

தன்னைச் சுற்றியுள்ள பொருட்கள் குறித்த அறிவு நிரம்பியவர்களாக குழந்தைகள் உள்ளனர். அதனால்தான், தெரிந்தவற்றில் இருந்து தெரியாத ஒன்றைக் கற்றுத்தருவது எளிதாகின்றது. எந்த ஒரு புதிய செய்தியையும் நேரடியாக கற்றுத்தருவது கடினம். ஏனெனில், ஆர்வமின்மை மந்தத்தன்மையை உருவாக்கும்.
ஒரு துறையில் ஆர்வம் இருந்தால், அத்துறைச்சார்ந்த அறிவை எவரும் எளிதில் அடைந்துவிட முடியும். சிறிய வழிகாட்டுதல் மற்றும் உதவி, முழுமையான அறிவை பெறச் செய்திடும். மாணவர்கள் பள்ளிக்கு வரும்முன்பே சுற்றுப்புறத்தின் வழியாகஅறிவு பெற்றவர்களாக திகழ்கின் றனர்.
குழந்தைகள் எதையும் கண்டு,உணர்ந்து கற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர். ஆகவே, எளிய அறிவியல் சோதனைகள் மூலம் அறிவியல் கருத்துக்களை விளக்குவது எளிது. அது அதிகப்படியான புரிதலை உருவாக்கும். அந்த புரிதலையும் விளையாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடியும் அல்லது வலுப்படுத்த இயலும். உதாரணத்திற்கு, ஸ்டார்ச் உள்ள பொருட்கள் அயோடின் சேர்க்கும் போது நீல நிறமாக மாறும்.
இதனை எப்படி விளக்குவது? ரொட்டி, பால், வெண்ணெய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தட்டில் வைக்க வேண்டும். பேனா மை நிரப்பியை கொண்டு ஒரு சொட்டு அயோடின் கரைசலை ஒவ்வொரு பொருட்களிலும் விட வேண்டும். ரொட்டி, உருளைக்கிழங்கு நீல நிறமாக மாறுவதைக் காணலாம். பால், மற்றும் வெண்ணையில் எந்த மாற்றமும் இல்லாமல், இயல்பாக இருப்பதைக் காணலாம். இதிலிருந்து ஸ்டார்ச் உள்ள உணவுப்பொருட்களை அயோடின் கரைசல் நீல நிறமாக மாற்றும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த முடியும்.
ஸ்டார்ச் என்பது ஒருவிதமான மாவுப்பொருள். தாவரத்தில் இருந்து பெறப்படும் பொருட்களில் இருக்கும். இந்த கருத்தை மாணவர்கள் புரிந்துவைத்துள்ளனரா என்பதை கண்டுபிடிக்கவும், அந்த கருத்தை ஒரு விளையாட்டு மூலம் வலுப்படுத்தவும், மதிப்பீடு செய்யவும் முடியும்.
அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு, பால், வெண்ணெய், பிளாஸ்டிக், பைபர் என எழுதப்பட்ட பதாகைகள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்க வேண்டும். அயோடின் என எழுதிய பதாகையை ஒருவருக்கு அணிவிக்க வேண்டும். வகுப்பறையின் நடுவில் ஒரு பெரிய வட்டம் வரைய வேண்டும். அதில் நீல நிறமாக மாறும் பொருட்கள் என எழுத வேண்டும்.
இப்போது ஆசிரியர் விசில் ஊதவேண்டும். அயோடின் பதாகை அணிந்துள்ள மாணவன் ஓடிச் சென்று ஸ்டார்ச் அடங்கிய பொருட்களின் பெயர்களை அணிந்துள்ள மாணவர்களைப் பிடிக்க வேண்டும். பிடிப்பட்டவர் வட்டத்தில் நிற்க வேண்டும். மீதி நபர்கள் ஆட்டத்தைத் தொடர் வார்கள்.
அவர் துரத்திச் சென்று எத்தனை நபர்களைப் பிடிக்கின்றார் என்பதில் இருந்து அவருக்கு ஸ்டார்ச் உள்ள பொருட்கள் எவை என்பதை அறிந்து வைத்துள்ளார் என்பதை அறிய முடியும். அவர் தவறாகப் பிடித்தால், அவருக்கு ஸ்டார்ச் அடங்கிய பொருட்கள் தெரியவில்லை என்று பொருள். ஆசிரியர் அம்மாணவனுக்கு மீண்டும் ஒருமுறை புரியும்படி சோதனையை நடத்திக்காட்ட வேண்டும்.
அப்படி சரியான நபரைத் துரத்திப் பிடிக்கும் போது, ஸ்டார்ச் அல்லாத பொருட்கள் அணிந்தவருடன், ஸ்டார்ச் உள்ள பொருட்கள் அணிந்தவர் ஜோடி சேர்ந்தால், அவரைப் பிடித்தாலும், ஆட்டத்தைத் தொடர்வார்கள். இதன்மூலம், குழந்தைகள் ஸ்டார்ச் அல்லாத பொருட்களையும் தெரிந்து கொள்வார்கள். அனைவரும் அயோடின் பதாகை அணிந்து விளையாடும் வரை விளையாட்டைத் தொடர வேண்டும்.
குழந்தைகள் விளையாட்டாய் அறிவியலைக் கற்றுக் கொள்வார்கள். வகுப்பறை விளையாட்டுத் திடலாகும்போது கற்றலும் இனிமையாகும். ஓடி ஆடித்திரியும் குழந்தைகளுக்கு வகுப்பறை பிடித்தமான இடமாகும்.நீங்களும் பிடித்தமான வராகிவிடுவீர்கள். முயன்று பாருங்கள்.
- எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.