

சின்ன காதிதம் போதும், வகுப்பறையில் மாயம் நிகழ்த்தலாம். காகிதம் என்ன செய்யும்?
குழந்தையாக மாறி யோசியுங்கள். வகுப்பறையில் எல்லாம் சாத்திய மாகும். குழந்தையிடம் காகிதத்தைக் கொடுத்தால் என்ன செய்யும். கிழிக்கும். நாமும் காகிதத்தைக் கிழிக்கச் செய்வோம். ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு காகிதம். முடிந்தால் வண்ணக்காகிதம்.
நமது செயல்பாடு குழந்தைத் தனமாக இருக்க வேண்டும். அதேசமயத்தில், அச்செயலில் தெளிவும், திட்டமிடலும் வேண்டும். ஒன்றாம் வகுப்பு குழந்தையெனில் கொஞ்சம்பெரியதாகக் கிழிக்கச் செய்ய வேண்டும். இரண்டாம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகள் எனில் காகிதத்தை மடித்து சதுரம், செவ்வகம், முக்கோணம் வடிவங்களில் கிழிக்கச் செய்யலாம்.
கிழிப்பது உடல் இயக்கச் செயல்பாடு என கூற வருகிறீர்களா? பெரிய வகுப்புக்களுக்கு இதனால் என்ன நன்மை? எத்தனை கேள்விகள். பொறுமை. எந்தச் செயலிலும் தெளிவும் திட்டமிடலும் அவசியம். சிறிய திட்டமிடல், வகுப்பறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஒன்றாம் வகுப்பு எனில் கிழித்த காதிதத்தை எண்ணச் செய்யலாம். இது தனிநபர் செயல்பாடு. அடுத்து இருவர் இருவராக இணைத்து யார் அதிகமாக கிழித்துள்ளார்கள் என ஒப்பிடச் செய்யலாம். இதன்மூலம் பெரிய சிறிய எண்ணை அறிமுகப்படுத்தலாம். இருவர் கிழித்துள்ள காகிதங்களைக் கூட்டச் செய்யலாம். இருவர் கிழித்துள்ள காகிதங்களைக் கழிக்கச் செய்யலாம்.
வண்ணக் காகிதம் கொடுத்திருந்தால், வண்ணங்களின் அடிப்படையில் இருவரிடம் உள்ள காகிதங்களை கூட்டச் செய்யலாம். கழிக்க சொல்லலாம். உயர் வகுப்புகள் எனில் காகிதத்தில் 0-9 வரை எண்களை எழுதச் செய்யவும். அதன்பின் அதனை ஒரு டப்பாவில் இடவும். ஒரு மாணவனை அழைத்து காகித மழை பொழியச் செய்யவும். மழையில் நனைந்த ஒவ்வொருவரும் ஐந்து காகிதத்தாள்களை எடுக்க வேண்டும். அதிலுள்ள எண்களைப் பயன்படுத்தி அதிகமான ஐந்திலக்க எண்களை உருவாக்கச் செய்யவும். யார் அதிகமான ஐந்திலக்க எண்களை உருவாக்கினார்களோ அவரே வெற்றி பெற்றவர். வகுப்புகளுக்கு ஏற்ப இலக்கங்களை அமைத்துக் கொள்ளலாம்.
இதனைக் குழுச் செயல்பாடாகவும் அமைத்துக் கொள்ளலாம். வகுப்பறையை இரு குழுக்களாக பிரிக்கவும். காகித மழையில் நனைந்து பெற்ற எண்களைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் ஐந்திலக்க எண்ணை உருவாக்க வேண்டும். பின்பு, அக்குழுவில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் அந்த எண்ணைக் கூறி, பிறரின் எண்களையும் எழுதி, தனித்தனியாக கூட்டச் செய்யவும். பின்பு, குழுவில் உள்ள ஒவ்வொருவரும் கூட்டி வரும் விடை சரியா, தவறா என சரிபார்த்துக் கொள்ளலாம். இதுபோல் அடுத்த குழுவும் செய்ய வேண்டும்.
எழுத்து தெரிந்த மாணவர்கள் எனில் நான்கு குழுக்களாக பிரிக்கவும். முதல் மூன்று குழுக்கள் முறையே முக்கோண வடிவக் காகிதத்தில் ஆங்கில உயிரெழுத்துக்களையும் (VOWELS), சதுர வடிவக் காகிதத்தில் முதல் பத்து (consonant), மெய்யெழுத்துக்களையும், செவ்வக வடிவக் காகிதத்தில் அடுத்த பத்து ஆங்கில மெய்யெழுத்துக்களையும் எழுதச் சொல்லலாம். நான்காவது குழு பிடித்த ஆங்கில எழுத்துக்களை எழுதச் செய்யவும்.
எழுதிய காகிதத்தை டப்பாவில் போட்டு காகித மழை பொழியச் செய்யவும். ஒவ்வொருவரும் ஐந்து தாள்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களிடம் கிடைத்த எழுத்துக்களைப் பயன்படுத்தி வார்த்தைகளை உருவாக்க வேண்டும். இதனை இருவர் அல்லது மூவர் சேர்ந்தும் உருவாக்கலாம். அதிகமான வார்த்தைகள் கண்டுபிடித்தவர் வெற்றி பெற்றவர் ஆவார். இதுபோல் தமிழ் எழுத்துகள் எழுதச் செய்தும், வார்த்தைகளை உருவாக்கச் செய்யலாம்.
சின்ன காகிதம் தான், வகுப்பறையில் பெரிய மாற்றத்தை உருவாக்குவதுடன், உங்களையும்குழந்தைகளிடம் நெருங்கச் செய்யும்.
- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.