

நீர் மாசு, காற்று மாசு, நிலம் மாசு ஆகியவற்றை தீவிரப் பிரச்சினைகளாக கருதும் நாம் ஒலி மாசுவை சூழலியல் பிரச்சினையாகக் கருதுவதில்லை. காரணம், எந்நேரமும் வாகன இரைச்சல், தொலைகாட்சி இரைச்சல் எனப் பல்வேறு இரைச்சல்களுக்கு மத்தியில் வாழும் நாம் ஒலி மாசுவைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டோம். ஆனால், ஒலி மாசு நாம் நினைத்தே பார்க்க முடியாத ஆபத்தைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்துகிறது.
ஒலியை டெசிபல்லில் அளவிடுவோம். மனிதர்கள் கேட்பதற்குப் பாதுகாப்பான அளவுகளாக 50-55 டெசிபல்களை உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 85 டெசிபலுக்கு மேல் சென்றால் அது மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவாகக் கருதப்படுகிறது. ஒரு வாகனத்தின் சைரனில் இருந்து வரும் சத்தம் 120-140 டெசிபல்கள். தெருக்களில் ஒலிபெருக்கி மூலம் வரும் சத்தம் 110-120 டெசிபல்கள். இப்படி நாம் அன்றாடம் புழங்கும் சத்தமே ஆபத்தானதாக இருக்கிறது.
சிறாரை பாதிக்கும் சத்தம்: இந்த ஒலி மாசு லட்சக்கணக்கான மக்களைத் பாதிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. மனிதர்களுக்கு அதிக அளவு சத்தத்தால் காது கேட்கும் திறன் குறைகிறது. ரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கப் பிரச்சினை, மன உளைச்சல்கள் ஏற்படுகின்றன.
வாகன நெரிசலில் சில நிமிடங்கள் நின்று வந்தால்கூட தலைவலியோ, மன அழுத்தமோ ஏற்படுகிறது அல்லவா? அது ஒலி மாசுவால்தான். ஒலி மாசு குழந்தைகளுக்குப் பெரிய அளவில் உளவியல் சிக்கலை ஏற்படுத்துகிறது. இரைச்சல் மிகுந்த சாலையில் குழந்தைகள் தினமும் பயணிப்பதுகூட அவர்களுடைய நினைவாற்றல், கவனக் குவிப்பு, படிப்பாற்றலைப் பாதிக்கிறது.
விலங்கினத்தை குழப்பும் ஒலி: மனிதர்களுக்கு மட்டும்தான் ஒலியால் ஆபத்தா என்றால் மற்ற உயிரினங்களின் வாழ்விலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காட்டு உயிரினங்கள் அன்றாட வாழ்வில் பல விதங்களில் ஒலியைப் பயன்படுத்துகின்றன. திசை அறிவதற்கும், உணவு தேடலுக்கும், இணையை ஈர்ப்பதற்கும் விலங்குகளுக்கு ஒலி உதவுகிறது. மனிதர்கள் உருவாக்கும் சத்தங்கள் உயிரினங்களின் நடத்தைகளைத் தொந்தரவு செய்கின்றன.
விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை ஒலியைப் பயன்படுத்திதான் தங்களது இருப்பிடங்களை, எல்லைகளை அறிகின்றன. தங்கள் இனத்தைத் தொடர்புகொள்கின்றன. ஒலி மாசு இதில் குழப்பத்தை விளைவிக்கிறது. பூச்சிகள், பறவைகளின் உடலில் இதய துடிப்பு, ஹார்மோன் சுரப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை ஒலி பாதிக்கிறது. இதனால் அவற்றின் கருவுறும் தன்மை பாதிப்படைகிறது. முட்டைகளின் எண்ணிக்கை குறைகிறது. உயிரினங்கள்சமூகமாக இயங்கும் முறை, சுற்றுப்புறஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் விழிப்புணர்வு திறன் ஆகியவற்றை அதிக ஒலியால் இழக்கின்றன.
(ஒலி தொடரும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com