

உலகம் முழுவதிலும் பணக்கார நாடுகளைச் சேர்ந்த ஆட்சியாளர் களால், கறுப்பினத்தவரும், ஒடுக்கப்பட்ட வருமாகிய மக்கள் கடத்தப்பட்டு கடுமையான வேலை செய்ய அடிமைப்பட்டுக் கிடந்ததும், தண்டனைக்கு ஆளானதும் உலக மக்கள் அறிந்தவையே. உலகத்திலேயே ஆப்பிரிக்க மக்கள் உடலுழைப்பில் கெட்டிக்காரர்கள். அமெரிக்கா போன்ற வசதிபடைத்த நாடுகளைச் சேர்ந்த நிலவுடைமையாளர்கள், தங்கள் நிலங்களை செழுமைப்படுத்தவும், விவசாய வேலைகளைச் செய்யவும் உடல் வலுவில் சிறந்த மக்களை விலைக்கு வாங்கினர் அல்லது, அடிமையாகக் கடத்திச் சென்றனர்.
ஆப்பிரிக்க நாட்டில் அடிமைகளாக கடத்திச் செல்லப்பட்டவர்கள், தங்கள் உடல்வலுவின் காரணமாகவே சுதந்திரம் பெற்றுமீண்டும் தங்கள் தாயகமான ஆப்பிரிக்காவை அடைந்த வீரக்கதையை, உணர்வின் நெகிழ்ச்சியை சொல்லும் கதையேபச்சை வைரம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவிய கரோனாதொற்று போல, அதற்கு முன்பாக எபோலா எனும் வைரஸ் தொற்றுநோயால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். லட்சக் கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். எபோலா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த தம்பதியினரின் மகள் பெயர் பிளிகி. மருத்துவம் செய்துகொள்ள சென்ற பெற்றோர் திரும்பாததால் மனமுடைந்த பிளிகிக்கு மோராம்மா என்ற கருணை மிகுந்த பெண்மணியால் ஆதரவு கிடைக்கிறது.
பட்டுக்கூடு குழந்தைகள் காப்பகம்: மோராம்மா நன்கு படித்தவர். லண்டனில் பணிக்காகச் சென்றவர் தன் நாட்டு மக்களுக்காக சேவை செய்வதன் பொருட்டு நாடு திரும்பி, பட்டுக்கூடு எனும் குழந்தைகள் காப்பகத்தை நடத்திவந்தார். பிளிகி பெற்றோரின் நினைவிலிருந்து மீண்டெழ மோராம்மா முயன்று வெற்றிபெறுகிறார்.
மோராம்மாவின் பட்டுக்கூடு காப்பகத்திற்கு பொருள் பற்றாக்குறை ஏற்படுகிறது. தொடர்ந்து குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் ஒவ்வொரு குழந்தையையும் பொறுப்பான ஒருவர் கையில் ஒப்படைக்க முயல்கிறார் மோராம்மா.
தன் ஆசை மகள்பிளிகியின் நல்வாழ்வுக்காக, அவளுக்கான காப்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். இதை அறிந்த நாளில் பிளிகி, ஆப்பிரிக்கர்களின் தலைமுறை வழக்கமான நிலவறையின் அறைக்குள் ஒளித்துக் கொள்கிறாள். நிலவறையில் கண்டறியும் ஒரு ரூபாய் தாளில் இருக்கும் படம் பிளிகியை ஆச்சரியப்படுத்துகிறது.
இலவமரம்: படத்தின் உண்மைக்கதையை அறிய, தன்னை மாய்த்துக்கொள்ள நிலவறையில் ஒளிந்த பிளிகி,வெளிவருகிறாள். ரூபாய் தாளில் உள்ள படத்தின் கதையைக் கேட்கிறாள். சஹீது எனும் நாடக ஆசிரியர்தான் பிளிகியை தன் மகளாகத் தத்தெடுக்க விரும்பியவர்.
சஹீதுவின் வீட்டிற்கு மகிழ்ச்சியாக செல்கிறாள் பிளிகி. அங்கு சஹீதுவின் மற்ற தத்துப் பிள்ளைகளுடன் நாடகப் பயிற்சிகளை மேற்கொண்டும், விளையாட்டுடனும் பிளிகியின் பொழுது கழிகிறது. இதற்கிடையில் மோராம்மாவிடம் ரூபாய் தாளில் உள்ள ஓவியத்தின் வரலாறு கேட்டறிந்த பிளிகி, அந்த இடத்தைக் காண ஆவலாக இருக்கிறாள்.
அமெரிக்கர்களின் சதியால் அடிமையாகியிருந்த ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்களின் இக்கட்டான சூழ்நிலை ஒன்றில் உதவியதால் விடுதலையை பரிசாகப் பெறுகிறார்கள். விடுதலைப் பெற்ற ஆப்பிரிக்கர்கள் கடல்வழியாகப் பயணித்து சியாரோ லியோன் எனும் இடத்தில் கரையேறுகிறார்கள்.
அங்கு கரையோரம் இருந்த இலவமரத்தின் அடியில் தங்கள் கடவுளுக்கு நன்றி கூறி, சுதந்திர வாழ்வைவாழத் தொடங்குகிறார்கள். விடுதலைத் திருநகர் எனப் பெயரிடப்பட்டு ஓங்கி வளர்ந்திருந்த இலவமரத்தை நடுவாக வைத்து மக்கள் வாழும் பகுதியாகிறது.
அழகிய காட்சியமைப்பு: பிளிகியும் அவளுடைய சகோதர சகோதரர்களும் அமெரிக்காவில் தங்கள் முன்னோர்கள் அடிமைப்பட்டிருந்த வரலாற்றை சஹீது நாடக ஆசிரியர் உதவியுடன் நாடகமாக்கி நடிக்கிறார்கள். பிளிகி நிலவறையில் ரூபாய் தாளின் மையத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த தங்கள் இனத்தின் விடுதலைச் சின்னமான இலவமரத்தை காண்கிறாள்.
இலவமரத்தின் அடியில் விடுதலையைக் கொண்டாடும் நாடகத்தின் கதாநாயகியாக நடிக்கிறாள். தங்கள் வாழ்க்கையில் முன்னோர்கள் அடிமைப்பட்டு போராடிய நிகழ்வுகளை உணர்ச்சி பொங்க நடிக்கிறாள்.
கதையில் வரும் நாடகக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும். கதையின் மூலம் மூதாதையரின் வாழ்க்கை வரலாறுகளை தெரிந்து வைத்திருப்பதும், அந்தக் கதையை பாதுகாத்து வருவதும் இளைய தலைமுறையை பொறுப்புள்ளவர்களாகவும், சிந்தனையுள்ளவர்களாகவும் மாற்றும் என்பதை உணரலாம். அழகிய காட்சி யமைப்புகளுடன் விளக்கியிருக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் சிறார் எழுத்தாளர் கொ.மா.கோ இளங்கோ.