

ஏதோவொன்று குழந்தையின் கவனத்தைக் கவர்கிறது. அது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. அதை மீண்டும் அனுபவிக்க நினைக்கிறது. தடைகள் ஏற்படுகின்றன. தடையை உடைக்கப் பலவழிகளை யோசிக்கிறது. பொருத்தமான வழியைக் கண்டுபிடித்து தீர்வு காண்கிறது. குழந்தைகளிடம் இயல்பிலேயே காணப்படும் இத்திறனைக் கூர்மைப்படுத்துவதும் செழுமைப்படுத்துவதும்தான் கல்வி. எப்படியென்று பார்ப்போம்.
காகம் கரையும் சத்தம் கேட்கிறது. குழந்தை வெளியே வந்து பார்க்கிறது. காகத்தைக் காண்கிறது. வியப்படைகிறது. அது பெற்றோரிடம் வந்து “அம்மா காக்கா கா கான்னு கத்துது” என்று சொல்கிறது.
முதல் பத்தியில் கூறிய கருத்தைப் பற்றித் தெரியாத பெற்றோர் “ஆமாம். காக்கா கா கான்னுதான் கத்தும்” என்று சொல்லிவிட்டுத் தங்கள் வேலையைத் தொடர்வார்கள். தெரிந்த பெற்றோர்கள் இதைஓர் அருமையான வாய்ப்பாக நினைப்பார்கள். “கா கா என்று ஏன் கத்துகிறது என்று பார்த்தாயா? கத்தியவுடன் என்ன நடந்தது? அதற்கு எத்தனை கால்கள் இருக்கின்றன? ஒவ்வொரு காலிலும் எத்தனை விரல்கள் இருக்கின்றன? அவ்விரல்களில் எத்தனைமுன்னோக்கி இருக்கின்றன? எத்தனை பின்னோக்கி இருக்கின்றன?” போன்றவினாக்களைக் கேட்பார்கள். எல்லா வினாக்களையும் ஒன்றாகக் கேட்கவேண்டும் என்பதில்லை. மாறாக குழந்தையின் ஆர்வத்தைப் பொறுத்து, அந்தச் சூழலைப் பொறுத்து வினாக்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எளிய, அழகான செயல்திட்டம்: இன்னும் கொஞ்சம் ஆழமாக குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்றுநினைப்பவர்கள் “காகத்திற்கு உணவிடலாமா? அப்போது அது அருகே வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படி உணவுண்ண அருகே வரும்போது அதன் கால்களைக் கவனிக்கலாம். நாளும் உணவிட்டால் நாளும் வருமா என்று பார்க்கலாமா?” என்று சொல்லி அதையொரு குட்டி செயல்திட்டமாக மாற்றிவிடுவார்கள்.
பிறகு காகம் கதாபாத்திரமாக வரும் கதைகளைச் சொல்வார்கள். காகத்தின் படம் வரையச் சொல்வார்கள். காகம் கதாபாத்திரமாக வரும் கதைப்புத்தகங்களைத் தேடியெடுத்து வாசித்துக் காட்டுவார்கள்.
இவையாவும் ஒரே நாளில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. குழந்தையின் ஆர்வம் மிக முக்கியம். அப்போதுதான் அது சுயமாக, நீண்ட நேரம் அச்செயலில் ஈடுபடும். சுயமாகக் கற்கத் தொடங்கும்.
பின்பற்ற வேண்டியவை: நமக்குச் சில தகவல்கள் தெரிந்துள்ளன என்பதற்காக குழந்தையின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்லாமல் இருப்பது நல்லது. நாமும் குழந்தையுடன் சேர்ந்து கற்கப்போகிறோம் என்ற மகிழ்வோடு, உண்மையான ஆர்வத்தோடு கேள்விகள் கேட்கலாம்.
நமக்குத் தெரியும் என்று நினைத்திருக்கும் பல நிகழ்வுகள், கருத்துகள், பொருட்கள் ஆகியவற்றின் பின்னணியிலும் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். சில கருத்துகளை ஊகிப்பது, ஊகித்த கருத்து சரிதானா என்று பரிசோதிப்பது... எனத் தொடர்வதுதான் கற்றல்.
பதில் தெரியாதது அவ்வளவு பெரிய குற்றமல்ல என்ற உணர்வை நாம் குழந்தையிடம் வளர்ப்பது முக்கியம். அப்போதுதான் சுதந்திரமாகச் சிந்திக்க முன்வரும்.
எல்லாவற்றையும் அப்போதைக்கப்போதே கற்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பல வேளைகளில் சில நாட்களுக்குப் பின், சில மாதங்களுக்குப் பின் அதே சூழல் திரும்பக் கிடைக்கலாம். அப்போது நடக்கும் கற்றல் சற்று ஆழமாக இருக்கும். இயற்கையெனும் புத்தகம் குழந்தையின் கவனத்தைக் கவரும் நிகழ்வுகள்தாம் எத்தனை எத்தனை! இயற்கையெனும் பெரும்பாடப்புத்தகத்தில் இந்த நிகழ்வுகளுக்கா பஞ்சம். நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பதே முக்கியம்.
“குழந்தை தன் சுற்றுப்புறத்தை, ஆர்வத்தோடு கவனிக்கிறது, விருப்பமான செயல்பாடுகளில் உற்சாகத்தோடு ஈடுபடுகிறது. ஒன்றைப் பற்றிச் சந்தேகம் கேட்கிறது. தெரிந்துகொள்வதில் ஒரு சுகம் இருப்பதை குழந்தை உணர்கிறது” ஆகியவற்றை உறுதிப்படுத்துங்கள். நம் குழந்தைகளுக்காக மேற்கூறிய முறையில் யோசித்து சில மணித்துளிகள் செலவிட்டால் அது மிகுந்த பயனைத் தரும் அல்லவா? குழந்தையுடன் குறைந்த நேரம் செலவிட்டாலும் அது குணமுள்ள நேரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in