

15 வயது நிறைந்த சிமோன் பொலிவார், ஸ்பெயின் நாட்டு இளவரசரோடு ரப்பர் பந்தில் மட்டைப் பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். சிமோன் அடித்த பந்து இளவரசரின் தொப்பியில் பட்டு கீழே விழுந்தது. கோபமடைந்த இளவரசர் சிமோனை மன்னிப்பு கேட்கச் சொல்லி சண்டைப் போட்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அருகிலிருந்தவர்களின் சமரசத்தால் பிரச்சினை ஓய்ந்தது.
ஆனால், இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகளுக்குப் பின், “அன்றைக்கு அவரின் தொப்பி விழுந்தது, இன்று அவரின் கிரீடம் விழுவதற்கான அறிகுறியோ?” என்று தன் நாட்குறிப்பில் எழுதினார் சிமோன். யார் இவர்? அமெரிக்காவை ஒன்றிணைத்து, ஆட்சியாளர்களின் பீடத்தை தரைமட்டமாக்கும் சக்தியை இவர் எங்கிருந்து பெற்றார்?
தென்னமெரிக்காவில் குவிந்திருந்த ஸ்பெயின் நாட்டு இராணுவத்திற்கு எதிராய் 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் போர் புரிந்து; 70,000 மைல்களுக்கும் மேலானதூரத்தை தன் குதிரைமேல் சவாரி செய்து; அலெக்ஸாண்டரின் படையெடுப்பைக் காட்டிலும் இருமடங்கான பிரதேசங்களைப் பயணித்து போர் புரிந்தவர் சிமோன். ஆனால், இவர் ஒரு இம்மி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்கவில்லை, மாறாக அங்கிருந்தவர்களுக்கு விடுதலை கொடுத்தார்.
அனைவரும் சமம்! - தென்னமெரிக்காவின் வெனிசூலா நகரில் 1783ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி சிமோன் பிறந்தார். மிகப் பெரிய செல்வந்த குடும்பம். இவர்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், கால்நடை பண்ணைகளும், சுரங்கங்களும் இருந்தன. கூடவே அதில் வேலைசெய்ய ஆயிரக்கணக்கான அடிமைகளும் இருந்தார்கள்.
சீமோனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். தாயின் அரவணைப்போடு பண்ணை அடிமைகளின் கண்காணிப்பில் அவர் வளர்ந்தார். அடுத்த ஆறு ஆண்டுகளில் தாயும் இறந்துவிட, தூரத்து உறவினரின் வழிகாட்டுதலால் அவர் வீட்டிலிருந்த ஹிப்போலிட்டா என்ற அடிமைப் பெண்ணின் அரவணைப்பில் வளரத் தொடங்கினார். ஓர் அடிமை வாழ்வின் அனைத்துவித துன்பங்களையும் அருகிலிருந்து பார்த்தார், சிமோன்.
பெற்றோர் இருவரையும் இழந்த பின்னர், தீவிரமாகப் படிக்கத் தொடங்கினார். சிமோன் ரோட்ரிகஸ் என்பவரை ஆசிரியராகக் கொண்டு சமூகத்தின் இயங்கியலைப் புரிந்து கொண்டார். 1790களில் விடுதலை, மக்களாட்சி போன்ற வார்த்தைகள் வீதியெங்கும் ஒலித்தன. பிரெஞ்சு புரட்சியையொட்டி அமெரிக்கப் புரட்சியும் வெற்றியைச் சுவைத்திருந்தது.
ரோட்ரிகஸின் உதவியால் ரூசோவை அறிந்துகொண்டார். “அனைத்து மக்களும் சரிசமமாக சுதந்திரத்தோடு பிறக்கிறார்கள்” என்ற ரூசோவின் வார்த்தைகள் மேல் பித்துப்பிடித்து அலைந்தார். இப்படியாக தென்னமெரிக்காவின் வெனிசூலா, கொலம்பியா, எக்குவடோர், பெரு போன்ற பிரதேசங்களை ஸ்பெயின் ஆளுகையில் இருந்து விடுவிக்க வேண்டுமென்ற எண்ணம் இளம் வயதிலேயே அவரை ஆட்கொண்டது.
(சிமோன் சரித்திரம் தொடரும்)
- கட்டுரையாளர்: இயற்பெயர் சதீஸ்குமார். மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com