தயங்காமல் கேளுங்கள் - 40: அப்பெண்டிசைட்டிஸ் வந்தால் ஆபத்தா?

தயங்காமல் கேளுங்கள் - 40: அப்பெண்டிசைட்டிஸ் வந்தால் ஆபத்தா?
Updated on
1 min read

ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீட்ல கலந்துகிட்ட என் நண்பன் நகுல் திடீர்னு வயித்து வலியில மயக்கம் போட்டுட்டான். அவனை டாக்டர் கிட்ட அழைச்சுட்டுப் போனப்ப இது அப்பெண்டிசைட்டிஸ் உடனடியா ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாரு. அப்படின்னா என்ன டாக்டர்? அப்படி ஆபரேஷன் பண்ணா அவனால திரும்ப ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்க முடியுமா? என்று கலக்கத்துடன் கேட்டிருக்கிறார் 9-ம் வகுப்பு கோகுல்.

நமது வயிற்றின் வலது பக்கத்தில், சிறுகுடலும் பெருங்குடலும் சந்தித்துக் கொள்ளும் இடத்தில் அமைந்திருக்கும் சிறியதொரு உறுப்புதான் இந்த 'Vermiform Appendix' எனும் குடல்வால். vermiform என்றால் லத்தீனில் 'புழுபோன்ற' என்றும், appendere என்றால் 'ஒட்டிக்கொண்டு' என்றும் பொருள்படும்.

அதாவது இரு குடல்களுக்கிடையே ஒட்டிக் கொண்டிருக்கும் சிறியதொரு உறுப்புதான் அப்பெண்டிக்ஸ். பொதுவாக 7-11 செ.மீ. நீளமும் 1-7 மி.மீ. சுற்றளவும் கொண்ட இந்த அப்பெண்டிக்ஸை மனிதனுக்குத் தேவையற்ற ஒரு உறுப்பு என்றுதான் டார்வின் உள்ளிட்ட அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேவையான உறுப்பா, இல்லையா? - தனது ஆரம்பநிலையில் மனிதன் வெறும் தாவர உண்ணியாக மட்டுமே இருந்து வந்தபோது, உணவுப்பாதையில் மிகப்பெரிய உறுப்பாக இந்த அப்பெண்டிக்ஸ் இருந்தது என்றும், செல்லுலோஸ் உள்ளிட்ட மர நார்களை செரிமானிக்க இது பெரிதும் உதவியது என்றும், மனிதனின் பரிணாம வளர்ச்சியில் உணவு பழக்கவழக்கங்கள் மாற மாற, நாளடைவில் இதன் அளவும்செயல்பாடுகளும் சுருங்கி, உபயோகமற்றதொரு உறுப்பாகவே அப்பெண்டிக்ஸ் காணப்பட்டது. குதிரை, முயல் உள்ளிட்ட தாவர உண்ணிகளின் அப்பெண்டிக்ஸ் பெரிதாக இருப்பதும் இவர்களது இந்தக் கோட்பாட்டிற்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால், உண்மையிலேயே அப்பெண்டிக்ஸ் உபயோகமற்ற ஓர் உறுப்புதானா, அப்படியென்றால் ஏன் இன்னும் மறையாமல் இருக்கிறது எனும் கேள்விகளுக்கு பல்வேறு ஆய்வுகள் பதிலளிக்கின்றன. இந்தக் குடல்வாலில் IgA எனும் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகம் சுரப்பதாகவும், அதுதான் தன்னைச் சுற்றிலுமுள்ள குடல்பகுதியை தொற்று மற்றும் ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாக்கிறது என்றும், அத்துடன்நன்மைபயக்கும் பல நுண்ணுயிரிகளின் இருப்பிடம் இந்தக் குடல்வால் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

பிறந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே நமக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும் உடல் உறுப்புகளில் நமது குடல்வாலும் முக்கியமான ஒன்று என்று கூறுகிறது. ஆனால், அப்பெண்டிக்ஸ் தரும் நோயெதிர்ப்பு பலன்களை அருகிலுள்ள நிணநீர் கணுக்களே (lymph nodes) தந்துவிடுமே என்ற அடுத்த வாதத்தையும் இது வைக்கிறது.

அது உதவி புரிகிறதோ அல்லது உபயோகமற்றதோ என்பது வேண்டுமானால் வாதத்தில் இருக்கலாம். ஆனால், அதில் ஒரு உபத்திரவம் வந்தால் பெரும்தொல்லைதான் என்பதில் வாதத்துக்கே இடமில்லை என்பதற்கு உதாரணம் தான் நகுலுக்குஏற்பட்டுள்ள அப்பெண்டிசைட்டிஸ் எனும் இந்த குடல்வால் அழற்சி.

(குடல்வால் ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in