கதை கேளு கதை கேளு 41: அன்றாட வாழ்வில் அறிவியல்

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
Updated on
2 min read

அறிவியலோடு நம் வாழ்க்கை பின்னி பிணைந்துள்ளது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியது தற்போதைய அத்தியாவசிய தேவை. குழந்தைகள் இயற்கையிலேயே ஆர்வம் மிகுந்தவர்கள். அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அவர்களுக்கு அறிவியலோடு ஒப்பிட்டுக் கற்பிப்பது அவசியம்.

மருதாணி இலையின் சிவப்பு நிறம் கைகளில் ஒட்டிக்கொள்வது எப்படி? ரத்தம் உறைவது எப்படி? பூனை கீழே விழுந்தால் உயிர் பிழைப்பது எப்படி? முட்டை ஏன் நீள்வட்டமாக இருக்கிறது? மழை குளிர்காலத்தில் ஜன்னலோடு கதவு பிடித்துக்கொள்வது ஏன்? இப்படிஏராளமான கேள்விகளைக் கேட்டு,அதற்கு ஆர்வமூட்டும் விடைகளையும் பகிர்ந்துள்ளார் ஆசிரியர் ஆதிவள்ளி யப்பன்.

எங்கும் அறிவியல்: அன்றாட வாழ்க்கையில் கண்ணால் காணும் நிகழ்வுகளுக்கு காரணம் புரியஆரம்பித்தால், குழந்தைகளுக்கு அறிவியல் மீது நாட்டம் ஏற்படும்தானே? இயற்கை நிகழ்வுகளை அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகச் செய்வது, மாணவர்களுக்குள் மறைந்திருக்கும் அறிவியல் சிந்தனையை உணரச் செய்வது, தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தையும் அறிவியலோடு ஒப்பிடும் மனநிலைக்கு குழந்தைகள் தயாராவது அவசியம்.

மின்சாரக் கம்பியை மனிதன் தொட்டால் ஏற்படும் மின்அதிர்ச்சி, பறவைகள் மின்கம்பியில் அமர்ந்து ஊஞ்சலாடினாலும் ஏன் ஏற்படுவதில்லை? என்று பார்க்கும், கேட்கும் நிகழ்வுகளில் எல்லாம் அறிவியல் சிந்தனை வெளிப்பட வேண்டும். எல்லாவற்றிலும் உள்ள அறிவியலை ஆர்க்கிமிடிஸ் கண்களில் காண, குழந்தைகளுக்கு சொல்லித்தர இந்தப் புத்தகம் உதவும்.

ஏன் வியர்க்கிறது? - கடற்கரைப் பகுதிகளில் அதிகம் வியர்ப்பது ஏன்? காற்றில் கலந்துள்ள நீர் - நீராவியின் அளவே ஈரப்பதம் எனப்படுகிறது. கடற்கரையில் இருந்து ஈரக்காற்று அதிகம் வீசுவதால் வெயில் அடிக்கும்போது தோல்அதிகம் வியர்க்கிறது. ஆனால் கடற்கரைகளில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், தோலின் வியர்வை உலர வழியில்லாததால் அதிகம் வியர்க்கிறது.

தூங்கி எழுந்தால் முகம் வீங்கியிருப்பது போலிருப்பது ஏன்? நாம் விழித்திருக்கும்போது அடிக்கடி கண்களை இமைக்கிறோம். இமைகளை அசைக்கிறோம். இமைகளை இறுக்கமாக மூடித் திறக்கிறோம். முகத் தசைகளையும் அடிக்கடி அசைக்கிறோம். இதனால் கபீரியர் வெனா கவா என்ற ரத்தக் குழாய்க்கு அதிகரத்தம் செல்கிறது. நாம் தூங்கும்போது பெரும்பாலும் இந்தச் செயல்பாடுகள் நடைபெறுவதில்லை.

முட்டை ரகசியம்: தசை இயக்கச் செயல்பாடின்மை காரணமாக முகத்தில் ரத்தம் அதிகரித்து ரத்தநாளங்கள் பெரிதாகி விடுகின்றன. ஆரோக்கியமான மனிதருக்கு தூங்கி எழுந்த சில நிமிடங்களில் இந்த நிலைமைமாற வேண்டும். முட்டை ஏன் நீள்வட்டமாக இருக்கிறது என்ற கேள்விக்கான காரணங்கள் ஆச்சரியத்தைத் தருகிறது.

முதலாவதாக நீள்வட்ட வடிவமாக இருந்தால்தான், கூட்டில் அதிக முட்டைகள் நெருக்கடி இல்லாமல் இருக்கும். இந்த வடிவம் காரணமாக வெப்ப இழப்பு குறைவு.முட்டை உடைந்து குஞ்சு வெளியேவர வெப்ப அளவு மிகவும் முக்கியம்.

இரண்டாவதாக முட்டை உருள நேரிட்டால், நீள்வட்ட வடிவம் காரணமாக வட்டமான பாதையிலேயே உருளும். இதன்காரணமாக முட்டை கூட்டுக்கு வெளியே உருண்டு விழுவதற்கான வாய்ப்பு குறைந்து போகிறது. மூன்றாவதாக பறவை முட்டையை இடுவதற்கு வசதியாகவும் இந்த வடிவம் இருக்கிறது.

தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து விழும்போது பலவீனமான முனைகள் காரணமாக உடைந்து போகவாய்ப்பு உண்டு. நீள்வட்ட முட்டை இப்படி உடைவதில்லை. இயற்கை இத்தனை நுட்பத்துடன் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணத்தை ஒளித்து வைத்துள்ளதா? அறிவியலில் இந்தக் காரணங்களை அறியும்போது இயற்கை மீது மரியாதையும்,நாம் இயற்கையை தொந்தரவு செய்யாமல் வாழ்ந்துவிட்டு போகவேண்டிய வழிப்போக்கர் என்றும் அறிய முடிகிறது.

இயற்கையின் பிரம்மாண்டம்: குழந்தைகள் எப்படி? எப்படி? என்று ஒவ்வொன்றுக்குமான காரணத்தை அறியும்போதுதான் இயற்கையின் பிரம்மாண் டத்தை அறிந்துகொள்ள முடியும். அறிவியல் அறிவு வளர்ச்சி அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும் திட்ட மிட்டுக்கொள்ள உதவும்.

நூலாசிரியர் ஆதிவள்ளியப்பன் ஒவ்வொரு நிகழ்வுக்குமான அறிவியல் காரணங்களை எளிய மொழியில், குழந்தைகள் புரிந்துகொள்ளும் விதத்தில் கூறியிருப்பது, வாசிக்கும் குழந்தைகளை சிந்திக்கச் செய்வதோடு, பார்க்கும் நிகழ்வுகளின் காரணத்தை எப்படி? ஏன்? என்று அறியவைக்க ஆர்வமூட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in