முத்துக்கள் 10 - இப்படியும் ஒரு பெண் பானுமதி

முத்துக்கள் 10 - இப்படியும் ஒரு பெண் பானுமதி
Updated on
2 min read

தென்னிந்திய சினிமாவின் ஆளுமைகளுள் ஒருவரும் 3 முறை தேசிய விருதை வென்றவருமான பி.பானுமதி (P.Banumathy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோலுக்கு அருகில் உள்ள தோட்டவரம் என்ற கிராமத்தில் பிறந்தார் (1925). சிறுவயதிலேயே தந்தையிடம் இசை கற்கத் தொடங்கினார். 13 வயதில் ‘வரவிக்ரயம்’ தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாகப் பிரவேசித்தார்.

# முதல் திரைப்படமே வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்தார். தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

# ‘சித்ரபகாவலி’, ‘நல்லதம்பி’, ‘ரத்னகுமார்’, ‘சண்டிராணி’, ‘மலைக்கள்ளன்’, ‘ரம்பையின் காதல்’, ‘அம்பிகாபதி’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘நாடோடி மன்னன்’, ‘அன்னை’ உள்ளிட்ட இவரது படங்கள் குறிப்பிடத்தக்கவை. படங்களில் பின்னணி பாடிய இவர், தனித்துவம் வாய்ந்த தன் குரலால் ரசிகர்களை வசீகரித்தார். ‘அழகான பொண்ணு நான்’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘பூவாகி காயாகி கனிந்த மரம்’ உள்ளிட்ட இவரது பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

# தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஒரு சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்தார். திருமணமான பிறகு தன் கணவருடன் இணைந்து, திரைப்படங்களைத் தயாரித்தார். ‘பரணி ஸ்டுடியோஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் ஸ்டுடியோவையும் உருவாக்கினார்.

# நிறைய சிறுகதைகளையும் எழுதினார். இவரது ‘அத்தகாரி கதலு’ என்ற சிறுகதை சிறந்த சிறுகதைக்கான ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

# படங்களை இயக்கியும் வந்தார். சுமார் 16 படங்களுக்கு மேல் இயக்கிய பானுமதி, அப்படங்களுக்கான கதை, வசனம், இசை போன்றவற்றையும் தானே கவனித்துக் கொண்டார். இவர் தமிழில் தயாரித்த ‘இப்படியும் ஒரு பெண்’ சிறந்த இசைப்படமாக உலகப் பெண்கள் ஆண்டான 1975-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

# ‘பக்த துருவ மார்க்கண்டேயா’ என்ற படத்தை, தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளத்தில் தயாரித்தார். எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை நடிக்க வைத்து, சாதனை புரிந்தார். 1970-ல் ‘பத்துமாத பந்தம்’ படத்தில் முதன் முதலாக பாடலை இயற்றிப் பாடினார்.

# 3 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசு ‘கலைமாமணி’ விருது அளித்தது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னை இசைக் கல்லூரியில் 3 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினார். திரைத்துறையில் இவரது பங்களிப்புகளுக்காக பத்ம, பத்மபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றார்.

# சென்னை சாலிகிராமத்தில் டாக்டர்பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றை நிறுவி, அதன்மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கிவந்தார். லலித் கலா அகாடமியின் உறுப்பினராக 5 ஆண்டுகளும் ஆந்திர சாகித்ய அகாடமியின் உறுப்பினராக 10 ஆண்டுகளும் பணியாற்றினார்.

# நடிகை, பாடகி, எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், சமூக சேவகி எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவரும் சகலகலாவல்லி, அஷ்டாவதானி, பிறவிக் கலைஞர் என்றெல்லாம் போற்றப்பட்டவருமான பி.பானுமதி 2005-ம் ஆண்டு தமது 80-வது வயதில் மறைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in