

எனது மகன் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான். அவனுக்கு சிறு வயது முதல் விமானி ஆக வேண்டும் என ஆசை. அதுவும் விமானப்படையின் போர் விமானம் ஓட்ட வேண்டும் என்பதில் வேட்கையோடு இருக்கிறான். அதற்கு பேட்டரி டெஸ்டு உண்டு என்கிறான் அது பற்றி கூறுங்கள்?
- முத்துச்சாமி, காங்கேயம்.
தங்களின் மகன் இந்திய விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கத்திற்கு ஒரு சபாஷ். இந்திய விமானப்படையில் விமானியாக மட்டுமல்ல ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றில் உள்ள விமான பிரிவுகளில் உள்ள விமானங்களை ஓட்டுவதற்கு ஒரு தேர்வு எழுத வேண்டும். ஆரம்பத்திலிருந்து சமீப காலம் வரை இந்த தேர்வு நடைமுறையிலிருந்தது. அதுதான் PABT எனப்படும் பைலட் பேட்டரி ஆப்டிட்யுட் டெஸ்ட் ஆகும். இத்தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டது.
1) INSB - இன்ஸ்ட்ரூமென்ட் பேட்டரி டெஸ்ட்
2) SMA - சென்சரி மோட்டர் அப்பாரட்டஸ் டெஸ்ட்
3) CVT - கன்ட்ரோல் வெலாசிட்டி டெஸ்ட்
முதலாவதாக INSB என்பது எழுத்துத் தேர்வாகும். மற்ற இரண்டும் (SMA, CVT) மிஷின் தேர்வாகும். INSB தேர்வு நேரம் 35 மணித் துளிகள் ஆகும். இதன் மூலம் ஒரு நபரின் விமானத்தில் உள்ள பல்வேறு உபகரணங்களை (மீட்டர்கள்) அடையாளப்படுத்தி அறியும் திறன் சோதிக்கப்படும்.
இதற்கான தேர்வாளர்களுக்கு போதிய விளக்கம் அதிகாரிகளால் வழங்கப்படும். இது தேர்வர்களின் கவனித்தல் மற்றும் அடையாளம் காணுதல் குறித்து அமையும். மற்ற இரண்டு தேர்வுகளும் முழுக்க முழுக்க மனம் மற்றும் கை, கால்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுளை அறியும் வகையில் நடத்தப்படும். இவை அடிப்படையில் கணினி விளையாட்டுகள் போன்றே இருக்கும்.
இத்தேர்வினை வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே ஒருவர் எதிர்கொள்ள முடியும். ஒரு முறை தோல்வி கண்டால் மறுமுறை எழுத இயலாது என்பதே முக்கிய நிபந்தனை ஆகும்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.