

மகிழ்ச்சி, நகைச்சுவை, வியப்பு, பெருமிதம் ஆகியவற்றை உடன்பாட்டு உணர்வுகள் என்றும் கவலை, கோபம், அச்சம், இழிவு ஆகியவற்றை எதிர்மறை உணர்வுகள் என்றும் எழில் வகைப்படுத்திக் கூறினார். அதற்கு, எந்த அடிப்படையில் இப்படி வகைப்படுத்துகிறீர்கள்? என்று வினவினான் அருளினியன்.
உற்சாகம் தருபவை உடன்பாட்டு உணர்வுகள், சோர்வு தருபவை எதிர்மறை உணர்வுகள் என்று முன்னரே சொன்னாரே! என்றாள் மணிமேகலை. அவற்றோடு வேறொன்றும் அவ்வகைப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்றார் எழில். உடன்பாட்டு உணர்வுகளால் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு. மாறாக எதிர்மறை உணர்வுகளால் தீங்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று மேலும் அவர் விவரித்தார். எப்படி? என்று வினவினான் காதர்.
ஏதேனும் தீங்கு ஏற்பட்டதா? - கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. தென்னவனும் வெண்ணிலாவும் ஆளுக்கோர் அணியை ஆதரித்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்றனர். தாம் ஆதரிக்கும் அணி பந்தை இலக்கிற்குள் அடிக்கும் ஒவ்வொரு முறையும் இருவரும் மாறிமாறி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். போட்டியின் இறுதியில் வெண்ணிலா ஆதரித்த அணி வெற்றிபெறுகிறது. அவள் தனது மகிழ்ச்சியை கத்தியும் குதித்தும் வெளிப்படுத்துகிறாள்.
தென்னவன், தான் ஆதரித்த அணியினரைச் சந்தித்து அவர்கள் எவ்வாறு சிறப்பாக விளையாடினர் எனக் கூறி, அவர்களைப் பாராட்டி மகிழ்கிறான். இதில் தென்னவன், வெண்ணிலா ஆகியோரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏதேனும் தீங்கு ஏற்பட்டதா? என்று வினவினார் எழில். இல்லை என்றனர் அனைவரும்.
ஆனால், தான் ஆதரித்த அணி தோற்றுவிட்டதே என்ற வருத்தம் தென்னவனுக்கு இல்லாமலா இருக்கும்? என்று வினவினாள் இளவேனில். சிறிது நேரம் இருக்கவே செய்யும். ஆனால், அவரது உள்ளத்தை நோகச்செய்து உடலைப் பாதிக்கும் அளவிற்குப் பெரிதாக இருக்காது. மேலும் விளையாட்டுப் போட்டியை விளையாட்டாகத்தான் கருதவேண்டும்; இரண்டு பிரிவினருக்கான போராகக் கருதக்கூடாது என்று விளக்கினார் எழில்.
நகைச்சுவை உணர்விற்கும் இந்த விளக்கம் பொருந்துமா? என்று வினவினான் அழகன். அனைவரும் மகிழவேண்டும் என்னும் நோக்கில் வெளிப்படும் நகைச்சுவையால் யாருக்கும் தீங்கு ஏற்படாது. மாறாக மற்றவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை மட்டந்தட்டிக் கேலிசெய்தால் அவரது மனம்நோக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய நகைச்சுவையைத் தவிர்க்க வேண்டும் என்றார் எழில்.
அப்பா முகம் வாடியது: நேற்று எங்களது வீட்டில் ஒரு விருந்து. அதில் என் அப்பாவிடம் பணியாற்றுவோர் சிலரும் அப்பாவோடு பள்ளியில் படித்தோர் சிலரும் தத்தம் குடும்பத்தினரோடு வந்து கலந்துகொண்டனர். அப்பொழுது நிகழ்ந்த உரையாடலில் அப்பாவோடு படித்த நண்பர் ஒருவர், என் அப்பா பள்ளியில் படிக்கும்பொழுது செய்த குறும்புகளை நகைச்சுவையாக கூறினார். நானும் என் தம்பியும் சிரித்தோம். அப்பாவின் முகம் வாடியது. அப்பாவிடம் பணியாற்றுவோர் சங்கடத்தில் நெளிந்தனர்.
அச்சூழலைக் கவனித்த அம்மா, நாம் எல்லோருமே சிறுபிள்ளைகளாய் இருக்கும்பொழுது இதுபோன்ற குறும்புகளைச் செய்திருக்கிறோமே. சரி... அண்மையில் என்ன திரைப்படம் பார்த்தீர்கள்? என்று பேச்சை மாற்றினார் என்றாள் தங்கம். இதனால்தான் இடத்தையும் சூழலையும் அறிந்து நகைச்சுவையை வெளிப்படுத்த வேண்டும்.
அப்பொழுதுதான் அந்நகைச்சுவையால் பிறரும் மகிழ்வர் என்றார் எழில். அவ்வாறு அறியாமல் பிறர் பேசினால் நாம் என்ன செய்ய முடியும் என்றான் தேவநேயன். தங்கம் அம்மா செய்த்தைப்போல் நாம் குறுக்கிட்டுப் பேச்சை மாற்ற வேண்டியதுதான் என்றாள் கயல்விழி. மிகச் சரி என்றார் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com