

காலாபானி சிறைச்சாலை மனிதர்களின் உயிரைப் பறிக்கும் ஒரு மாபெரும் தண்டனைச் சிறைச்சாலை. டாக்டர் திவான் சிங் என்பவரோ மனிதர்களின் உயிரைக் காப்பதைக் கடமையாகக் கொண்ட ஒரு மருத்துவர்.
இவர் "டாக்டர் திவான் சிங் காலாபானி" என அழைக்கப்பட்டார். மகத்தான மனிதர் ஒருவரின் பெயரில் கொடுஞ்சிறையின் பெயர் ஓட்டிக் கொண்டதேன் என்று கேட்கிறீர்களா? அதற்கு மெய்சிலிர்க்க வைக்கும்அவர் வரலாற்றை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாற்றில் முதன்முறையாக நாம், நம்மை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேய அரசுடன், ஜப்பான் அரசையும் எதிர்த்துப் போராடிய இந்த அதிசய மனிதரைப் பற்றித் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
படிப்பே உறுதுணை: டாக்டர் திவான் சிங் காலாபானி என்று பிற்காலத்தில் மக்களால் பெரும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட இவரது உண்மைப் பெயர் திவான் சிங் தில்லான். இவர் பிறந்தது 1897 மே மாதம் 12 அன்று பஞ்சாப் மாநிலத்தின் சியல்கோட் (தற்போதைய பாகிஸ்தான்) மாவட்டத்தில் உள்ள கலோசியன் கிராமத்தில் பிறந்தார்.
பிரசவத்துக்கு பிறகு இரண்டாண்டுகளில் தாய் இந்திர கௌர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் தந்தை சுந்தர் சிங்கும் ஒரு விபத்து காரணமாக உயிரிழக்க ஆதரவற்ற திவான் சிங், சித்தப்பா சோஹான் சிங் மற்றும் பாட்டியின் பராமரிப்பில்தான் வளர்ந்தார்.
பிறந்த அதே கிராமத்தின் அரசு பள்ளியில் ஆரம்பப் பாடங்களைப் படித்த திவான் சிங் தொடர்ந்து, அருகிலிருந்த டாஸ்கா நகரின் கிறிஸ்துவப் பள்ளி ஒன்றில் மேல்நிலை கல்வி பயின்றார். 1916-ல் மெட்ரிக்குலேஷன் கல்வியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து தனது வளர்ப்புத் தந்தை மற்றும் பள்ளி தந்த ஊக்கத்தால் 1919-ல் ஆக்ரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். படிப்பை முடித்தவுடன் 1921-ல் இந்திய இராணுவத்தில் உதவி மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
கீர்கி, ராவல்பிண்டி, அம்பாலா, நார்த் வெஸ்ட் ஃப்ரான்டியர் என பல இடங்களில் இராணுவ மருத்துவராகப் பணியாற்றிய திவான் சிங்கிற்கு ஒரு பக்கம் இயல்பாகவே நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நேசம் இருந்தது. இன்னொரு பக்கம் மொழி, இலக்கியத்தின் மீதும் தீராக்காதல் இருந்து வந்தது.
அதனாலேயே பணிநேரம் தவிர வெளியே மக்களுக்கு மருத்துவம் பார்த்ததோடு, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் கவிதைகள் எழுதுவதையும் கீர்த்தனைகள் பாடுவதையும் தொடர்ந்து செய்து வந்தார்.
இலவச சிகிச்சையும் தேசப்பற்றும்: இயல்பாகவே இரக்க குணமும், மனித நேயமும் கொண்ட மருத்துவரான திவான் சிங்கை அவர் படித்த கவிதையும், மொழியும் மேலும் நேசம் மிகுந்த மனிதராக மாற்றியிருந்தது. அதேசமயம் அவர் படித்து வந்த விடுதலைக் கவிதைகளோ அவரை தேசத்தின் விடுதலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தன.
ஒருமுறை தனது மாலைநேர கிளினிக்கிற்கு மருத்துவம் பார்க்கவந்த ஒரு ஏழை நோயாளி, அவருக்கு ஃபீஸ் தருவதற்காக அவரது மோதிரத்தையே திருடியதைப் பார்த்த டாக்டர் திவான் சிங், அன்றிலிருந்து தனது வைத்தியத்திற்கு நோயாளிகளிடம் பணம் பெறுவதையே நிறுத்திவிட்டார்.
ஒரு நல்ல மருத்துவராக நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்த அதேவேளையில், தன்னைத் தேடி வருபவர்களிடையே தேசபக்தியைப் பற்றியும் சொல்லிக் கொண்டே இருந்தார் திவான் சிங்.
இதேசமயத்தில் மறுபுறம் தேச விடுதலைப் போரும் தீவிரமாகிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ஒருமுறை யதேச்சையாக காந்தியடிகளின் மேடைப் பேச்சைக் கேட்க நேரிட்ட திவான் சிங், தனது பணி நேரம் தவிர மற்ற சமயங்களில் தன்னை சுதந்திர இயக்கத்தில் ஈடுபடுத்தி, பங்கெடுத்துக் கொள்ளவும் ஆரம்பித்தார்.
அப்படி ‘ஒத்துழையாமை இயக்கத்தில்' முழுமையாகப் பங்கெடுத்தார் டாக்டர் திவான் சிங். வழக்கத்திற்கு மாறாக வெளிநாட்டு உடைகளைத் தவிர்த்து, காதி உடைகளை மட்டுமே அணிந்து மருத்துவப் பணிக்கு அவர் வருவதைக் கவனித்த ஆங்கிலேய அரசு அவரை லாகூருக்கு பணிமாற்றம் செய்தது.
(திவான் சிங்கின் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com