வெள்ளித்திரை வகுப்பறை 11: வெற்றிடங்களை நிரப்புவது எப்படி?

வெள்ளித்திரை வகுப்பறை 11: வெற்றிடங்களை நிரப்புவது எப்படி?
Updated on
2 min read

வேலை முடிந்து போர்ட்டர் வீடு திரும்புகிறார். வழியில் ஒரு கால்பந்து மைதானம். இளைஞர்கள் அங்கே ரக்பி எனப்படும் ‘அமெரிக்கக் கால்பந்து' விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். கைகளில் பந்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது மோதித்தள்ளுவர்.

பலரும் மேலே விழுந்து அமுக்குவார்கள். புதிதாகப் பார்ப்பவருக்கு மல்யுத்தச் சண்டை போலத்தோன்றலாம். இந்த விளையாட்டிற்கு அதிக அளவு உடல்வலிமை தேவை. முக்கியமாகக் குழுவாக ஒருங்கிணைந்து திட்டமிட்டுச் செயல்படுத்தலே இவ்விளையாட்டில் வெற்றியைப் பெற்றுத்தரும்.

போர்ட்டர், அமெரிக்கக் கால்பந்து விளையாட்டு வீரர். விளையாட்டைச் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே இருக்கிறார். அவர்மனதுள் ஒர் எண்ணம் தோன்றுகிறது. சீர்த்திருத்தப்பள்ளியில் இருப்பவர்களுக்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சி கொடுத்துஓர் அணியை உருவாக்கினால் என்ன? மறுநாள் மேல் அதிகாரிகளிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

நம்பலாமா, கூடாதா? - இங்கிருப்பவர்கள் குழுவாகப் பிரிந்து சண்டையிடுகிறார்கள். அதை நாம் தடுத்துக் கட்டுப்படுத்துகிறோம். அவர்கள் மனதில் ஓர் வெற்றிடம் ஏற்படுகிறது. நல்லவற்றை அங்கே நிரப்ப வேண்டும். இல்லை என்றால் அவர்களை நாம் இழந்து விடுவோம் என்று போர்ட்டர் தனது அதிகாரியிடம் கூறுகிறார்.

இந்தக் குழந்தைகள் சொல்வதைக் கவனிப்பது இல்லை. குழுவுடன் ஒத்துழைக்கும் மனநிலை இல்லை போன்ற சிக்கல்கள் இருப்பதாக அதிகாரி கூறுகிறார். இதற்கு தீர்வு உண்டு என்கிறார் போர்ட்டர். நீ கால்பந்து அணியைத் தொடங்க விரும்புகிறாயா? என்று அதிகாரி கேட்க, மிகச்சரி என்று போர்ட்டர் கூறுகிறார்.

அங்கே பார் என்று மைதானத்தைக் காட்டுகிறார் அதிகாரி. சிறார்கள், கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு வரிசையாகச் சென்று கொண்டு இருக்கிறர்கள். சரி... இவர்கள் யாரோடு விளையாடுவார்கள்? என்று அதிகாரி கேட்கிறார். பள்ளிகளில் உள்ள சிறந்த குழுக்களோடு விளையாடுவார்கள் என்று போர்ட்டர் பதில் சொல் கிறார்.

இங்கிருந்து இவர்களை எப்படி வெளியே அழைத்துச் செல்ல முடியும்? இவர்களை நம்பவே முடியாது. இது நடக்கவே நடக்காது என்று அதிகாரி மறுக்கிறார். சிறார்கள் கால்பந்து விளையாட்டு அணியாக வெளியே செல்வார்கள். அவர்களை முழுமையா நம்பலாம் என்று போர்ட்டர் கூறுகிறார். இது முடியவே முடியாத ஒன்று என்று அதிகாரி மறுக்கிறார்.

முடியாதவற்றை முயற்சிக்கலாம்: உங்களால் முடிந்தவைகளால் பலன் இல்லை எனும்போது முடியாதவற்றை முயற்சி செய்து பார்க்கலாம். அவர்களுக்கு விளையாட்டில் வெற்றி என்ற குறிக்கோளைத் தருவோம். அவர்களது வெற்றிடங்களை நிரப்புவோம். என்று போர்ட்டர் உறுதியுடன் கூறுகிறார்.

கால்பந்து அணி குறித்துச் சிறார்களிடம் பேசி ஓர் அணியை உருவாக்குகிறார். அருகிலிருக்கும் பள்ளிக்குச் சென்று கால்பந்துப் பயிற்சியாளரிடம், எதிர்வரும் போட்டித்தொடரில் எங்கள் அணியை விளையாட அனுமதியுங்கள் என்று கேட்கிறார்.

திருந்த வாய்ப்பு கொடுங்கள்: உங்கள் அணியில் இருப்பவர்கள் குற்றவாளிகளாச்சே! என்று பயிற்சியாளர் மறுக்கிறார். அவர்கள் குற்றவாளிகள் தான்ஆனால் சிறையில் இருப்பவர்கள் அல்ல. சீர்திருத்தப்பள்ளிச் சிறார்கள். அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் என்று போர்ட்டரும் அவரது நண்பரும் வேண்டுகிறார்கள்.

எங்கள் மாணவர்கள் சில ஆண்டுகளாகச் சிறப்பான பயிற்சிபெற்றவர்கள். அவர்களோடு சில வாரங்களில் பயிற்சி பெற்று உங்கள் அணி விளையாட முடியுமா என்று பயிற்சியாளர் கேட்கிறார். போர்ட்டரும் நிச்சயமாக எங்கள் அணியினர் விளையாடத் தயாராகிவிடுவார்கள் என்று கூறுகிறார்.

கால்பந்து விளையாட்டு என்றால் அப்படியே மைதானத்தில் இறங்கி விளையாடிவிட முடியுமா? பல்வேறு உடற்பயிற்சிகள், ஒட்டப் பயிற்சிகள் எனக் கடுமையான பயிற்சிகள். வியர்வை அருவியாகும் கடுமையான பயிற்சிகள். பயிற்சியின் இடைவேளையில் தண்ணீருக்காக அனைவரும் ஓடுகிறார்கள். தண்ணீருக்குப் பொறுப்பாக இருக்கும் சிறுவன் கத்துகிறான், "வரிசையா நில்லுங்க.அப்பதான் தண்ணீ தருவேன்!" பொறுப்பு தந்த மாற்றத்தைப் பயிற்சியாளர்கள் ரசிக்கிறார்கள்.

இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்ற சடங்கு விதிகள் மாறி இப்படி விளையாடு அப்படி விளையாடு என்ற உற்சாகப் பூக்கள் கில்பாட்ரிக்ஸ் முகாம் எங்கும்பூத்துக் குலுங்குகின்றன. வெளியே வேறு வேறு குழுக்களில் இருந்தவர்களிடையே முன்பகை காரணமான மோதல் முட்களும் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன. எவ்வளவு பிணக்குகள் இருந்தாலும் கடுமையான பயிற்சியால் குழு தயாராகிவிட்டது. நம்ம பசங்க அணியின் பெயர் கில்பாட்ரிக்ஸ் மஷ்டாங்ஸ்.

தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் அணியோடு முதல் போட்டி. எளிதில் வெற்றி பெற்று விடுவோம் என்று விளையாடத் தொடங்குகின்றனர் நமது அணியினர். நினைத்தது போல் இல்லை விளையாட்டு. அவசரமும் கோபமும் இருந்த அளவு ஒருங்கிணைப்பும் திட்டமிடலும் இல்லை. பந்தைத் தூக்கிப் போடுவதிலும் பழைய குழுப்பகையால் தடங்கல். ஒருகோல் கூட இல்லாமல் படுதோல்வி.

அவமானம் புதிதல்ல என்றாலும் இந்தத் தோல்வி புதுசு. அனைவரையும் திட்டவேண்டும் என்ற கோபத்தில் துடிக்கும் போர்ட்டர் சிறார்களின் முகத்தைப் பார்த்ததும் பேசாமல் அமைதியாகிறார். ஏனெனில் பலரின் கண்களிலும் கண்ணீர். தோல்வியால் ஏற்பட்ட அவமானத்தால் வருந்திய முதல் கண்ணீர்.இவர்களுக்கு எப்படி நம்பிக்கையைத் தருவது என்று யோசிக்கிறார்.

அடுத்த வாரம் பார்க்கலாம்.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், ‘கலகல வகுப்பறை’,‘சீருடை-ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்கள்’ நூல்களின் ஆசிரியர். தொடர்பு: artsiva13@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in