

பகைவர் வீட்டுக்குப் போனால் பத்து மிளகைக் கொண்டு போ என்று சொல்வார்கள். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மருத்துவ குணம் கொண்ட மிளகு, இன்று பயன்படுத்தப்படும் மிளகாயிற்கு முன்பு காரத்திற்காக, முதலில் பயன்படுத்தப்பட்ட பொருளாகும்.
பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரம். மிளகு என்றும் வால் மிளகு என்றும் இரு வகைகள் மிளகில் உண்டு. இத்தாவரத்தின் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு, நறுமண பொருளாக உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் உயர்தர மிளகு: மிளகு பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்புமிளகு, பச்சை மிளகு எனப் பலவகைகள் உண்டு. மிளகு கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் அதிகளவில் பயிரிடப்படுகின்றது.
மலபார் மிளகு, தலச்சேரி மிளகு என அவை விளையும் பிரதேசங்களின் பெயர்களைச் சேர்த்துச் சொல்வார்கள். இவ்விரண்டும் இந்தியாவின் உயர்ரக மிளகுகள். அதுவும் கேரளாவின் தலச்சேரியில் விளையும் மிளகுதான் உலகின் முதல் தர மிளகாக மதிக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால் தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது.
இலக்கியத்தில் மிளகு
…யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி…
கி.மு. 2-ம் நூற்றாண்டில் ரோமானியர்களும் கிரேக்கா்களும் வாசனைப் பொருட்களைத் தேடி இந்தியாவுக்கு வந்தனர். தங்கத்தைக் கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக வாசனை பொருட்களை வாங்கிச் சென்றதாக இலக்கியக் குறிப்புகள் சொல்கின்றன.
..மிசைஅம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால்…. மீன் வகைகளும் பிற பொருட்களும் மிளகு மூட்டைகளும் குவிந்திருக்கும் அளவுக்குப் பெரிய அளவில் வீடுகள் என்று புறநானூற்று வரி குறிப்பிடுகின்றது.
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்… பட்டினப்பாலை.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான நிமிர்ந்து வேகமாகச் செல்லும் குதிரைகளும், உள்நாட்டிலிருந்து வண்டியின் மூலம் வந்த கரிய மிளகு மூட்டைகளும் காணக்கிடைக்கின்ற வீதி என்று பூம்புகாரின் வளத்தைச் சொல்லும் பாடல்.
“தமிழா்கள் பொதுவாகத் தாளிப்பதற்கு மிளகைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிசைந்த தயிரோடு, நெய்யில் தாளித்த கடுகு, மிளகு சேர்த்துமோர்க்குழம்பு செய்ததாக குறுந்தொகை வருணிக்கிறது. இறைச்சியைத் துண்டுகளாக்கி, இரும்புக் கம்பிகளில் கோர்த்து அதன் மேல் உப்பும் கருமிளகுப் பொடியும் கடுகும் தூவி அதை நெருப்பில் வாட்டி உண்ணும் பழக்கம் போர் வீரா்களுக்கு இருந்திருக்கிறது.
தமிழ்நாட்டுச் சமையல்: தமிழ்நாட்டு உணவு வகைகளான பொங்கல், மிளகு ரசம், மிளகு சோறு, மிளகு கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ குணங்கள்: சித்த மருத்துவத்தில் அதிகளவு மிளகு பயன்படுத்தப்படுகின்றது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலில் காய்ச்சலைப் போக்கும் தன்மை கொண்டது. ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று உண்பது நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மையும், கொழுப்பு அடைப்புகளைக் கரைக்கும் சக்தியும் மிளகுக்கு உண்டு.
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியா், அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்; தொடர்புக்கு: devavino86@gmail.com