முத்துக்கள் 10 - தேசிய விருது வென்ற முதல் நடிகர் உத்தம் குமார்

முத்துக்கள் 10 - தேசிய விருது வென்ற முதல் நடிகர் உத்தம் குமார்
Updated on
2 min read

தலைசிறந்த வங்காள நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட உத்தம் குமார் (Uttam Kumar) பிறந்த தினம் செப்டம்பர் 3. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்10:

# கொல்கத்தாவில் பிறந்தவர் (1926). இவரது இயற்பெயர் அருண் குமார் சாட்டர்ஜி. தெற்குப் புறநகர்ப் பள்ளியில் பயின்ற பின், படிப்பை பாதியிலேயே விடவேண்டிய நிலை ஏற்பட்டதால் கொல்கத்தா துறைமுகத்தில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார்.

# இந்த காலகட்டத்தில் அமெச்சூர் நாடகக் குழுக்களில் இணைந்து நடித்து வந்தார். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த இவரது குடும்பம் சொந்தமாக சுஹ்ருத் சமாஜ் என்ற நாடகக்குழுவை அமைத்து பல நாடகங்களை நடத்தி வந்தது. 1948-ல்முதன் முதலாக ‘திருஷ்டிதன்’ என்ற வங்கப் படத்தில் நடித்தார். தொடர்ந்து 4 திரைப்படங்களில் நடித்தார்.

# ஆனால், இவர் நடித்த அத்தனை படங்களும் தோல்வியைத் தழுவின. சினிமா துறையில் இவர் ஒரு துரதிர்ஷ்ட நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டார். அந்த காலகட்டங்களில் தன் பெயரைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தார். இறுதியில் உத்தம் குமார் என்ற பெயரை நிரந்தரமாக வைத்துக்கொண்டார்.

# எம்.பி. ஸ்டுடியோவின் தொடர்பு கிடைத்தது. ‘பாசு பரிவார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அது ஓரளவுக்கு இவருக்கு பெயர் வாங்கித் தந்தது. 1953-ல்வெளிவந்த ‘ஷரே சத்தர்’ திரைப்படமும் 1954-ல் வெளிவந்த ‘அக்னி பரீக்ஷா’வும் மாபெரும் வெற்றிபெற்றன.

# புகழ்பெற்ற இணையாக பேசப்பட்ட உத்தம் குமார் சுசித்ரா சென் ஜோடியின் வெற்றிப் பயணம் தொடங்கியது. இவர்கள் நடித்த ‘சப்தபதி’, ‘க்ருஹ பிரவேஷ்’, ‘ஷில்பி’, ‘ஜீவன் த்ருஷ்ணா’, ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

# ஏறக்குறைய 20 வருடங்கள் 30 திரைப்படங்களில் இவர்கள் இணைந்து நடித்தனர். இதில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். வங்காள திரையுலகை உயர்த்தியவர் என்று புகழப்பட்டார். சுப்ரியா சவுத்திரி, சாவித்திரி சாட்டர்ஜி, ஷர்மிளா டாகூர், அபர்னா சென் ஆகிய புகழ்பெற்ற நடிகைகளுடனும் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார்.

# வங்காள மொழியைத் தொடர்ந்து, ‘சோடி சீ முலாகாத்’, ‘அமானுஷ்’, ‘கிதாப்’ உள்ளிட்ட பல இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனித்துவம் வாய்ந்த, அலட்டிக் கொள்ளாமல் நடிக்கும் இவரது பாணி அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, சத்தியஜித் ரேயின் ‘நாயக்’, ‘சிடியாகானா’ ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகச் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தைப் பெற்றுத் தந்தன.

# 1967-ல் இந்தியாவில் சிறந்த திரைப்பட நடிகருக்கான தேசிய விருது தொடங்கப்பட்டபோது, ‘ஆன்டனி ஃபிரங்கி’, ‘சிடியாகானா’ ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் நடிகர் என்ற சிறப்பு பெற்றார்.

# மேலும் ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். தனது திரையுலக தொழில்வாழ்க்கை முழுவதும் வர்த்தக ரீதியில் வெற்றிகரமான நடிகராகத் திகழ்ந்த இவர், விமர்சன ரீதியிலும் இந்தியாவின் கலாச்சாரச் சின்னமாகப் போற்றப்பட்டார். தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் தடம் பதித்தார்.

# 1945 முதல் 1980 வரை வங்கம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் மொத்தம் 217 திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் இவரது காலம் இந்தியத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. ‘வங்கத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்பட்ட உத்தம் குமார், 1980-ம் ஆண்டில் மறைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in