

தனது வயதைச் சேர்ந்த பிரபுக்களின் பிள்ளைபோல் ஏகபோக வாழ்விலிருந்து சிமோன் பொலிவாரால் விடுபட முடியவில்லை. 15ஆவது வயதில் உயர்கல்விக்காக ஸ்பெயின் சென்றபோது, அங்கிருந்த மரியா தெரசா என்ற பெண்ணைக் காதலித்து தன் 20வது வயதில் திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் வெனிசூலா திரும்பி ஆடம்பரமான இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள். ஆனால், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அடுத்த ஆண்டே (1803) மரியா இறந்துபோனார். சிமோன் வாழ்வில் பேரிடியாக இருந்தது. தன் அன்பிற்குரியவர்களை அடுத்தடுத்து இழந்துபரிதவித்தார். வெனிசூலாவில் இருந்து துக்கத்தை தாங்க முடியாமல் ஸ்பெயின், பிரான்ஸ் என்று ஊர் ஊராகச் சுற்றினார். அவர் சென்ற இடமெல்லாம் மக்களாட்சி பற்றியும் விடுதலைப் பற்றியும் கீதம் ஒலித்தன.
தென்னமெரிக்காவின் வாஷிங்டன்: கி.பி. 1806இல் பிரான்சிஸ் டே மிராண்டா என்பவர் ஸ்பெயின் படைகளுக்கு எதிராக வெனிசூலாவில் போர் தொடுத்த செய்தியை அறிந்து, அவரோடு சேர்ந்து போர்புரிந்து தாய் நாட்டை விடுவிக்க கிளம்பினார். ‘patriotic society’ (‘தேசாபிமானி சங்கம்’) என்றொரு ரகசிய இயக்கத்தைத் தொடங்கி 1811ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெனிசூலா விடுதலை அடைந்ததாக பிரகடனம் செய்தனர்.
ஆனால், புரட்சி படைகள் பலம் குன்றியிருந்ததால், அடுத்த ஆண்டே மீண்டுமதை ஸ்பெயின் கைப்பற்றியது. மிராண்டா சிறையிலடைக்கப்பட்டார். சிமோனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, விடுவித்தார்கள். நிர்க்கதியாக நின்றபோதும் வட அமெரிக்கா போல், தென்னமெரிக்காவை ஒன்றிணைக்க வேண்டுமென்று கனவு கண்டார் சிமோன்.
கி.பி.1813இல் படைகளைத் திரட்டிமீண்டும் வெனிசூலாவிற்கு விடுதலைக் கொடுத்தார். இராட்சத பலம் பொருந்தியஸ்பெயின் மீண்டுமதைக் கைப்பற்றியது. தொடர் தோல்விகளால் பாடம் கற்றுக்கொண்டு அடுத்த 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக போர் புரிந்தார். வெனிசூலாவின் விடுதலைக்கு அடுத்து ஆண்டிஸ் மலைத்தொடரின் பனியில் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணித்து கொலம்பியா, எக்குவடோர், பெரு முதலிய பிரதேசங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஸ்பெயின் நாட்டு இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு இரையாகாமல் பல போர்களை வென்றுக் காட்டினார். ஹெய்தி நாட்டிலிருந்த ஆப்பிரிக்க அடிமைகளோடு சேர்ந்து, தென்னமெரிக்காவில் அடிமை ஒழிப்பில் ஈடுபட்டார்.
ஜார்ஜ் வாஷிங்டன் குடும்பத்தினர் ஒருதங்கப் பதக்கத்தை அனுப்பிவைத்து, ‘தென்னமெரிக்காவின் வாஷிங்டன்’ என்றபட்டம் வழங்கினர். தன் குடும்ப உறுப்பினர்களின் தொடர் இழப்பை ஈடுகட்ட, தன் சொந்த நாட்டையே குடும்பமாக நேசித்து விடுதலை பெற்று ஒன்றிணைக்க முயன்றவரின் கதை இது. ‘விடுதலை தந்தவன்’ என்று பொருள்தரும் ’லிபரேட்டார்’ என்ற பட்டத்தை மக்கள் வழங்கினார்கள். ஆனால், உள்நாட்டு கலவரத்தால் ஒன்றியம் உடைந்துபோனது.
காசநோயின் பாதிப்பால் 1842ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி சான்டா மார்டாவில் சிமோன் இறந்துபோனார். ஆனால், அவர் துரோகத்தால் இறந்துபோனதாக சிலர் சொல்வதுண்டு. தன் பரம விரோதியான ஸ்பானிய அதிகாரியின் வீட்டில் அவர் இறந்துபோனது மேலுமதற்கு வலுவூட்டுகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சிமோன் பொலிவாரின் நினைவாக தென்னமெரிக்காவில் அவர் விடுதலை வாங்கித் தந்த ஒரு நாட்டிற்கு பொலிவியா எனப் பெயர் சூட்டப்பட்டதோடு, உலகின் 28 நாடுகளில் ஏதோவொரு பகுதிக்கு அவர் நினைவாக பெயர் சூட்டியிருக்கின்றனர். சொந்தமின்றி வாழ்ந்தாலும், தென்னமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் இன்றும் அவர் பெயரில் பல சிமோன்கள் வளர்ந்து வருகின்றனர்.
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com