

புலிகளால் காடுகள் பாதுகாக்கப்படும்போது மழை வளம் அதிகரிக்கிறது. ஆசியாவில் உள்ள நீர் நிலைகளில் ஒன்பது முக்கியமான நீர் நிலைகள் புலிகள் வாழும் காடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. புலிகள் அழிவதால் காடுகள் பாதிப்புகுள்ளாகும்போது வறட்சி, வெள்ளப்பெருக்கு, மண் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உருவாகிறது.
உதாரணமாக தமிழ்நாட்டில் வைகை ஆறு மேகமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைகளில் இருந்தே உருவாகிறது. இந்த ஆறு மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அந்த மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் வைகை ஆற்று நீர் நிலைகளையே நம்பியே இருக்கின்றன.
புலிகள் காடுகளை பாதுகாப்பதால் நீர்நிலைகளும் வளமடைந்து, விவசாயத்துக்கு உதவி செய்து மனிதர்களுக்கு உணவளிக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் மேகமலைப் பகுதியில் ஏற்பட்ட காடுகள் அழிப்பும், புலிகள் அழிப்புமே இன்று வைகை ஆற்றின் நீரளவை குறைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கார்பனை கட்டுப்படுத்தும் புலிகள்: புலிகள் வாழும் காடுகள் மற்ற காடுகளை விட வளமையான மரங்களைக் கொண்டிருக்கும் என்பதால் காற்றில் கலந்துள்ள கார்பன் மாசைக் அதிக அளவு உறிஞ்சுக் கொள்கின்றன. இந்தியா பசுமைக் குடில் வாயுகளை வெளியிடுவதில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கிறது. \
இந்தியாவில் அதிகரித்து வரும் வாகனப் பயன்பாட்டால் வளிமண்டலத்தில் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. புலிகள் வாழும் காடுகள் அதிகரிப்பதன் மூலம் காற்றில் கலக்கும் கார்பனின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனால் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆயுதமாகவும் புலிகள் நிற்கின்றன. கார்பன் மாசு கட்டுப்பாடுக்காக ஒரு நாட்டின் அரசு செலவழிக்கும் நிதியும் குறைவதால் பொருளாதார அளவிலும் பலனளிக்கின்றன. இதுபோன்று பல்வேறு அதிசயங்களை புலிகள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தையும் எங்கோ காட்டில் ஒரு மூலையில் நடமாடிக் கொண்டிருக்கும் புலி செய்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், உலக அளவில் அவை அழியும் அபாய நிலையிலேயே இருக்கின்றன. பாதுகாப்பான சூழலில் வாழ்வதாக நினைக்கும் நாம் புலிகளைப் பற்றி ஏன்கவலைப் பட வேண்டும் என்று யோசிக்காமல், புலிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை காப்பதற்கான சிறியஅளவு பங்களிப்பையாவது செலுத்த வேண்டும்.
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com