

கதை எழுதுவதற்கான ஃபார்மலா பலருக்குப் பிடித்து விட்டதுபோல. பலரும் அதை வைத்து கதை எழுதியிருந்தீர்கள். கதைகள் பல வகைகளில் இருக்கின்றன அல்லவா? அதுபோல அதற்கான ஃபார்மலாக்களும் பல உள்ளன. இன்னொரு ஃபார்மலாவையும் பார்ப்போமா?
திரைப்படங்களில் கதை சொல்லும் முறைக்கும் ஒரு வழக்கம் வைத்திருந்தார்கள். கதை மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் அந்தக் கதையில் யார் யாரெல்லாம் வருவார்கள் என்பதை அறிமுகப்படுத்தி விட வேண்டும். அடுத்த பகுதியில், உருவாக்கிய கதாபாத்திரங்களுக்குள் ஒரு சிக்கல் அல்லது பிரச்சினையை ஏற்படுத்துவது. இறுதி பகுதியில் அந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பது. அவ்வளவுதான். எவ்வளவு எளிமையாக இருக்கிறது.
வடை சுடப்பட்ட ஃபார்மலா: இதையே நாம் எழுதும் கதைகளிலும் பின்பற்றலாம். எழுதப்படும் பெரும்பாலான கதைகள் இந்த ஃபார்மலாவைக் கொண்டவையே. ஏன் பாட்டி வடை சுட்ட கதையே இந்த ஃபார்மலாதான். முதலில் பாட்டி, வடை, காக்கா எனக் கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அடுத்து, வடையைத் தூக்கிச் செல்வது என்று பாட்டிக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அடுத்து, வடையைத் தூக்கிச் சென்ற காக்கா ஏமாறும் விதத்தில் நரி கதையின் உள்ளே வருகிறது.
இப்படி நீங்கள் படிக்கும் எந்தக் கதையையும் வகை பிரித்து பார்க்கலாம். அதுதான் கதை நகரும் போக்கு அல்லது கதை வடிவம் என்று சொல்கிறார்கள். சரி. கதாபாத்திரங்கள் அறிமுகம் அவர்களுக்குள் சிக்கல் தீர்வு இந்த ஃபார்மலாவில் ஒரு கதை உருவாக்கலாமா? அதற்கு முன் சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.
இதில் மூன்று பகுதிகள் இருக்கின்றன அல்லவா? அவற்றில் குறைந்தது இரண்டு பகுதிகளை வாசகர்கள் யூகிக்க முடியாத அளவு எழுத வேண்டும். அதாவது, பாட்டி, ஆடு, மாடு, சிங்கம், குரங்கு என எல்லா கதாபாத்திரங்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் இரண்டாம் பகுதியில் யாருமே யூகிக்க முடியாத புது சிக்கலை உருவாக்க வேண்டும். அந்தச் சிக்கலைப் படிக்கும்போதே அதற்கு என்ன தீர்வு வரும் என படிப்பவர்கள் ஒரு சில முடிவுகளை யூகித்திருப்பார்கள். ஆனால், நாம் அவர்கள் யூகித்ததை விட வித்தியாசமான முடிவை தர வேண்டும். அப்படி எழுதிவிட்டால் நிச்சயம் உங்கள் கதை சிறப்பான கதையாக மாறிவிடும். மூன்று பகுதிகளுமே வாசகர்கள் யூகிக்க முடியாத அளவு எழுதிவிட்டால் அது மிகச் சிறந்த கதையாக மாறிவிடும்.
ஒரு பெரிய்ய்ய்ய காடு! - நான் சமயபுரம் எஸ்.ஆர்.வி எனும் பள்ளியில் இந்த ஃபார்மலாவைச் சொல்லி கதை எழுதச் சொன்னேன். 50 மாணவர்கள் எழுதினார்கள். அவற்றில் சில அருமையான கதைகளாக இருந்தன. ஒரு மாணவர் மிகச் சிறிய கதையாக எழுதினார். அந்தக் கதையை உங்களிடம் பகிர்கிறேன்.
‘ஒரு பெரிய்ய்ய்ய காடு. அதில் ஒரே ஒரு புலி மட்டும் இருந்தது. அதனால் தனியாக இருந்தது. அது ரொம்ப ரொம்ப சோகமாக இருந்தது. என்ன சோகம்… ஏன் சோகம் என்று அந்தப் புலியைக் கேட்கக் கூட அந்தக் காட்டில் ஒரு விலங்குகூட இல்லை’.
இப்படியே தொடர்கிறது அந்தக் கதை. நான் சொன்ன ஃபார்மலா படி வருகிறதா என்று பார்ப்போம். கதாபாத்திரங்களான காடு, புலி பற்றிய அறிமுகம். அடுத்து தனியாக இருந்தது எனும் சிக்கல். எதற்காக அது தனியே இருக்கிறது என்ற கேள்வி வாசகர் மனதில் எழுகிறது. யாருமே யூகிக்க முடியாத இறுதிப் பகுதியாக அவர் இப்படி கதையை முடிக்கிறார்,
‘அந்தக் காட்டுல இருந்த எல்லா விலங்குகளையும் அந்தப் புலிதான் அடித்து கொன்று தின்றது’. படிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும் நல்ல முயற்சி என்று பாராட்டினேன். நீங்களும் இந்த ஃபார்மலா படி ஒரு கதை உருவாக்கிப் பாருங்களேன்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்;தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com