

இலங்கையில், சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கு மேற்பட்ட ஆறுகள். இதே போன்று, 50-க்கு மேற்பட்ட அருவிகள் உள்ளன. சுமார் 340 கி.மீ. நீளம் உடைய ‘மகாவெலி’, இலங்கையின் மிக நீண்ட ஆறு. இதேபோன்று, சுமார் 260 மீட்டர் உயரம் கொண்ட ‘பாம்பரகண்டா’, இந்த நாட்டின் மிக உயரமான அருவி ஆகும்.
சுமார் 160 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரை, உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கைப் பொருளாதாரத்துக்கு வலிமை சேர்க்கிறது. இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில், பவளப் பாறைகள், கடற்பாசிகள் உள்ளிட்டவை மிகுந்து காணப்படுகின்றன. எனவே, கடலுக்குள் 20 மைல் நீளம்வரை, தன்னுடைய ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ என்று கூறுகிறது இலங்கை அரசு.
அருகி வரும் வனம்: இலங்கையில் இயற்கைத் தாதுகளும் மிக அதிகம். சிலிகா, மைக்கா, கிராபைட், தோரியம் ஆகியன அதிகம் கிடைக்கின்றன. மேலும், மன்னார் வளைகுடாப் பகுதியில் பெட்ரோலியம் இருப்பதற்கான அறிகுறியும் கண்டறியப்பட்டுள்ளது. நம்மைப் போன்றே இலங்கைக்கும், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடாக் கடலில் தோன்றும் காற்று மண்டலங்கள் மழைப் பொழிவுக்கு முக்கிய காரணிகள் ஆக உள்ளன.
இலங்கை, அளவில் சிறிய, தீவு நாடுதானே, ஆனாலும் நாடு முழுவதும் சீராக ஏறத்தாழ ஒரே அளவில் மழை இருப்பது இல்லை. இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் மழைப் பொழிவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம், பருவகாலப் புயல், சூறாவளி அநேகமாக ஒவ்வோர் ஆண்டும் நிகழ்கிறது. இதனால் கணிசமான மழையும் கிடைக்கிறது; சில சமயங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, மிகுந்த சேதமும் விளைகிறது.
இலங்கையில் காடுகள் அதிகம். ஆனாலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் 40 சதவீதத்துக்கு மேலாக இருந்த வனப்பகுதி, தற்போது 28 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது. சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு எல்லா நாடுகளிலுமே இந்த அளவுக்குத்தான் இருக்கிறது. என்ன செய்ய?
மலர்த் தாவரங்கள், இதனைச் சார்ந்த உயிரினங்கள் மற்றும் ‘உள்ளூர் பூச்சிகள்’ அதிகம். வனவிலங்கு சரணாலயங்கள் – 61;தேசியப் பூங்காக்கள் – 22, ரிசர்வ் செய்யப்பட்ட காட்டுப் பகுதிகள் – 3, உள்ளன. ஆசியாவிலேயே அதிகம் ‘பாதுகாக்கப்பட்ட’ நிலப் பரப்பு கொண்ட நாடான இலங்கையில், சிறுத்தை அரிய வகை விலங்கு ஆகி விட்டது. இலங்கையின், மின்னெரியா குளம் / ஏரி, காட்டு யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்திச் செல்லும் இடம் ஆகும். ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், இங்கு யானைகள் கூடுவதை, வாய்ப்பு கிடைக்கும் போது, கண்டு வரலாம். இலங்கை நமக்குப் பக்கத்தில் இருக்கிற சகோதர நாடுதானே ஏன் முயற்சிக்கக் கூடாது!
இந்த வாரக் கேள்வி: தமிழகம் – இலங்கை இடையே தட்ப வெப்பநிலையில் ஒற்றுமை/ வேற்றுமை என்ன?
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி. தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com