நானும் கதாசிரியரே! - 16: நம்மைச் சுற்றிலும் கதைகள்!

நானும் கதாசிரியரே! - 16: நம்மைச் சுற்றிலும் கதைகள்!
Updated on
2 min read

கதைகள் உருவாக்குவதற்கான அடிப்படையான சில பயிற்சிகளை இந்தத் தொடர் மூலம் மேற்கொண்டோம். பயிற்சி காலம் முடிந்து நேரடியாகவே கதைகள் எழுத முயற்சி செய்து பார்ப்போமா? அது ரொம்பவும் சிரமமான வேலையாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம்.

நம்மைச் சுற்றியே பல கதைகள் உலாவிக் கொண்டே இருக்கின்றன. காற்று இல்லாத இடங்களில்கூட கதைகள் உள்ளன. அவை எல்லாம் என்னைப் பற்றி எழுது…என்னைப் பற்றி எழுது எனச் சொல்கின்றன. அவற்றில் இருந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுவது மட்டுமே நம் வேலை. என்ன எளிதாக இருக்கிறதா?

நம்மைச் சுற்றி: நம்முடைய அன்றாட வாழ்வில் என்னென்ன நடக்கிறது. காலையில் எழுவோம்; பள்ளிக்குப் புறப்படுவோம்; வகுப்பில் பாடம் நடத்தப்படுவதைக் கவனிப்போம்; மாலையில் வீட்டுக்கு வருவோம்; சிறிதுநேரம் விளையாடுவோம்; வீட்டுப் பாடங்கள் எழுதுவோம்; உணவுக்குப் பிறகு உறங்கிவிடுவோம். இவை, பொதுவாக எல்லோரின் வாழ்விலும் நடப்பவை. எனவே, இதையே திரும்ப எழுதுவதால் படிப்பவர்களைக் கொஞ்சம் ஈர்க்க முடியாது. எனவே, இந்த வழக்கமான நடவடிக்கைகளில் என்றேனும் வித்தியாசமாக ஏதேனும் நடந்திருக்கும்.

சிலர் பள்ளிக்குப் பேருந்தில் செல்வார்கள். திடீரென்று ஒருநாள் பேருந்து டயர் பஞ்சராகி போயிருக்கும். அப்போது என்னென்ன நடக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். வேறு டயரை மாற்ற என்னென்ன செய்கிறார்கள்…யாரெல்லாம் உதவுகிறார்கள்…யாரெல்லாம் உதவி செய்யாமல் வெறுமனே நிற்கிறார்கள்…என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அங்கு நடப்பது, பேசுவது, செய்வது எல்லாமே நம் வழக்கமான நாளில் நடக்கும் ஒன்று அல்ல. அதை வைத்து அழகான ஒரு கதை எழுதலாம்.

ஒரு பேருந்து சென்றது. திடீரென்று பஞ்சர் ஆகிவிட்டது… என்று ஆரம்பித்து அப்படியே நடந்ததை எழுதுவது ஒரு வகை. இதை அங்கிருந்த யார் வேண்டுமாலும் எழுதி விடலாம். அதில் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். எப்படி நம் கற்பனையைக் கலப்பது?

பேருந்து வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. டிரைவர் அருகே பள்ளி மாணவர்கள் நின்றுகொண்டு பயணம் செய்கிறார்கள். பின்னால் ஒரு ஆம்புலன்ஸ் வழி கேட்டு ஹாரன் அடிக்கிறது. ஆனால், மாணவர்களோ ‘நம்ம பஸ்தான் முன்னாடி போகணும். வழி விடாதீங்க அங்கிள்’ என டிரைவரிடம் சொல்கிறார்கள். இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘டமால்’ என்று ஒரு சத்தம். பேருந்தின் முன் டயர் ஒன்று பஞ்சர்.

கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்: பஞ்சராகி நிற்கும் பேருந்தில் பப்ளிக் எக்ஸாம் எழுதும் மாணவர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். இன்னும் இருபது நிமிடத்தில் தேர்வு தொடங்கிவிடும். ஆனால், பேருந்து டயர் மாற்றி புறப்படுவதற்கே அரைமணி நேரத்துக்கும் மேலாகி விடும்.

என்ன செய்வது எனக் குழம்பினர். அப்போது அங்கு ஆம்புலன்ஸ் வருகிறது. அதில் தேர்வு எழுத உள்ள ஐந்து மாணவர்களை ஏற்றிவிட்டு, பள்ளியில் விடச் சொல்கிறார்கள். ஆம்புலன்ஸில் ஏறிய மாணவர்கள், மூச்சு விட சிரமப்பட்டு கிடக்கும் முதியவரைப் பார்க்கிறார்கள். அவர் படும் கஷ்டத்தைப் பார்த்து பேருந்து டிரைவரிடம் வழி விடக்கூடாது என்று சொன்னதை நினைத்து வெட்கப்படுகிறார்கள். பள்ளி வந்ததும் இறங்கிகொள்கிறார்கள். தேர்வு எழுதுகிறார்கள்.

இப்படிக் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதலாம். ஒருவேளை இதுபோல எங்கேனும் நடந்திருக்கலாம். ஆம்புலன்ஸ்க்கு ஒரு சிக்கல் வருவதுபோல, மாணவர்கள் உதவுவதுபோல இக்கதையை இன்னும் நீட்டித்தும் எழுதலாம். ஆம்புலன்ஸ்க்குப் பதில் வேறு எந்த வகையில் பள்ளிக்கு அந்த மாணவர்களை வர வழைக்கலாம் என்று யோசிக்கலாம்.

எதுவும் இல்லையெனில், அந்தப் பேருந்தை இன்னும் சீக்கிரமாகப் புறப்பட வைக்க, அங்கிருந்தவர்கள் எப்படி முயற்சி செய்தார்கள் என்பதைக்கூட கற்பனை கலந்து எழுதலாம். அதாவது நம் வாழ்வில் நடந்ததில் இது கொஞ்சம் மாற்றி நடந்திருக்கலாமே என்று யோசித்து எழுதினாலே அற்புதமாக வரும். வீட்டுக் கதையாக எழுதிப் பாருங்கள்.

இந்தப் பேருந்து கதையிலேயே ஃபேண்டஸியாக எழுதினால் சிறப்பாக இருக்கும். அது எப்படி என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in