

உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும், மனநல ஆலோசகருமான ஆன்டனி டி மெல்லோ (Anthony de Mello) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பம்பாயில் (1931) பிறந்தவர். சிறு வயது முதலே மதக் கல்வி பெற்றவர், பம்பாயில் உள்ள சொசைட்டி ஆஃப் ஜீசஸ் அமைப்பில் சேர்ந்தார். பாதிரியாருக்கான பயிற்சியில் இணைந்தார். பம்பாய் மாகாண கிறிஸ்தவ தேவாலய உறுப்பினராகவும் செயல்பட்டார்.
# தொடக்கத்தில், பிற மதங்கள் பற்றி அறிந்துகொள்வதில் இவருக்கு விருப்பம் இல்லை. 1970-களில் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, மற்ற மதங்களில் உள்ள நல்ல கருத்துகளை அறிவதில் ஆர்வம் காட்டினார்.
# ‘விபாஸனா’ என்ற தியானப் பயிற்சி குறித்து அறியும் முனைப்புகளில் ஈடுபட்டார். அது, இவரது ஆன்மிக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. புத்த, இந்து மதக் கோட்பாடுகள் குறித்தும் அறிந்தார். பல ஆன்மிக விஷயங்கள் குறித்து ஆராய்ந்தார். ‘சாதனா ஏ வே டு காட்’ என்ற இவரது முதல் நூல் 1978-ல் வெளிவந்தது.
# கிழக்கத்திய மத சிந்தனைகள், நவீன உளவியலை ஒருங்கிணைத்து புதிய தியான உத்திகளைக் கற்றுக்கொடுத்தார். மனிதர்கள் தங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள், சிந்தனைகள், முக்கியமாக தங்கள் மனம் குறித்து நன்கு உணர்ந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
# துன்பத்தில் வாடியவர்களுக்கு உளவியல்ரீதியாக ஆலோசனைகள் கூறி அவர்களது மனக்குறைகளைப் போக்கினார். வாழ்க்கையை முழுமையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க வழிகாட்டும் பயிலரங்குகளை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
# மக்கள் இவரை தலைசிறந்த பேச்சாளராகப் போற்றினர். நல்ல எழுத்தாளராகவும் பரிணமித்தார். கிறிஸ்தவம், புத்த மதம், யோக தத்துவம் பரிந்துரைத்த ’பிராணாயாமம்’ (மூச்சுப் பயிற்சி) மற்றும் வாழ்க்கை குறித்த உளவியல் சார்ந்த சிந்தனைகள் இவரது எழுத்துகளின் அடிநாதமாக இருந்தன.
# இந்தி, தமிழ், வங்காளம் மட்டுமின்றி உலகின் பல மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஸ்பெயின், ஜப்பான், சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட உலகம் முழுவதும் அவை புகழ்பெற்றன. ஆன்மிகத் தேடலில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார்.
# பாதிரியாரான இவர், பாரம்பரிய முறையில் அல்லாமல், புதுமையான அணுகுமுறையைக் கையாண்டதால் அதிகம் பிரபலமானார். அதேநேரம், மதவாதிகளின் எதிர்ப்புகள், கண்டனங்களுக்கும் ஆளானார்.
# ஒரு மதத்தை சேர்ந்த ஆன்மிகவாதி தன்சுயத்தையும், தன் மதத்தையும் இழக்காமலே பிற மதத்தின் சிறந்த அம்சங்களை தன் ஆன்மிகத் தேடலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். புனேயில் பாஸ்டோரியல் கவுன்சலிங் அமைப்பை 1972-ல் தொடங்கினார். பின்னர் இது‘சாதனா இன்ஸ்டிடியூட் ஆஃப் பாஸ்டோரியல் கவுன்சலிங்’ என்று மாறியது.
# ஆன்மிக சேவை, எழுத்து, தியானம், மனநல ஆலோசனை என இறுதிவரை சுறுசுறுப்பாக செயலாற்றிய ஆன்டனி டி மெல்லோ, 1987-ல் நியூயார்க் சென்றிருந்தபோது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அப்போது இவருக்கு வயது 56. இவரது ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பு ‘ஒன் மினிட் விஸ்டம்’ என்ற தலைப்பில் இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.