வெள்ளித்திரை வகுப்பறை 12: மாலை முழுவதும் நல்ல விளையாட்டு

வெள்ளித்திரை வகுப்பறை 12: மாலை முழுவதும் நல்ல விளையாட்டு
Updated on
2 min read

போர்ட்டர் தனது அணியினரின் தோல்விக்காக வருந்தவில்லை. குழு உணர்வு இல்லையே! ஒற்றுமை இருந்திருந்தால் ஒரு புள்ளி கூட எடுக்காமல் தோல்வியை தழுவும் அவல நிலை வந்திருக்காதே! என்றெல்லாம் அவர்மனம் துடிக்கிறது. கோபம் கொப்பளிக்கிறது. சிறார்கள் மீது கொட்டித் தீர்த்து விட வேண்டும் என்ற துடிப்பு அதிகரிக்கிறது. விரைந்து வருகிறார். வருத்தம் தோய்ந்த முகங்கள். கண்ணீர், துவண்ட உடல் என தனது அணியினரைப் பார்க்கிறார். மனதில் ஓர் எண்ணம். சமூக விரோதச் செயல்களைச் செய்த போதும் தண்டனை பெற்ற போதும் எள்ளளவும் வருந்தாத இவர்கள் முதன் முதலாக தங்களது செயலுக்காக வருந்துகின்றனர்.

இன்றைய விளையாட்டில் நீங்கள் நிறைய தவறுகளைச் செய்தீர்கள். நானும் தவறு செய்திருக்கிறேன். ஆனால் நம்மோடு விளையாடியவர்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்கள். நாம் மூன்றேமாத பயிற்சியில் அவர்களுக்குக் கடினமான போட்டியாளர்களாக இருந்தோம். இத்தொடரில் இன்னும்போட்டிகள் இருக்கின்றன.

சீர்த்திருத்தப்பள்ளிக்கு வந்த பிறகு விளையாட்டு அணியில் சிலர் இனி விளையாடப்போவதில்லை என்று முடிவு செய்கின்றனர். அவர்களின் நிலையைப்பார்த்த அதிகாரிகள் இதனால் அவர்கள் நடத்தையில் வேறேதும் தவறான மாற்றம் வந்தால் சிரமம். எனவே விளையாட்டு அணி வேண்டாம் என்று முடிவு செய்கின்றனர். நன்றாக விளையாடிய போது கைதட்டல்கள் கிடைத்தன.

விளையாட்டு பயிற்சி: மறுநாள் காலையில் சிறார்கள் தாங்களாகவே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகளுக்கு ஆச்சரியம். போர்ட்டர் மகிழ்கிறார். சிறுசிறு பாராட்டுகள் தந்த மாற்றம் அது. பாராட்டின் ருசி வலிமையானது. நட்பு மலர்ந்ததால் பழைய குழுப்பகை மறைகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் மஸ்டாங்ஸ் அணிக்கு ஒரிரு வெற்றிகள். வெற்றியின் சுவை அவர்களுக்குப் புதிது. பார்வையாளர்கள் தரும் ஊக்கம் புதிது. மனிதம் மலர்கிறது. நம்பிக்கை பிறக்கிறது.

விறுவிறுப்பான ஒரு போட்டியின் முடிவில் வெற்றிக் களிப்பில் மஸ்டாங்ஸ் அணியினர். பார்வையாளர் பகுதியிலிருந்து ஒருவன் விரைந்து வருகிறான். வெளியே தனது குழுவைச் சேர்ந்த அவன் வருவதன் காரணத்தை ஊகித்த மஸ்டாங்ஸ் அணியின் வில்லியும் விரைகிறான். வெளியிருந்து வந்தவன் துப்பாக்கியை எடுத்து விளையாட்டு வீரர்களுள் ஒருவரைச் முயல்கிறான். வில்லி காப்பாற்ற முனைந்ததால் கையில் குண்டு பாய்கிறது. காவலர்கள் வந்து சுட்டவனை மடக்கிப் பிடிக்கின்றனர்.

துளிர்க்கும் நம்பிக்கை: சீர்திருத்தப்பள்ளி மாணவர் சுடப்பட்டது பரபரப்பான செய்தியாகிறது. மஸ்டாங்ஸ் அணிக்குப் பேரிடி. பெருந்தடை. இது குறித்து விசாரிக்க ஒருகுழு அமைக்கப்படுகிறது. வெளியேஉள்ள குழுச் சண்டை வெறி இவர்களுக்குள் மறைந்திருக்கிறது. வில்லியின் செயலே எடுத்துக்காட்டு. தனது குழுவினரிடம் இருந்து எதிர்க் குழுவைச் சார்ந்தவனைக் காப்பாற்றியிருக்கிறான். எனவே விளையாட்டு அணியைப் போட்டிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று போர்ட்டர் வாதிடுகிறார். விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் காவல் துறை முன்வருகிறது. மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறது.

வாழ்க்கையில் மாற்றம்: மஸ்டாங்ஸ் அணியினர் போட்டித் தொடரில் வெற்றி பெறவில்லை என்றாலும் சில போட்டிகளில் வெற்றியை ருசிக்கின்றனர். தொடர்ந்த பயிற்சியாலும் விடாமுயற்சியாலும் அடுத்தடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றனர். வெற்றிச் சுவை. சமூகத்தின் பாராட்டு. அங்கீகாரம். அன்பின் அணைப்புகள். வாழ்வைஇழந்தவர்கள் அல்ல, வெற்றியாளர்கள். இவையெல்லாமே கில்பாட்ரிக்ஸ் சீர்த்திருத்த முகாமில் இருந்த சிறார்களிடம் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தின.

அங்கிருந்து வெளியேறியவர் களுள் பலரும் வன்முறைக் குழுக்களில் இருந்து விலகினர். 5 பேர்மட்டுமே மீண்டும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றனர். விளையாட்டின் மூலமே வளரிளம்பருவக் குழந்தைகளிடம் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் கில்பாட்ரிக்ஸ் சீர்த்திருத்த முகாமின் காப்பாளர் ஜீன் போர்ட்டரின் முயற்சி.

பள்ளிகளில் வாரம் இரண்டுபாடவேளைகள் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பாட ஆசிரியர்களால் கடன் பெறப்படுகின்றன. அவர்களையும் குறைசொல்ல முடியாது. அவ்வளவு அதிகமான பாடச்சுமை இருக்கிறது.

மற்ற வகுப்புகளில் ஒன்பது அல்லதுபத்து மாதங்களில் நடத்துமளவுஉள்ள பாடப்பகுதிகளைப் பொதுத்தேர்வு உள்ள வகுப்புகளுக்கு ஆறேமாதங்களில் முடிக்க வேண்டிய கட்டாயம். அதனால்தான் காலை, மாலை என எல்லா நேரமும் சிறப்பு வகுப்புகள். அடிக்கடி தேர்வுகள். இத்தனை அழுத்தங்களைத் தாங்கஇயலாதவர்கள் என்ன செய்வார்கள்? நம்மால் இது முடியாது என்ற மனநிலைக்குள் எளிதில் தள்ளப்படு கின்றனர்.

அதிக பாடங்கள்: வளரிளம்பருவத்தினர் பயிலும் வகுப்புகளில் பள்ளி நேரத்திற்கு ஏற்ப பாடப்பகுதிகளை குறைக்க வேண்டும். கற்பித்தல் முறைகள் செயல்பாடுகளாக மாறவேண்டும். உயர் கல்வி பயிலும் ஆர்வத்தை துண்டுவதாக பாடங்கள் இருக்க வேண்டும். கலை, இலக்கியச் செயல்பாடுகள் வேண்டும்.

தினம்தோறும் மாலை வேளைகள் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உடலும்உள்ளமும் வலிமையான இளம் தலைமுறையை உருவாக்க முடியும்.வளரிளம்பருவத்தினர் மற்றும் இளம்பருவத்தினரே நமது நாட்டின் மகத்தான மனித வளம். அவர்களைச் சரியாக ஆற்றுப்படுத்துவதில் தான் நாம் அதிகக் கவனம் வைக்க வேண்டும். அதுவே நமது கடமை.

- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், ‘கலகல வகுப்பறை’, ‘சீருடை-ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்கள்’ நூல்களின் ஆசிரியர். தொடர்பு: artsiva13@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in