

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகச் சென்றுகொண்டிருந்தன. குணபாலன் கால் முறிந்து, நாடோடிக் கூட்டத்தாரின் குடிலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தாண்டிவிட்டது. கோடைக் காலம் முடிந்து, வசந்த காலத்தின் வரவைக் கட்டியங்கூறியவாறுச் சுழன்று அடித்துக்கொண்டிருந்தது தென்மேற்குப் பருவமழைப் புயல்.
அந்த இரவு வேளையில் குடிலுக்கு உள்ளே இருந்த சில விளக்குகளின் தீபங்கள் வெளியில் வீசியப் புயலின் உக்கிரத்தைப் பறைசாற்றி எரிந்து கொண்டிருந்தன. மலையிலிருந்து கீழிறங்கிய வெள்ளம் மலையிலிருந்த சில பாறைகளையும் மலையடிவாரத்தில் கொண்டுவந்து சேர்த்தது. சில மரங்களும் வேர்ப்பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பினால் சாய்ந்து விழுந்தன. மழையுடன் சேர்ந்து வந்த மின்னலும் அதனால் ஏற்பட்ட இடியோசையும் இந்தபூலோகத்தில் பிரளயத்தை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சும்படி இருந்தது.
குடிலுக்கு உள்ளே இருந்த பலரும் அந்தப் புயலையும் வெள்ளத்தையும் நினைத்து அச்சத்தில் உறங்காமல் உறைந்து நின்று கொண்டிருந்தனர். அங்கு இருந்த பெரியவர்தான் அனைவருக்கும் தைரியத்தைக் கொடுக்கும்படி பேசிக்கொண்டிருந்தார். தனது அனுபவத்தில் இதைப் போல எத்தனையோ புயல், மழை, வெள்ளத்தைப் பார்த்துள்ளதாகவும், அதில் பாதி அளவு கூட இப்போது அடிக்கும் புயலின் வேகம் இல்லை என்றும் அனைவரையும் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். மேலும், அனைவரையும் போய் நிம்மதியாகத் தூங்கும்படி கேட்டுக்கொண்டார். அதன் பின்னரே அனைவரும் அவரவர் படுக்கைக்குச் சென்றனர்.
மறுநாள் ஓர் இனிய பொழுதாக விடிந்தது. புயல், மழை, இடி, மின்னல் எதுவும் இன்றி வானம் அமைதியாகக் காட்சியளித்தது. புல்லினங்கள் கீச் கீச் என கத்திக்கொண்டு தங்கள் சிறகால் வானை அளந்தன. குணபாலனும் கண் விழித்து எழுந்திருந்தான். கால் முறிவு சரியாகிவிட்டிருந்தாலும் பெரியவரின் அறிவுரைப்படி ஓய்விலேயே இருந்தான். அஃது அவனுக்கு பெருத்த சோர்வைக் கொடுத்தது. எனவே, பெரியவரிடம் சொல்லிக்கொண்டு மலையடிவாரதில் காலார நடந்து செல்லத் தொடங்கினான்.
அப்படி அவன் நடந்து செல்லும் வழியெங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்திருந்தன. சில இடங்களில் மழைவெள்ளம் காட்டாறாகப் பெருகி ஓடிய சுவடும் தெரிந்தது. அதில் மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகளும் ஆங்காங்கே கிடந்தன. குணபாலனோ தனது கால் அடிபட்டுத் தான் ஓய்வில் இருந்ததையே மறந்தவனாய் அந்தப் பாறைகளின் மீது தாவி ஏறியும் அதிலிருது பாய்ந்துக் குதித்தும் சென்றுகொண்டிருந்தான்.
ஓரிடத்தில் புதர் மறைவிலிருந்து ஏதோ பறவைகளின் குஞ்சுகள் கத்தும் சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்தான். அங்கே ஏதோ பறவைகளின் இறக்கை முளைக்காத 6 இளம் குஞ்சுகள் இருந்தன. அவை இன்னும் கண்களைத் திறக்க கூட இல்லை என்பதும் தெரிந்தது. அருகில் இரண்டு பிய்ந்துபோன பறவை கூடுகள் கிடந்தன. அடப் பாவமே, இந்தப் பறவைகளின் கூடுகள் புயல் அடித்ததால் சேதமடைந்து கீழே வீழ்ந்திருக்கக் கூடும் என்று நினைத்தான் குணபாலன். இஃது என்ன பறவையாக இருக்கும். பார்க்க பச்சைக் கிளியின் அலகுகள் போல் உள்ளனவே. ஆனால், உருவத்தில் பச்சைக்கிளிகளை விடப் பெரியதாக உள்ளதே? என்று யோசித்தான்.
அப்போது அந்த வழியே ஒரு பெரியவர் ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார். குணபாலன் அவரை அருகில் அழைத்து, ‘இவை எந்தப் பறவை இனத்தைச் சேர்ந்தவை?’ என்று வினவினான். அதற்கு அந்தப் பெரியவர், ‘அட, இது கூடத் தெரியவில்லையா. என்ன பிள்ளையப்பா நீ?’ என்று அலுத்துக்கொண்டு, ‘இவை கழுகுகளின் குஞ்சுகளப்பா’ என்று கூறிச் சென்றார். அந்தக் கழுகுக் குஞ்சுகளோ பசியால் கத்தின. குணபாலன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். ஆனால், ஒன்று மட்டும் அவனுக்குத் தெரிந்தது. இப்போது இந்தக் கழுகுக் குஞ்சுகளுக்கு தின்பதற்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்பதே அது.
உடனே அந்த 6 கழுகுக் குஞ்சுகளையும் அங்குக் கிடந்த ஒரு பறவை கூட்டில் எடுத்து வைத்தான். அந்த இடத்தை விட்டு வேறு இடம் நோக்கி விரைவாகச் சென்றான். அப்படிச் செல்லும் வழியில் ஒரு பெரிய ஏரியும் அதன் அருகில் ஓர் ஆலமரமும் இருந்தன. அந்த ஆலமரத்தில் ஒரு பெரிய பொந்தும் இருந்தது.
ஆஹா, இந்த கழுகுக் குஞ்சுகளை வைத்துப் பாதுகாக்க அருமையான இடம் கிடைத்துவிட்டதே என்று அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. அந்த ஆலமரத்தில் பொந்தில் அந்தக் குஞ்சுகளைப் பாதுகாப்பாக வைத்தான். அடுத்ததாக அவற்றுக்குத் தீனி போட வேண்டும். அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தவாறே அங்கிருந்துத் தான் தங்கியிருந்த குடிலை நோக்கி விரைவாகச் சென்றான் குணபாலன்.
(தொடரும்)