

உண்மையில் தண்டனையாகக் கிடைத்த லாகூர் இடமாற்றம் திவான் சிங்கிற்கு மகிழ்ச்சியும் முன்னேற்றமும் மிக்கதாக அமைந்தது. லாகூரில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பலருடன் கிடைத்த அறிமுகம், அவரை இலக்கியத்தில் புதுமனிதனாக மாற்றிக் கொண்டிருந்ததோடு, சுதந்திர வேட்கை மிக்கவராகவும் உருவாக்கிக் கொண்டிருந்தது.
அந்த உற்சாகத்துடன் பல்வேறு கவிதைகளையும் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுத ஆரம்பிக்க, அதன் காரணமாகவே அடுத்து லாகூரிலிருந்து சிம்லாவின் டாக்சாய் மலைகளுக்கு அவரை பணிமாற்றியது ஆங்கிலேய அரசு. ஆனால், சிம்லாவிலும் திவான் சிங் எந்த விதத்திலும் மாறவில்லை. லாகூரில் எழுதியதைப் போலவே அங்கும் தொடர்ந்து எழுதியது மட்டுமல்லாமல் அங்கே பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு தனது எழுச்சிக் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினார்.
தாய்மொழியில் அவர் வாசித்த கவிதைகள் மக்களிடையே பெரும் உத்வேகத்தை உருவாக்கியதைக் கவனித்த அரசு நிர்வாகம், அரசுப் பணியில் பணியாற்றியபடி, அரசுக்கே எதிராகப் பேசி வருகிறார் என்று குற்றம்சாட்டி கைது செய்து சிம்லா சிறையில் அவரை அடைத்தது.
எல்லா ஊரும் என் ஊரே! - சிறையிலிருந்து வெளிவந்த பின்பும் திவான் சிங்கின் செயல்பாடுகளில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் போகவே, அடுத்து அவரை பர்மாவுக்கு பணிமாற்றம் செய்தது அரசு. ஒவ்வொரு முறை பணி மாற்றம் வரும்போதும் மனைவிக்குத் தொல்லை தனது நான்கு மகன்கள் கல்வி கற்பது சிரமம் என்று பல அசௌகரியங்கள் இருந்தாலும் திவான் சிங் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் மாறினார். "எல்லா ஊரும் என் ஊரே, எந்த ஊரில் அடிமைத்தனம் இருந்தாலும் எனது போராட்டம் அங்கே தொடரும்" என அங்கேயும் தனது போராட்டங்களை தொடர ஆரம்பித்தார்.
அப்படி பர்மாவில் அவரது நடவடிக்கைகளை கவனித்த ஆங்கிலேய அரசு, இந்த முறை அவரை இன்னும் கடுமையாக தண்டிக்க நினைத்து மாற்றிய இடம்தான் அந்தமான் தீவுகளின் காலாபானி சிறை. இந்த முறை அங்கிருந்த சிறைக் கைதிகளின் அரசு மருத்துவராக அவரை பணிமாற்றம் செய்தது அரசு.
அதுவரை செய்தியாக மட்டுமே கேள்விப்பட்டிருந்த காலாபானி எனும் அந்தமானின் செல்லுலர் சிறை, ஆரம்பத்தில் திவான் சிங்கிற்கும் அச்சத்தைத்தான் ஏற்படுத்தியது. என்றாலும், தனது அன்பான அணுகுமுறை மூலம் நாளடைவில் சிறைக் கைதிகளிடம் மட்டுமல்லாமல் அந்தத் தீவில் வசித்து வந்த அனைத்து தரப்பு மக்களிடையேயும் அன்பை ஈட்டினார்.
அந்த சமயத்தில் அந்தமானில் வசித்தவர்கள் எல்லோருமே முன்பு அந்த சிறைக்கு வந்து நாடு திரும்பாதவர்கள் என்பதுடன், அவர்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவியை ஆங்கிலேய அரசு செய்ய மறுப்பதைப் பார்த்த டாக்டர் திவான் சிங் ஒரு திட்டம் தீட்டினார். அங்கிருந்தவர்களைக் கொண்டே அந்தக் குழந்தைகள் பயில, ஆங்கில மொழியுடன் ஹிந்தி, பஞ்சாபி, உருது, தமிழ், மலையாளம் என அவர்களுக்கு ஏற்றவாறு கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றைத் தொடங்கினார் அவர்.
அனைவருக்குமான குருத்வாரா: அத்துடன் அங்கிருந்த சீக்கிய கோயிலான குருத்வாராவில், காவல் துறையினரும் அரசுப் பணியாளர்களும் மட்டுமே வழிபட முடியும் என்ற நிலை இருப்பதைப் பார்த்த டாக்டர் திவான் சிங், அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரில் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து மக்கள் உதவியுடன், ‘அனைவருக்குமான குருத்வாரா' (Gurudwara for all) என்ற அழகிய கோயிலைக் கட்டினார். என்றாலும் அங்கே வழிபாடு மட்டுமல்லாமல், அந்த குருத்வாராவில் குழந்தைகளோடு தொழிலாளர்களும் வயதானவர்களும் அடிப்படைக் கல்வி கற்க வேண்டி மாலை நேரப் பள்ளியையும் ஆரம்பித்தார்.
எங்கிருந்தோ வந்த ஒருவர் தங்கள் மீது இத்தனை அக்கறை காட்டுவதைக் கண்ட காலாபானி மக்கள், உலகில் ஆயிரம் மருத்துவர்கள் இருந்தாலும் இவர்தான் எங்கள் மருத்துவர் என்று அவரைப் போற்ற ஆரம்பித்தார்கள். 'காலாபானியின் டாக்டர்' என்று அவர்கள் அன்புடன் அழைக்க, அதுவே அவரது நிரந்தர அடையாளமாக, டாக்டர் திவான் சிங் காலாபானி எனும் பெயர் அவருக்கு வந்தது.
அந்த சமயத்தில் அவர் தானே எழுதி வெளியிட்ட 'வாக்தே பாணி' (ஓடிக் கொண்டிருக்கும் நீர்) எனும் அவரது கவிதைப் புத்தகம் 1938-ம் ஆண்டு அந்தமானில் மட்டுமில்லாமல் மொத்த இந்தியாவிலும் பாதிப்பை உருவாக்கியது. மனித மனங்களின் உளவியல்களை, சக மனிதர்கள் மீதான அன்பை, சமூக நீதிகளை, அனைத்தையும் தாண்டி தேசத்தின் மீதான அபிமானத்தைப் பற்றிப் பேசிய அந்தப் புத்தகம் இன்றளவும் சீக்கியர்களால் பெரிதும் கொண்டாடப்படும் புத்தமாகவே உள்ளது. அதைத் தொடர்ந்து, பூல்வாரி, மௌஜி, அம்ரித், ப்ரீத்தம், மால்ஹியன் தி பெர் என அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை உண்மையிலேயே வியக்க வைக்கிறது.
அந்தமானுக்கு கிடைத்த அற்புத மனிதர் என திவான் சிங் காலாபானியைக் மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த அதேசமயத்தில், ஆங்கிலேய அரசைத் தாண்டி வேறு ஒரு புதுப்புயல் வீசத் துவங்கியிருந்தது.
(திவான் சிங் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com