

இரவு நேரம் அண்ணனும், தம்பியும் பேசிக் கொண்டிருந்தனர். அம்மா நிலாவைக் காட்டி சாதம் ஊட்டினார்கள். ஆனால் இப்போது இந்தியா சந்திரயானை அனுப்பி நிலவிலே கால் பதித்துவிட்டது. நாம் தாத்தா ஊருக்கு போவது போல நிலவுக்கே போய் விளையாடலாம் என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே அப்பாவும் அம்மாவும் வீட்டிற்குள் நுழைகிறார்கள்.
பிள்ளைகள் இருவரையும் அழைத்து இனிப்பு வழங்கினார்கள். வித்யாதரன் இன்னைக்கு யாருக்கு பிறந்த நாள் என்று கேட்டான். சந்திரயான் நிலவில் கால் பதித்தது இல்லையா? தொழில்நுட்பத்தில் நம் நாட்டுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடத்தான் இனிப்பு தந்தேன் என்றார்.
ஆமாம் அப்பா தம்பி விளையாட அழைத்தான் நான் நிலவிலே விளையாடலாம் என்றேன். சரியா அப்பா என்று கேட்டான். வித்யாதரனைப் பார்த்து உண்மை தான்நீயும் படித்து விஞ்ஞானியாக வந்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கலாம் என்றார்.
அப்போது அம்மா, விஞ்ஞானிகள் உலகம் என்ற புத்தகத்தை வித்யாதரனுக்கு வழங்கி ஊக்குவித்தார். அன்றைக்கே புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். நாமும் வீரமுத்துவேல், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் வரிசையில் வரவேண்டும் என்று கனவு கண்டான். அப்போது தாயும் தந்தையும் நம் மகன் கண்டிப்பாக சாதிப்பான் என்று பேசிக் கொண்டது அவன் காதில் விழுந்தது.
அவன் மட்டுமல்ல நண்பர்களுடன் சேர்ந்து நிலவுக்கு போகும் நாள் கனியத்தான் போகிறது என்ற எண்ணத்தில் சந்திரயானை பார்த்துவிட்டோம், சரித்திரத்தை படைத்து விட்டோம் என்று பாடி கொண்டே விளையாட ஓடினான்.
இதைத்தான் வள்ளுவர்
மங்கலம் என்பமனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன் மக்கட் பேறு. - குறள்: 60
என்கிறார்
அதிகாரம்: வாழ்க்கை துணைநலம்
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்