். அதற்கான சமய சந்தர்ப்பம் இப்போதுகூடி வந்திருக்கிறது’ என்றார் சேரலாதன். அதற்கு அந்தப் பெரியவரும், ‘நீ சொல்வதும் சரிதான்’ என்றார். தூண்டிலை எடுத்துக்கொண்டு ஏரிக்கரைப் பக்கம் வந்த குணபாலன் மளமளவென்று ஏரியில் தூண்டிலைப் போட்டான். முதலில் எந்த மீனும் வந்து அவன் போட்ட தூண்டிலைச் சீந்துவதாக இல்லை. ஆனாலும் மனம் தளராமல் தூண்டில் தக்கை மீதே பார்வையை அசைக்காமல் வைத்து இருந்தான்.

(தொடரும்).

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in