

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள உதய்பூர் அவ்வளவு எளிதாக நம்மைவிடவில்லை. உதய்பூர் அழகில் அங்கிருக்கும் ஒவ்வொரு இடமாக தேடி சென்று நேரத்தை செலவிட்டு வந்தோம்.
அன்போடும் பண்போடும் நம்மை அரவணைத்துக் கொண்டனர் உதய்பூர் மக்கள். அங்கு பெரும்பாலானோர் காலைஉணவாக சமோசாவையே எடுத்துக்கொண்டனர். சமோசாவை சாப்பிட்டு எப்படி இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. ஆனால் மத்திய உணவை பிரம்மாண்டமாக எடுத்துக்கொள்கின்றனர்.
காய்கறிகள், பழங்கள், லஸ்ஸி, இனிப்புகள் என ஒருவேளை உணவையே கலவையாக எடுத்துக்கொண்டனர். மகாராஷ்ட்டிரத்தில் நமக்குடீ எப்படி பிடித்துப்போனதோ, அதைவிடஅதிகமாகப் பிடித்திருந்தது உதய்பூர் டீ.என்ன தூள் எங்கு வாங்குகிறார்கள் என விசாரித்துக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக டீ இருந்தது.
உதய்பூர் உணவு மட்டுமல்ல, நகர வீதிகளும் அத்தனை அழகாகக் கட்டமைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான வீடுகளில் உதய்பூர் நகரத்துப் பாரம்பரிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதை சொல்லும். ஒரு ஓவியம் யானையைப் பற்றி இருந்தால், மற்றொரு ஓவியம் ராஜஸ்தான் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தன.
அதுபோலவே உதய்பூர் சூரிய அஸ்தமனம் பார்க்க பலர் வருகிறார்கள். உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று, மலைகளுக்குப் பின்னால் மறையும் சூரியனைப் பார்க்கவே பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து வரலாம் போல, அந்தளவு ரம்மியமாக இருந்தது.
உதய்பூரின் கைவினைப் பொருட்களுக்கு என்றே தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கைவினை செருப்புகள், கண்ணாடி வளையல்கள், மர பொம்மைகள், குந்தன் நகைகள், நீல மட்பாண்டங்கள் என பார்க்கும் அத்தனையும் வாங்கத் தோன்றும் அளவுக்கு அத்தனை அழகாக இருக்கும். உதய்பூரைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் ஜூலை மாதத்துக்குப் பிறகு செல்வதே சரியாக இருக்கும். இல்லையென்றால் வெயில் கொஞ்சம் வாட்டி எடுக்கும்.
உதய்பூரின் மச்லா மக்ரா மலையில் அமைந்திருக்கிறது மான்ஷபூர்ண கர்னி மாதா கோயில். மலை மீது இருக்கும் இந்த கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் இருந்தாலும், ரோப் காரில் செல்வதையே பலரும் விரும்புகின்றனர். ரோப் காரில் செல்லும்போது, கீழே தெரியும் காடுகளில் நூற்றுக்கணக்கான மயில்களின் நடனத்தை ரசித்துக்கொண்டே பயணிக்க முடிந்தது.
மலைமீது சென்று எட்டிப்பார்த்தால், உதய்பூர் நகரத்தின் மொத்த அழகையும் இங்கிருந்தே ரசிக்கலாம். ஏரிகளால் சூழப்பட்ட அரண்மனைகள், அரண்களாக நிற்கும் மலைகள், பிரம்மாண்டமான மாளிகைகள் என எந்த பக்கம் திரும்பினாலும் அழகாக இருந்தது உதய்பூர்.
உதய்பூரின் மற்றொரு சிறப்பு அகர் அருங்காட்சியகம். பழமை மீதும் பழங்கால பொருட்கள் மீதும் ஆர்வம் இருக்கும் யாரும் தவறவிடக்கூடாத இடம் தான் இந்த அருங்காட்சியகம். அதோடு மேவார் ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்களின் 250க்கும் அதிகமான கல்லறைகள் இங்கு தான் உள்ளன. கல்லறை என்றாலும் அதன் கட்டிடக்கலை பிரம்மாண்டமான முறையில் இருந்தது. இந்த கல்லறைகளைப் பார்க்க வெளிநாட்டினர் அதிகம் வருகிறார்கள் என்பது தான் ஆச்சரியமாக இருந்தது.
பதே சாகர் ஏரி, பிச்சோலா ஏரி, தூத் தலை ஏரி, ஜெய்சாமந்த் ஏரி என அழகாக பராமரிக்கப்படும் ஏராளமான ஏரிகள் அழகிலிருந்து யாராலும் தப்ப முடியாது. மாலை நேரத்தில் இந்த ஏரிகளின் கரைகளில் அமர்ந்துகொண்டு சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால், எவ்வளவு நேரம் போனாலும் தெரியவே தெரியாது.
இத்தனை நாட்கள் உதய்பூரில் இருப்போம் என்று நாங்களும் நினைத்துப் பார்க்கவே இல்லை. உதய்பூர் குறித்து இங்கு சொல்லி இருப்பதெல்லாம் கொஞ்சம் தான், நேரில் சென்று உணர்ந்தால் தான் உதய்பூர் அழகை மொத்தமாக உணர முடியும்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், கீழடி, கண்ணகி கோட்டம் உள்ளிட்ட தமிழ் பண்பாட்டு நிலப்பரப்புகளை ஆவணப்படம் பிடித்தவர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com