நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 41 - ‘விபத்து' எமனிடம் இருந்து காக்கும் ‘வாகன’ காப்பீடு

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 41 - ‘விபத்து' எமனிடம் இருந்து காக்கும் ‘வாகன’ காப்பீடு
Updated on
2 min read

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு சராசரியாக 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2022ம் ஆண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 622 பேர் உயிரிழந்தனர். இதில் 17 ஆயிரத்து 884 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் ஒரு நாளில் சராசரியாக‌ 48 பேர் உயிரிழப்பதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. இந்தஅவசர காலத்தில் காலையில் தூங்கி எழுந்ததில் இருந்து இரவு மீண்டும் தூங்கும் வரை வாகனங்களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருக்கிறோம். அதிலும் குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் அனைவரும் வாகனங்களிலே உலா வருகின்றனர்.

அவர்களுக்கு திடீரென ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அவர்களை யார் காப்பாற்றுவது? அந்த குடும்பத்தை யார் காப்பாற்றுவது? எதிரில் இருந்தவரை யார் காப்பாற்றுவது? அந்த வாகனத்தின் சேதாரத்தை யார் ஏற்பது? இதுபோன்ற அடுக்கடுக்கான‌ கேள்விகளுக்கு ஒரே பதில், ''மோட்டார் வாகன காப்பீடு'' (Motor vehicle Insurance) என்பதே ஆகும்.

வாகன காப்பீடு கட்டாயம்: ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு அனைவருக்கும் அவசியமானது. இருப்பினும் சட்டப்படி கட்டாயம் இல்லை. ஆனால், மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் மோட்டார் வாகன சட்டப்படி, வாகன காப்பீடு கட்டாயம் எடுக்க வேண்டும்.

ஏனெனில் வாகனம் பொது சாலையில் பயணித்து விபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்களுக்கும், பிறரின் வாகனங்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. அதற்கு இழப்பீடு வழங்க‌ வேண்டும் என்பதற்காக வாகன‌ காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன திருட்டு, விபத்து போன்ற‌ சேதாரங்களுக்கு இழப்பீடு பெற முடியும். இதனை எடுக்காமல் சாலையில் வாகன ஓட்டுவோரிடம் அரசு அபராதம் வசூலிக்கிறது.

வாகன காப்பீட்டின் வகைகள்

வாகன‌ காப்பீடு மூன்று வகைப்படும் :

1. தனது வாகனத்தை (Own Damage Insurance) காக்கும் காப்பீடு. இந்த பாலிசி திட்டத்தில் விபத்தினால் ஏற்படும் தன் வாகனத்தின் சேதாரம், காணாமல் போவது, முக்கிய பொருட்கள் காணாமல் போவது ஆகியவற்றுக்கு இழப்பீடு பெற முடியும்.

2. எதிரில் வந்த மூன்றாம் நபர் (Third Party Insurance ) காப்பீடு. இந்த பாலிசியை ஒவ்வொரு வாகன உரிமையாளரும் கட்டாயமாக எடுக்க வேண்டும். மூன்றாவது நபருக்கான பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவதற்கு இது முக்கியம்.

3. இரு தரப்பு வாகனங்கள் மற்றும் உயிர்களுக்கான (Comprehensive Insurance) விரிவான காப்பீடு.

இதில் பாலிசி எடுத்தவரின் பாதுகாப்பு, உடன் செல்பவரின் பாதுகாப்பு, மூன்றாம் நபர் பாதுகாப்பு, இரு தரப்பு வாகனங்களுக்கான‌ ஏற்படும் சேதம், அதில் பொருத்தப்பட்ட முக்கிய பொருட்களுக்கான நிவாரணம் உள்ளிட்டவற்றுக்கு உதவுகிறது.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் வாகன எண்ணிக்கையில் 2 சதவீத வாகனங்களே இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், வாகன விபத்துகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. உலக நாடுகளில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் விரிவான காப்பீட்டை எடுத்திருக்கின்றனர். இந்தியாவில் 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களே காப்பீடு வைத்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு விபத்து ஒட்டுமொத்த குடும்பத்தையே புரட்டி போட்டுவிடும். ஒரு சிறுதொகையை செலவிட்டு காப்பீடு எடுத்துக்கொண்டால், அதில் இருந்து குடும்பத்தையே பாதுகாத்துக்கொள்ள முடியும். இனி வாகனத்தில் ஏறும் முன்காப்பீடு செய்யப்பட்டுள்ளதா? என யோசித்துவிட்டே ஏறுவோம்.

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in