

பொதுவாக இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் இந்த அழற்சி நோய், பெண்களைக் காட்டிலும் ஆண்களையே சற்று அதிகம் பாதிக்கிறது. வெறும் 1-7 மிமீ சுற்றளவு உள்ள குடல்வாலுக்குள் பழ விதைகள், குடல் புழுக்கள், fecolith எனப்படும் மலக்கல் என ஏதேனும் சென்று அடைத்துக் கொண்டால் அதில் ஏற்படும் அழற்சியும், அதைத் தொடர்ந்து அங்கு ஏற்படும் பாக்டீரியாத் தொற்றுகளும் அப்பெண்டிசைட்டிஸ் ஏற்பட முக்கியக் காரணம்.
சுகாதரமற்ற உணவு மற்றும் நீர், ஆரோக்கியமற்ற துரித உணவு பண்டங்கள், அதன் காரணமாக ஏற்கெனவே உள்ள மலச்சிக்கல், அது உருவாக்கும் மலக்கல் ஆகியவை மூல காரணங்களாக அறியப்படுகிறது.
திடீரென்று தோன்றும் கடுமையான வயிற்று வலி, தொட்டவுடன் அதிகரிக்கும் வலி (rebound tenderness) அதிகப்படியான வாந்தி, அதிகப்படியான காய்ச்சல், வலியின் காரணமாக மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தீவிரக் குடல்வால் அழற்சி என இதனை அழைக்கும் மருத்துவர்கள், இந்த தீவிர அழற்சியைத் தாமதிக்கும் போது சமயங்களில் சீழ்கட்டியாக மாறி, குடல்வால் வெடித்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர். ஆனால், அதுவே இந்த அறிகுறிகள் சற்று மிதமாக இருக்கும் நிலையை நாள்பட்ட குடல்வால் அழற்சியால் (chronic appendicitis) இவ்வளவு பாதிப்பில்லை என்றும் கூறுகிறார்கள்.
ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேனிங் பரிசோதனை, தேவைப்பட்டால் சி.டி. ஸ்கேன் சோதனைஆகியவற்றின் மூலம் அப்பெண்டிசைட்டிஸ் உறுதிசெய்யப்பட்டால், அதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே பரிந்துரையாக சொல்லப்படுகிறது. அப்படி இல்லையென்றால் குடல்வால் அழுகி வெடிக்கும் நிலை உயிருக்கே ஆபத்தானது.
அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சையை ஓபன் சர்ஜரி என்று வயிற்றைத் திறந்து செய்யும் முறையிலும், லேப்ராஸ்கோப்பி எனும் தழும்புகளற்ற நுண்துளை அறுவை சிகிச்சை முறையிலும் செய்யலாம். என்றாலும், இதில் தழும்புகளற்ற என்பதோடு வலி நிவாரணமும், விரைவிலேயே இயல்புநிலைக்குத் திரும்பும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால் சமீபகாலமாக லேப்ராஸ்கோப்பி முறை தான் பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக இப்படி குடல்வாலை நீக்குவதால் அருகிலுள்ள நிணநீர் செல்கள் இதன் பணியைச் செய்யும் என்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை. கோகுல் கேட்டது போல, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்குப் பின், மீண்டும் நகுல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்பதே உண்மை.
மீண்டும் அப்பெண்டிக்ஸ் அழற்சி வராமல் தடுக்க நார்சத்து நிறைந்த இயற்கை உணவுகள், அதிகப்படியான தண்ணீர், அனைத்திற்கும் மேல் பொது சுகாதாரம் அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும்.
(ஆலோசனை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர் ;தொடர்புக்கு: savidhasasi@gmail.com