

தொலைக்காட்சியில் சூர்யா நடித்த நந்தா படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஓராயிரம் யானை கொன்றால் பரணி... ஆதலால் யுத்தம் இருக்கு கவனி என்ற பாடல் வர, அதைக் கவனித்த குழலியும் சுடரும் அங்கிருந்தே உரையாடலைத் தொடங்கினர்.
குழலி: சுடர், இந்த வரிகள் எதைப் பத்தியதா இருக்கும்னு யூகிக்க முடியுதா...
சுடர்: பரணிங்கிற சொல் வர்றதுனால இது போரப் பத்திச் சொல்றதா இருக்கலாம். கலிங்கத்துப்பரணி பத்தி படிச்சிருக்கேன் குழலி.
எடும் எடும் எடும் என எடுத்ததோர் இகல் ஒலி கடல் ஒலி இகைக்கவே... விடு விடு விடு பரி கரிக்குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவேங்கிற பாட்ட எங்க ஆசிரியர் எவ்வளவு அழகாப் பாடி நடத்தினாங்க தெரியுமா... என்ன அழகான சந்த நயம்...
குழலி: அழகா பாடுற சுடர். நானும் படிச்சிருக்கேன். ஜெயங்கொண்டார் எழுதினது. பரணி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. படிக்க அழகா இருக்கிற இந்தப் பாடல்கள் போர் பத்தினதுதான். வீரர்கள், போர்க்களம், ரத்த வெள்ளமும் பிணக்குவியலுமாக் கிடக்கிறது, பேய்கள் பிணங்களைப் போட்டுக் கூழ் சமைக்கிறது, வீரர்கள் வெற்றியக் கொண்டாடுறது, காளியை வேண்டுறதுன்னு கலிங்கத்துப் பரணி கொஞ்சம் வித்தியாசமான இலக்கியம்தான்.
சுடர்: ஓராயிரம் யானை கொன்றால் பரணின்னு வருது இந்தப் பாட்டுல. ஆயிரம் யானைகளைக் கொன்னா... எவ்வளவு பெரிய சூழலியல் இழப்பு...
குழலி: ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணின்னு இலக்கண விளக்கப் பட்டியல் சொன்ன இலக்கணத்தைக் கவிஞர் நா.முத்துக்குமார், நம்ம காலத்துக்கு ஏத்த மாதிரிப் பாட்டாக்கியிருக்காரு. அந்தக் காலத்தில நிறைய போர்கள் நடந்துக்கிட்டே தான இருந்துச்சு.
பீரங்கிகள், அணுகுண்டுகள் போல பேரழிவு ஆயுதங்கள் இல்லைனாலும் தேர்ப்படை, காலாட்படை, குதிரைப்படை, யானைப்படைன்னு படைப்பிரிவுகளும் ஆயுதங்களும் இருந்துச்சே. வீரனைக் கொல்வதுன்னா, வீரன் வந்த யானையையும், குதிரையையும் கொல்றதும்தானே.
சுடர்: அப்படின்னா, ஆயிரம் யானைகளைக் கொன்னு வீரர்களை வெற்றி கொண்ட மாவீரனுக்குப் பாடுறது தான் பரணி இல்லையா... சுடர் நாம புறத்திணைகள் பத்திப் பேசினோமே.
குழலி: ஆமா சுடர். அந்தக் காலத்துல கால்நடைகள் தான பெரிய செல்வமா இருந்துச்சு. ஆநிரைகளைக் கவர்ந்து வருவது வெட்சித்திணை. அப்படிப் பகைவர்கள் கவர்ந்து போன ஆநிரைகளை மீட்கறது கரந்தைத் திணை. அடுத்தவர் நிலத்து மேல ஆசைப்பட்டு அல்லது தன்னை மதிக்காத மன்னனோட நாட்டின் மேல போரெடுத்துச் செல்றது வஞ்சித் திணை. தங்கள் நாட்டு மதிலை உள்ளே இருக்கறவங்க காவல் காக்கறதும் மதிலுக்கு வெளியில இருக்கறவங்க மதிலைத் தாக்க முற்சிக்கிறதும் உழிஞைத் திணை.
நேருக்கு நேராக நின்னு போர் செய்றது தும்பைத் திணை. போர்க்களத்திலே வெற்றி பெறுவது வாகை. போர்ல இறந்தவங்களோட நல்ல திறன்களைப் பேசுறதும், இந்த உலகத்தோட நிலையில்லாத தன்மையப் பேசுறதும் காஞ்சித் திணை. வென்றவர் பெருமையைப் பற்றிப்பேசுறது பாடாண்திணை. இப்படிப் புறத்திணைகள் ஏழுன்னு தொல்காப்பியர் சொல்றாரு. ஆனா பின்னால வந்தவங்க புறத்திணைகள் பனிரெண்டுன்னு சொல்றாங்க.
சுடர்: குழலி, எல்லாத் திணைகள்லயும் அப்பப் போர் நடந்திருக்கு.
குழலி: ஆமா சுடர். கால்நடைகளைக் கைப்பத்துறது, காட்டு வளங்களைக் கொள்ளையடிக்கிறது, நாட்டுக்குள்ள மதிலைக் கைப்பத்தி செல்வத்தைத் தமதாக்குறது, கடல் பகுதியிலயும் எதிர் எதிரா நின்னு படை வலிமைய நிரூபிக்கறதுன்னு எல்லா நிலங்கள்லயும் போர்கள் நிகழ்ந்திருக்கு. இன்னைக்கும் எரிபொருள் வளத்துக்காகப் பிற நாடுகள் மேல போர் தொடுத்துப் போற நாடுகள் இருக்கத்தானே செய்யுது.
சுடர்: ஔவையார் போர் வேண்டாம்னு சொல்லித் தூது போனதாகப் பாட்டு இருக்குல்ல.
குழலி: ஆமா சுடர். போர் எல்லாக் காலத்துலயும் துயரத்தைத் தானே கொடுத்திருக்கு.
சுடர்: குழந்தை போராளின்னு ஒரு புத்தகத்தைப் பத்தி அப்பா சொல்லிட்டிருந்தார். நாளைக்குப் பேசுவோம். படிக்கணும். கிளம்புறேன்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com