

சின்னு குரங்கு குட்டியும் டீனு குரங்கு குட்டியும் மலை மீது உள்ள மரத்தில் பழங்களை பறித்து சாப்பிட்டு விட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர், கிளைக்கு கிளை தாவி மகிழ்ச்சியோடு ஆடினார்கள்.
டீனு, சின்னுவிடம் உன் கண்களை கட்டி விடுகிறேன் என்னை கண்டுபிடி என்றது, நீண்ட நேரம் ஆகியும் கட்டவிழ்த்து விடாததால் டீனு டீனு என்று கத்தியது. பொறுமை இழந்து தானே முயன்று கட்டை அவிழ்த்து பார்த்தது. டீனு மரத்தில் இருந்த பழங்களை எல்லாம் பறித்து கீழே இறங்கி கொண்டு இருந்தது. துரோகியே நில்லு இல்லையென்றால் உன் கை ஒடிந்து கஷ்டப்படுவாய் என்றது.
இதை சற்றும் எதிர்பார்க்காத டீனு கவலை கொண்டது. எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க எண்ணி தூரத்தில் வந்த வண்டியைக் கண்டது. தாவி குதித்து போனது. அந்த வண்டியோ சர்க்கஸ் கூடாரத்தில் நின்றது. முதலாளி டீனுவை சர்க்கஸ் கூடாரத்தில் வித்தை செய்ய பழக்கினார். டீனும் அசத்தியது. அன்று மாலையே கை ஒடிந்துவிட்டது. மருத்துவர் கூடாரத்திற்கு வந்து கட்டு போட்டார். டீனு மிகவும் சோர்வாக இருந்தது.
விலங்குகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்கள். டீனு அவர்களிடம் போய் மகிழ்ச்சிக்கான காரணத்தை கேட்டது. நாளை புதிதாக ஒரு நண்பன் வரப் போகிறான். அவனை வரவேற்க காத்திருக்கிறோம் என்று சொல்லியது. ஆவலுடன் எதிர்பார்த்த நண்பன் வந்தான். அனைவரும் ஆரவாரமாய் வரவேற்றனர்.
டீனுவோ தலையை குனிந்து கொண்டது தனக்கு சாபம் விட்ட சின்னு தான் வருகை தந்து இருந்தான். அவனை பார்க்க பிடிக்காமல் ஒதுங்கி சென்றது. அடிபட்ட கை ஆறிவிட்டது. சின்னு சொன்ன வார்த்தை மட்டும் ஆறவே இல்லை இதைத்தான் வள்ளுவர்
தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. குறள்:129
என்கிறார்
அதிகாரம் - அடக்கமுடைமை
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்