உலகம் - நாளை - நாம் - 26: நடுக்கடலில் ஒரு ரத்த உறவு!

உலகம் - நாளை - நாம் - 26: நடுக்கடலில் ஒரு ரத்த உறவு!
Updated on
1 min read

எளிமையான கேள்வியோடு தொடங்குவோமா, நமது நெருங்கிய, ரத்த உறவு என்றால் எந்த நாட்டைச் சொல்லலாம்? பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை.

பரவாயில்லையே… தமிழ்நாட்டுக்கு அப்பாலும் சிந்திக்கிறீங்க. நீங்க சொன்ன எல்லாமே நமக்கு நெருங்கிய உறவுகள்தான். ஆனாலும் நமக்கு, இலங்கை இன்னமும் நெருக்கமான உறவு. ஈழம் என்றாலே நம் நெஞ்சில் ஈரம் சுரக்கிறது. அதுவும் நமது மண் அல்லவா. ஆமாம்… ஆமாம்...

இதுக்கு என்ன காரணம்..? அவங்க தமிழர்கள். சோழர்கள் ஆண்ட பூமி. ரொம்ப சரி. ஒரு காலத்தில் நமது ஆட்சியின்கீழ் இருந்த நிலம். இப்போது, முழு இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் பகுதியாக இருக்கிறது; அந்த நாட்டின் குடிமக்களாய் இருக்கிறார்கள் தமிழர்கள். இலங்கையும் நமது உறவுகளும் நன்றாக நலமாக இருக்கட்டும். வாழ்த்துவோம்.

சிலோன் ரேடியோ கேட்டீரா?: நல்லது. இலங்கை என்று நாம் கூறும் இந்த நாடு, சிங்கள மொழியில் ‘லங்கா’ எனப்படுகிறது. இதற்கு முன்னர் ‘சிலோன்’ என்று பரவலாக அழைக்கப்பட்டது. சிலோன்ரேடியோ மறக்க முடியுமா? சரியா சொன்னீங்க. தமிழ்நாட்டுல மூலை முடுக்கெல்லாம் நம்முடைய முந்தைய தலைமுறை, சிலோன்ரேடியோவுல பாட்டு கேட்டு வளர்ந்தவங்கதான். நினைச்சுப் பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு. சரி. புவியியலுக்கு வருவோம்.

இலங்கை. இந்தியப் பெருங்கடலில் நமக்குத் தெற்கே உள்ள தீவு நாடு. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இரண்டும், நமது நாடுகளுக்கு இடையே எல்லைகளாக இருந்து பிரிக்கின்றன. இல்லையில்லை, பாலமாக இருந்து நம்மை இணைக்கின்றன. சுமார் 3000 ஆண்டு வரலாறு கொண்ட இலங்கையில், 1,25,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

2.2 கோடி மக்கள் வாழ்கிறார்கள். சிங்களம் – தமிழ் இரண்டும் மக்கள் மொழிகளாக உள்ளன. சிங்களர், நாட்டின் தென் பகுதியிலும் தமிழர்கள் வட பகுதியிலும் மிகுந்து உள்ளனர். கடற்கரையை ஒட்டிய சமவெளிகள் நிரம்பி உள்ளன. மத்திய, தெற்குப் பகுதிகளில் மலைகள் காணப்படுகின்றன.

(இலங்கை தொடரும்)

- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in